உள்ளூர் செய்திகள்

முத்துக்குமார் சுவாமிக்கு அரோஹரா!

சென்னையிலுள்ள, தரும மிகு கந்த கோட்டத்தில் அருள் புரியும் முருகன் கோவிலில், ஒரு சமயம், அடியார்கள் எல்லாம் கூடி, 'நம் கோவிலுக்கு உற்சவ விக்ரகம் வேண்டும்...' என்று முடிவெடுத்தனர்.சிற்ப சாஸ்திர திறமைசாலிகளைக் கொண்டு, பஞ்சலோகத்தில், உற்சவ விக்ரகம் ஒன்றை வார்த்து முடித்தனர். பின், வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம், 'பளபள'வென மின்னி, ஒளி வீசியது. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு பிசிறுகள் இருந்தன.இதனால், அனைவரும் தலைமை சிற்பியைப் பார்க்க, அவர், 'இந்தப் பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன்...' என்று சொல்லி, விக்ரகத்தை நெருங்க, அடுத்த நொடி, உடலில் தீப்பற்றியதைப் போல துடிதுடித்து, அப்படியே தரையில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த சிற்பி, கண்களில் மிரட்சியோடு கைகளைக் கூப்பி, 'இந்த விக்ரகம் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது; இதை தூய்மையாக்க எனக்கு சக்தி இல்லை; என்னை விட்டு விடுங்கள்...' என்றார்.பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை வைத்து, வழிபாடு செய்யக் கூடாது என்பதால், விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.இரண்டு ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், காசியில் இருந்து சாம்பையர் என்ற துறவி, கந்த கோட்டத்திற்கு வந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின், ஆர்வத்தோடு உற்சவரைத் தேடி, அதுகுறித்து கோவில் பணியாளர்களிடம் கேட்டார். அவர்கள் நடந்ததை கூறினர்.கோவில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர், 'அந்த உற்சவரை பார்க்க வேண்டும்...' என்றார். அவருடைய தோற்றத்தில் கட்டுப்பட்ட நிர்வாகிகள், உற்சவர் இருந்த அறையைத் திறந்தனர்.அறைக்குள் நுழைந்த சாம்பையர், சில நிமிடத்தில் வெளியே வந்து, உடல் சிலிர்க்க, 'நீங்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள்... இக்கோவிலில் உள்ள மூலவருக்கு உள்ள அதே சான்னித்தியம், இந்த உற்சவ மூர்த்தத்திலும் உள்ளது. இவ்வாறு அமைவது வெகு அபூர்வம். தன்னை வழிபடும் அடியார்களுக்கு அளவிலா செல்வத்தை வழங்குவார் இந்த உற்சவர். இவரைத் தியானம் செய்யலாமே தவிர, இவர் திருமேனியில் எந்த விதமான ஆயுதங்களும் படக் கூடாது. இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன்...' என்றார்.நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்ற நிர்வாகிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.தனி அறையில், உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு, திரை போட்டு மறைக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து, வேத மந்திரங்களைச் சொல்லி, ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலகியதும் அனைவரும் பரவசத்தோடு, 'முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா...' எனக் கூறினர்.ஆறுமுகனின் அருளாடல் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்தில் தரிசிக்கலாம்! வள்ளலாருக்கும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும், பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி, நமக்கும் அருள் புரிவார்! பி.என்.பரசுராமன்திருவாசகம்!ஏசினும் யான் உன்னை ஏத்தினும்என் பிழைக்கே குழைந்துவேசறுவேனை விடுதி கண்டாய்செம் பவள வெற்பின்தேசுடையாய் என்னை ஆள்உடையாய் சிற்றுயிர்க்கு இரங்கிக்காய் சில ஆலம் உண்டாய்அமுது உண்ணக் கடையவனே!பொருள் : சிவந்த பவள மலையின் தோற்றமும், ஒளியும் உடைய சிவபெருமானே... என்னையும் அடிமையாக உடையவரே... சிற்றுயிர்களிடம் இரக்கம் கொண்டு, அவைகள் அமுதம் உண்ண வேண்டும் என்பதற்காக, கடும் நஞ்சான ஆலகால விஷத்தை உண்டவரே... சம்ஹாரத் தொழிலை செய்யும் தெய்வமே... அடியேன் உன்னை ஏசினாலும், புகழ்ந்து துதித்தாலும், யான் செய்த பிழைகளுக்காக, மனம் நெகிழ்ந்து வருந்துகிறேன். என்னை விட்டு விடாமல் எனக்கும் அருள் செய்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !