கலைவாணர் என்.எஸ்.கே., (6)
'கலைவாணரை பற்றி பலர், பல விதமாக கூறினாலும், உண்மையில், அவர் காந்தி பக்தர். எங்களுக்கு, எவ்வளவோ பணக் கஷ்டங்கள் இருந்த நிலையிலும், பிடிவாதமாக, 10,000 ரூபாய் செலவில், காந்தி நினைவு ஸ்தூபியை நாகர்கோவிலில் கட்டினார்...' என்று கூறும் மதுரம், தன் கணவரைப் பற்றி நினைவு கூர்கிறார்:கடவுளின் பெயரால், பொருட்களையும், பணத்தையும் கண்டபடி செலவிடுவதை மட்டுமே அவர் வெறுத்தார். மற்றபடி, தெய்வ பக்தி உள்ளவர். ஒருசமயம், நாடகங்கள் நடத்த கோல்கட்டா சென்றிருந்தோம். எங்களுடன், என்.எஸ்.கே.,யின் அன்னையும் வந்திருந்தார். அவருக்கு காசிக்கு போய் வர வேண்டும் என்ற ஆவல். அதை மகனிடம் தெரிவித்த போது, தாயின் ஆசைக்கு தடை போடாமல், நாடகக் குழுவினரோடு வந்திருந்த காளீஸ்வரன் என்பவரோடு, தன் அம்மாவை காசிக்கு அனுப்பி வைத்தார்.தூங்கும் போது, குறட்டை விடுவது அவரது வழக்கம். சில நாட்களில், குறட்டை சத்தம், பலமாக கேட்கும். இதனால், ஒருநாள், இதுபற்றி அவரிடம் புகார் செய்தேன். அடுத்த நாள் நள்ளிரவு; எதேச்சையாக கண் விழித்த நான், அவர் படுத்திருந்த நிலையை கண்டு திடுக்கிட்டுப் போனேன்.ஒரு துண்டால் வாயை மூடி, தலையை சுற்றி, கட்டியிருந்தார். அவரை எழுப்பி, 'என்ன இது... இப்படியா துணியைக் கட்டியபடி தூங்குவது...' என்று கேட்டேன்.அதற்கு, அவர், 'நீ தான் குறட்டை விடக் கூடாதுன்னு சொன்னாயே...' என்றார்.'இந்தாய்யா... குறட்டை விட்டாலும் விடுங்க; இப்படி துணி சுற்றும் கோரமெல்லாம் வேணாம்...' என்றேன்.அவருக்கு குற்றாலம் என்றால் தனி விருப்பம். 'வாழ்க்கை முழுவதும் அங்கேயே இருந்துவிட மாட்டோமா...' என்பார்.'சென்னையில் இத்தனை சினிமா ஸ்டுடியோக்களை கட்டியுள்ளனரே... எந்தப் புண்ணியவானாவது, குற்றாலத்தில் ஒரு ஸ்டுடியோவையாவது கட்டியிருக்க கூடாதா...' என்பார்.படத்திற்கோ, நாடகத்திற்கோ புதிதான விஷயங்களை யோசிக்க பெரும்பாலும் குற்றாலத்தில் முகாமிடுவது அவரது வழக்கம். அங்கே, ஆனந்தமாக குளித்து, அதீதமான கற்பனை வெள்ளத்தில், எத்தனையோ நாட்கள் திளைத்திருக்கிறார், என்று கூறியுள்ளார் மதுரம்.குற்றாலத்தில் தான், கலைவாணரது, 'கிந்தனார், ஐம்பதும் அறுபதும் மற்றும் வள்ளுவர்' போன்ற, அருமையான கருத்து குவியல்கள் பிறந்தன.கிந்தனார் கதா காலட்சேபம் அமைக்கப்பட்ட போது, கலைவாணருக்கும், மதுரத்துக்கும் சிறு தர்க்கம் ஏற்பட்டது. 'தர்க்கம் ஏற்பட்டால் தான், சில கருத்துகளுக்கு, புதுப் பொருள் காண முடியும்...' என்ற எண்ணமுடையவர், கலைவாணர். அதனால், மதுரம் துவங்கிய விவாதத்தை, அவர், முணுமுணுப்பின்றி வரவேற்றார்.'இந்தாய்யா... கிந்தனார்ன்னு பெயர் வைச்சுட்டீங்களே... ஆஸ்திகர்களின் மனதில், இது வேதனையை உண்டாக்குமே... ஏதோ புராணப் பெயரை கிண்டல் செய்வதாக நினைச்சுக்கப் போறாங்க; அந்தப் பெயர் வேணாம்...' என்றார், மதுரம்.'அட அசடே... கிந்தனார் என்பது, நான் கண்டுபிடித்த கற்பனை பெயரல்ல; நந்தனார் கீர்த்தனைகளை இயற்றிய, கோபால கிருஷ்ண பாரதியாரின் மனைவியே சொன்னது அது...' என்றார் கலைவாணர்.இப்படி ஏதாவது புதிதாக கிளப்புவார் என்று எதிர்பார்த்த மதுரம், 'களுக்'கென்று சிரித்து, 'அதென்ன புதுக்கதை...' என்று ஆர்வத்தோடு கேட்டார்.'அப்படிக் கேளு...' என்று, உற்சாக குரலில் சொல்லி, 'ஜம்'மென்று, கால் மேல் கால் போட்டபடி, சொல்லத் துவங்கினார், என்.எஸ்.கிருஷ்ணன்...'ஒருநாள், கோபாலகிருஷ்ண பாரதியார், சாப்பாட்டையும் மறந்து ஒரு கீர்த்தனையை மும்முரமாக எழுதியபடி இருந்தார். நேரம் ஆகிக் கொண்டே இருக்க, அவர் மனைவி அருகில் வந்து, என்ன எழுதுகிறார் என்று கண்ணோட்டம் விட்டாள். 'நந்தனார்' என்ற வார்த்தை, அவள் கண்ணில்பட, 'நந்தனாரும் ஆச்சு, கிந்தனாரும் ஆச்சு; எழுந்து சாப்பிட வாங்க...' என்று சொன்னாராம், அந்த அம்மாள். அதனால், இந்த, 'கிந்தனார்' நாமதேயம், அந்த அம்மாளுக்கே சொந்தம்...' என்றார்.இச்சமாதானத்தை கேட்டு, 'நீங்க பொல்லாத ஆளுய்யா...' என்றார் மதுரம். அதற்கு பின், கிந்தனார் காலட்சேபம் செய்வதற்கு முன், கிந்தனார் பெயர் பிறந்த வரலாற்றை சொல்லி விடுவது, கலைவாணரின் வழக்கம்.கலைவாணருக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கிடையாது; அறிவில் தான் நம்பிக்கை. அதை நிரூபிக்க, அவரது வாழ்க்கையில், ஒரு சம்பவம் நடைபெற்றது.ஒருநாள், சென்னை, கிண்டியில் நடக்கும் குதிரை பந்தயத்திற்கு சென்றிருந்தார், என்.எஸ்.கே., அவராக ஆசைப்பட்டு போகவில்லை; சினிமா உலக பிரமுகர்கள் இருவர், அவரை அழைத்து சென்றிருந்தனர். போன இடத்தில், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஓடும் குதிரைகளை பற்றிய ஜாதகங்கள், கலைவாணருக்கு தெரியாது. இருந்தாலும், ஒவ்வொரு பந்தயத்திலும், அவர் பணம் கட்டிய குதிரையே வெற்றி பெற்றது.அதை கண்டு, கூட வந்திருந்தோர், 'பாத்தாயா... அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாயே...' என்றனர்.உடனே, என்.எஸ்.கிருஷ்ணன், 'இது அதிர்ஷ்டமா...' என்று கேட்டு, தாம் வெற்றி பெற, கையாண்ட முறை பற்றி எடுத்துரைத்தார். ஒவ்வொரு பந்தயத்திலும் ஓடிய எல்லா குதிரைகளின் மீதும், அவர் டிக்கெட் எடுத்திருந்தார். அவைகளில், ஏதாவது ஒன்று, வெற்றி பெறத் தானே வேண்டும் என்று சொல்லி, அவர்களைச் சிரிக்க வைத்தார், கலைவாணர்.அன்று, கலைவாணரின் சட்டைப் பை நிறைய, வெற்றி அடையாத குதிரைகளின் மீது கட்டிய ரேஸ் டிக்கெட்டுகள் இருந்தன. வீடு திரும்பியதும், அவைகளை எடுத்து, சிறுவர்களுக்கு விளையாடக் கொடுத்தார். அதற்கு பின், அவர், கிண்டி பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை!எழுத்து மூலம், தமிழர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டியவர், எழுத்தாளர், கல்கி; அவர் என்.எஸ்.கே., பற்றி எழுதியது:பரோபகாரம் செய்வது போன்ற புண்ணியம், வேறு ஒன்றுமில்லை. பரோபகாரத்திலேயே மிக சிறந்தது எது என்று எண்ணி பார்த்தால், வாழ்க்கையில், சந்தோஷமே இல்லாமல், காலம் கழிப்போருக்கு மகிழ்ச்சி அளிப்பது தான். பிறரை மகிழ செய்யும் பரோபகாரம் செய்பவர்கள் சொர்க்கத்திற்கு போவர் என்பது உண்மையானால், கலைவாணர் கிருஷ்ணன், சொர்க்கங்களுக்குள் மேலான சொர்க்கத்தை அடைவார் என்று எழுதியிருந்தார்.'மனிதன் சிரிக்கவும், சிந்திக்கவும் தெரிந்த விலங்கு...' என்று பொதுப்படையாக சொல்வதுண்டு. எனினும், சிரிக்க கற்று கொண்டவர்கள், நம்மிடையே அதிகமாக இல்லை. சிந்திக்க தெரிந்தவர்களோ, இன்னும் குறைவு. அதனால் தான், சமூகத்தில் சிறுமைகளும், குறைபாடுகளும் மண்டிக் கிடக்கின்றன. இதை, நன்கு உணர்ந்தவர், கலைவாணர்.அதனால் தான், அவர், 'நல்லா குலுங்க குலுங்க சிரிக்கணும்; மனமார சிரிக்கணும்; லெனின் கிராடில் ஹிட்லர் சிரிச்சாரே, அப்படி இருக்க கூடாது. நான் வேண்டுவது, அந்தச் சிரிப்பல்ல...' என்றார்.— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம்பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.