தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா?
தீபாவளிக்கு அங்கும், இங்கும் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் நிறைய நடக்கும். ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை வித்தியாசமானதாக கொடுத்து, அசத்த வேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்காக, இதோ சில டிப்ஸ்...முதலில், யார் யாருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று, ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.பின், அவர்களுக்கு, என்னென்ன பரிசு கொடுத்தால், நன்றாக இருக்கும் என, குறித்துக் கொள்ளவும்.மொத்தமாக பரிசு கொடுக்க, ஆகும் செலவு எவ்வளவு என்று, முதலிலேயே, முடிவு செய்து கொள்ள வேண்டும்.ஆடைகளை கொடுப்பதாக இருந்தால், குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்தால் தான், அதை தைத்து, தீபாவளி அன்று, அணிந்து கொள்ள முடியும்.துணி வாங்குவதாக இருந்தால், யார் யாருக்கு, என்ன வண்ணம் பிடிக்கும் என்று, தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோன்று, துணியின் அளவு, அவர்களுக்கு சரியாக இருக்குமா என்று பார்த்து, அவரவருக்கு ஏற்றார் போல், வாங்க வேண்டியது அவசியம்.இதர பொருட்களாக இருந்தால், குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே, அவர்கள் கையில் கிடைக்கும் வகையில், வாங்கி அனுப்பவோ அல்லது நேரிலோ கொடுப்பதோ நல்லது.சமீப காலத்தில், உலர்ந்த பழங்களை கொடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். இவை, பலவித வடிவங்களில், கிடைக்கிறது. அவ்வாறு, அதை வாங்குவதை தவிர்த்து, நாமே உலர்ந்த பழங்களை, மொத்த விற்பனை கடையிலிருந்து வாங்கி, சிறிய சிறிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பெரிய ப்ளாஸ்டிக் டப்பாக்களில் நிரம்பி, வண்ண தாள் சுற்றி, ரிப்பன் கட்டி கொடுத்தால், செலவு குறையும்.வண்ண கிண்ணங்களில், பலவகை பழங்களை வைத்து, கண்ணடி தாள் மூலம், மூடி, அலங்கரித்து கொடுக்கலாம்.விதவிதமான சாக்லேட்டுகளை, பரிசாக செய்து கொடுக்கலாம்.தற்போது, நிறைய பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதால், இனிப்புகளை வயதானவர்களுக்கு கொடுப்பதை, தவிர்ப்பது நல்லது.உங்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, இனிப்பு கொடுக்க, அட்டை பெட்டி வாங்கி, அதில் போட்டுக் கொடுத்தால், உங்கள் பாத்திரம் அவர்கள் வீட்டில் மாட்டிக் கொள்ளாது. இல்லாவிடில், நாம் போய், நம் பாத்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கும்.உங்களுக்கு உதவுபவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு, நிச்சயமாக, உங்களால் முடிந்த பரிசோ அல்லது பணமோ கொடுக்க, மறந்து விடாதீர்கள்.சிலர், தன் கார் டிரைவரிடம் ஐம்பது அல்லது நூறு பரிசு பெட்டிகளைக் கொடுத்து, தன் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க சொல்வர். ஆனால், டிரைவருக்கு, ஒரு பாக்சைக் கொடுக்க மனசு வராது. ஆகவே, இதுபோன்று, மொத்தமாக ஒருவரிடம் கொடுத்தனுப்பும் போது, எடுத்துச் செல்பவருக்கு, முதலில், ஒரு பெட்டிகளைக் கொடுங்கள். பின், பாருங்கள் அவரது சுறுசுறுப்பை...பரிசு கொடுக்கும் போது, உங்கள் கைப்பட தீபாவளி வாழ்த்துகளை, ஒரு வண்ண அட்டையில் எழுதி, கையெழுத்திட்டு கொடுக்கவும். உங்கள் முழு விலாசம் மற்றும் போன் நம்பரை குறிப்பிடவும்.இதை பின்பற்றி பாருங்கள். இந்த தீபாவளி, உங்களுக்கு மட்டுமல்ல, பரிசு வாங்கியவர்களுக்கும், மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும். ***எஸ். சீதாலட்சுமி