வலிமை தாராயோ!
அழகிய காலை நேரத்தை, ரசிக்காதவர்கள் உலகத்தில் இருக்க முடியாது. அதுவும், வீட்டோடு சேர்த்து, ஆறு சென்டு நிலத்திற்குள், சதுரமாகிப் போன உலகத்தில் வாழ்பவர்களுக்கு, அதிகாலை சூரியன், அந்திவான நிலவு, யானை மேகம், குதிரை மேகம் என்று துவங்கி, மரத்தில் தங்கியிருக்கும் மைனாக்களின் கீச் கீச் ஒலியும், காக்கா கூட்டத்தின் இரைச்சலும், டிராபிக் போலீஸ் போல் கை காட்டும் விட்டில் பூச்சி, சாரை சாரையா செல்லும் எறும்புக் கூட்டங்கள், அங்கு எத்தனை பல்லிகள் வாழ்கின்றன என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அத்தனையையும் பல ஆண்டுகளாக மாரியப்பன் பார்த்துப் பழகிய உலகம்.இன்றும் அப்படி தான், அதிகாலையிலேயே எழுந்து விட்டான். கொல்லைப்புற வாசற்படியில் உட்கார்ந்திருந்தான். வழக்கம் போல், எதையும் ரசிக்காமல், தன் வலைக்கும், தரைக்கும் தாவிக் கொண்டிருக்கும் எட்டுக்கால் பூச்சியை, வெறித்துப் பார்த்த வண்ணம், யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் அம்மா விசாலாட்சி, வீட்டுக்குள் ஏதோ பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.'ஏலே மாரியப்பா... காபி, எவ்வளவு நேரமாக உன் பக்கத்துல இருக்கு. அத, குடிச்சிட்டு சீக்கிரமா கிளம்புடா...' என்று கத்தினாள்.இதை, காதில் வாங்காதவன் போல், எட்டுக்கால் பூச்சியை பார்த்தவாறே இருந்தான். இரண்டு கால்களும் நடக்க முடியாத மாரிக்கு, எட்டுகால் பூச்சியின் மீது, எப்போதும் ஒரே ஆச்சரியம் தான். அதன் கால்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து, ஒரு பூச்சிக்கு எட்டு கால்களை தந்த இறைவன், ஏன், தனக்கு மட்டும், நடக்க கால்கள் தரவில்லை என்று நொந்து கொள்வான். ஆமாம். இரண்டு கால்களும், பிறவியிலேயே, கணுக்காலில் இருந்து பாதம் உள்நோக்கி வளைந்தும், கால்கள் சற்று சிறுத்தும் இருக்கும். அவனுக்கு இப்போது முப்பது வயது. சிறு வயதில் எங்கு சென்றாலும், அவன் தாய் இடுப்பில், தூக்கி செல்வாள். அப்புறம், ஐந்து வயதுக்கு பின், தெருவோரம், காய், கீரை விற்பவர்களையும், அங்கு விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்ப்பதும், அவர்களை கூப்பிட்டு, தன் திண்ணையில் தாயம் விளையாடுவதும், கதை கேட்பதுமாய், 30 ஆண்டு ஓடிவிட்டது.இன்றும் அதே போல், சிறுவர்களின் விளையாட்டு சத்தம். ஆனால், வித்தியாசமாக கேட்டது.'அங்க இருக்கு பாரு... ஒரே போடா போட்டுரு. விடாதே. தலையை சிதறடிக்கணும்டா...' என்று, ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே, மாரியின் கொல்லைப்புற வேலி பக்கத்தில் வந்து விட்டனர்.மாரியப்பன் யோசனை கலைந்து, “என்னடா ஆச்சு?” என்று கேட்க,“அண்ணே... காலைல எந்திரிச்சதும் இந்த ஓணான் முகத்துல முழிச்சுட்டேண்ணே. ரெண்டு நாள் லீவு முடிஞ்சு, இன்னைக்கு ஸ்கூல் போறோம். இதப் பார்த்தாச்சா... இன்னைக்கே டீச்சர்கிட்ட அடிவாங்க போறோம். இத கொல்லாம விடக் கூடாது,” என்று சொல்லியபடி, இவர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டதைப் போல், தலையை ஆட்டிக் கொண்டிருந்த ஓணானின் மீது, கல்லை தூக்கி எறிந்தனர். அது, சளேரென அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறி, 'தப்பித்தேன், பிழைத்தேன்' என, தாவி மறைந்தது.அப்போதும் சிறுவர்கள் விடுவதாயில்லை. அதைத் தேடிக் கொண்டிருக்கும் போதே, எதிர்வீட்டு ஓட்டில், இரண்டு அணில்களை பார்த்து விட்டனர். கல்லைக் கீழே போட்டு விட்டு, சந்தோஷத்தில் குதித்தனர். ஆ... அணில் மாமா. இன்னும், ஒரு அணில் பார்த்தா போதும். டீச்சர் கிட்ட அடி வாங்க மாட்டோம் என்று கத்தியபடியே, இன்னொரு அணிலை தேடி, அடுத்த வீட்டு வேலி பக்கம் சென்றனர்.மாரியப்பனுக்கு, மேலே நின்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஓணானைப் பார்க்க பாவமாயிருந்தது. அம்மா மீண்டும் கத்தினாள்... “நேரமாச்சுடா. சீக்கிரம் வா.”ஆனால், அவனுக்கு எழுந்திருக்க மனதில்லை.இந்த உலகம், வலியவர்களின் கால்களுக்கிடையே பந்தாகக் கிடக்கிறதோ, உண்மை தான். பலசாலிகள் தான், நிலைத்து வாழ்கின்றனர்.விலங்குகளும் சரி, மனிதர்களும் சரி... சற்று வலிமை குறைந்தவையும், சாதுவானவையும் பலமுள்ளவர்களிடம் அகப்பட்டால் அவ்வளவு தான்.இப்படித்தான் தன் இனத்தாரையும் அடிமைப்படுத்தி விடுகின்றனர் இந்த மனிதர்கள். மாரியப்பனுக்கும் கூட இப்படித் தான்... அவன் வளர வளர, அவனைப் பற்றிய கேலியும், கிண்டலும் வளர்ந்து கொண்டே வந்தன. இதனால், அவன் தெரு வாசலில் கூட இறங்குவதில்லை. என்றைக்காவது அப்படி நடந்தால், 'என்ன... துரை இன்னிக்கு வெளியில வந்திருக்காரு. பொண்ணு பார்க்க போறீங்களாக்கும்...' என்று கேலி செய்யும் எதிர்வீட்டு அத்தையின், ஒரு வார்த்தை போதும்... அவன், மீண்டும் வீட்டுக்குள் முடங்கிப் போவதற்கு.பள்ளிக்கூடம் போக, சிறுவயதில் மிகுந்த ஆசை அவனுக்கு. ஆனால், பள்ளிக்கு செல்பவர்களை பார்க்கத் தான் முடிந்தது, போக முடியவில்லை.இப்படி, முடியவில்லை என்பது தான் அவன் வாழ்க்கையின் பாதி பக்கங்கள். ஓட முடியவில்லை; நீந்த முடியவில்லை; சைக்கிள் ஓட்ட முடியவில்லை; தெரு வாசலில் நிற்கக் கூட முடியவில்லை. இப்படி நீள்கிறது பட்டியல்.ஆனால், இன்று எங்கே கிளம்ப சொல்லி, அவன் அம்மா பறக்கிறாள். அதில் தான், மாரியப்பனின் உள்ளக் குமுறலுக்கலான விடை இருக்கிறது.ஒருநாள் மதியம், இரண்டு மணிக்கு, அம்மா பெரியய்யா வீட்டிலிருந்து வந்தாள். 'மாரியப்பா... பெரியய்யா இன்னிக்கு தான் ஒரு வாரம் கழிச்சி, ஊர்ல இருந்து வந்திருக்காரு. அம்மா, அவருக்கு புடிக்கும்ன்னு வத்தல் குழம்பு வச்சாங்க. பெரியய்யா வீட்டு குழம்புன்னா, நீ நல்லா சாப்பிடுவன்னு, கொண்டாந்தேன்'னு சொல்லிக் கொண்டே சாப்பாடு போட்டாள். 'பாவம்! பெரியய்யா பையனுக்கு உடம்பு சரியில்லையாம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம். ஒத்த ஆம்பள புள்ளைய இன்ஜினியர் படிக்க வச்சு, மெட்ராசுல ஒரு வருஷமா தான் வேலை பார்க்குது. பாவம். அய்யா முகத்தையும், அம்மா முகத்தையும் பார்க்கவே முடியலை...' என்றபடி, மீதமிருந்த சாதத்திற்கு, தண்ணீர் ஊத்தி மூடிவிட்டு, 'நான் போறேன். நீ வீட்ல பத்திரமா இருப்பா...' என்றபடி கிளம்பும் போது, வாசலில், பெரியய்யா காரில் வந்து இறங்குவதை பார்த்து, பதறிப் போனாள்...'ஐயா, சொல்லி அனுப்பியிருந்தால், நானே வந்திருப்பேனே. மாரிக்கு, சோறு போட்டுட்டு அங்க தான் கிளம்பிட்டுருக்கேன். நீங்க ஏன் இவ்ளோ தூரம்...' என்று சொல்லிக் கொண்டிருந்தவளிடம், 'ஒண்ணும் பதறாதே... நமக்கு தேவைன்னா நாம தான் தேடிப் போகணும். வீட்ல சரியா பேச முடியாதுன்னு தான் இங்க வந்தேன்...' என்று, திண்ணையில் துண்டை விரித்து உட்கார்ந்தவர், 'நீயும் உட்காரு...' என்று விசாலாட்சியை பல முறை சொன்ன பின் தான், வாசற்படியில், கீழே இறங்கி, உட்கார்ந்தாள்.'விசாலாட்சி, நீ, எனக்கு ஒரு உதவி செய்யணும். உங்கிட்ட கேட்க சங்கடமா தான் இருக்கு. பலமுறை யோசிச்சு. வேற வழியில்லாம இப்ப இங்க வந்தேன். நான் கும்புடுற காளியாத்தாவா உன்ன நினைக்குறேன். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத...' என்றவரின் கண்களில், கண்ணீர் மளமளவென கொட்டியது.விசாலாட்சி வேகமாக எழுந்து, 'ஐயா, மூத்தவனுக்கு பதினோறு வயசு இருக்கும் போதே, அவுக அப்பா போயிட்டாரு. அதுக்குப்புறம், அவரு, உங்க வீட்ல வேலை பார்த்தத மனசில வச்சு, எனக்கு வேலை குடுத்து, என் குடும்பத்துக்கு சோறு போட்டு, என் மவன் ராசுவுக்கும், மகளுக்கும் கல்யாணம் செய்து வச்ச வரைக்கும், நீங்க இல்லன்னா முடிஞ்சிருக்குமா. சொல்லுங்கய்யா, நான் என்ன செய்யணும்...' என்று, விசுவாசமாக கேட்டாள்.'பதற்றப்படாத. என் மவனுக்கு கிட்னி பெயிலியர்ன்னு உனக்கு தெரியும். வேற கிட்னி வச்சா தான் பொழப்பான்னு டாக்டர் சொல்லிட்டாரு. எங்க ரெண்டு பேருக்கும் வயசாயிட்டுது. அவன் மாமனோட கிட்னி சேரலை. எங்கெங்கோ சொல்லி வச்சிருக்கோம்ன்னு ஆஸ்பத்திரியில சொல்றாங்க. ஆனா, இன்னும் கிடைக்கல. டயாலிசிஸ் பண்றாங்க. பத்து நாளா கஷ்டப்படுறான். பொறுக்க முடியாம தான் உங்ககிட்ட கேக்குறேன். உன் மவன் மாரியப்பனோட கிட்னிய தர முடியுமா...' தயங்கி தயங்கி கேட்டு விட்டார்.மேலும், 'உனக்கு என்ன உதவினாலும் செய்றேன். நாலு லட்சம் பணம் தர்றேன். பசு மாடு வாங்கித் தர்றேன். காலத்துக்கும் உன்ன, நான் மறக்க மாட்டேன்...' என்று, கண்ணீருடன் நின்றவரின் கால்களில், பொத்தென விழுந்தாள் விசாலாட்சி.'ஐயா, மன்னிச்சிடுங்க. இந்த பாவிகிட்ட, எங்க சாமியான நீங்க, கையேந்தி நிக்குறீங்க. ஆனால், நீங்களே சொல்லுங்க. ஒத்த புள்ள பெத்தாலும், பத்து புள்ள பெத்தாலும், மனசறிஞ்சு, அத கொல்ல மனசு வருமாங்கய்யா... அதுவும், மாரி என் வயித்துல பொறந்த மொதப்புள்ள. என்னை மலடி பட்டத்திலிருந்து காப்பாத்தின புள்ள. என் மவ, அவ வீட்ல இருக்கா. என் ரெண்டாவது மவன் ராசு, மாமியார் வீட்டு புள்ளையாயிட்டான். இவன் தாங்கயா என் மவனா, கடைசி வரை இருக்கப் போறான்... உங்க பையனோட துணிமணி, உங்க வீட்டு சாப்பாடு எல்லாம் குடுத்துருக்கீங்க. இப்ப, பதிலுக்கு என் மகனோட ஆயுளை கேக்குறீங்களே...' என்று, கதறி அழுதாள்.'மன்னிச்சிடு விசாலாட்சி... புள்ள பாசத்துல, புத்தி தடுமாறி கேட்டுட்டேன்...' என்று கூறி, கண்ணீருடன் காரில் ஏறி சென்றார் பெரியய்யா.'நல்லவேளை என் மவன் காதில இந்த சேதி விழுந்திருந்தா, அந்த உயிர் என்ன பாடுபடும்...' என்று புலம்பிக் கொண்டே, பெரியய்யா வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தவளுக்கு தெரியவில்லை, இவள் போட்ட சத்தத்தில், மாரியப்பன் வந்து அனைத்தையும் கேட்டு விட்டானென்று. மாரியப்பனின் இதயம் நொறுங்கி விட்டது. ஏதேதோ நினைத்து நொந்து போனான். அதுவும், பெரியய்யா கேட்டது தான் தாங்க முடியவில்லை.ஆனால், அன்று சாயங்காலம், அவன் தம்பி ராசு, வீட்டுக்குள் நுழைந்து, 'காச்மூச்' சென்று கத்தி, 'நாலு லட்சம் சும்மா வருமா, காலமெல்லாம் இவரு ராசா மாதிரி வீட்ல இருப்பாரு. அரசாங்கத்துல இருந்து வர்ற ஆயிரம் ரூபா கூட, வாங்க முடியாதுன்னுட்டான். கால காட்டி பிச்ச எடுக்குற மாதிரி, இவருக்கு மட்டும் இருக்குதாம். வாங்குறவனல்லாம் மனுஷனில்லை...' அப்படி இப்படின்னு திட்டி தீர்க்க, விசாலாட்சியும், பதிலுக்கு மகனிடம் சண்டையிட்டாள்.முடிவில், ஒரு திடமான முடிவோடு, மாரி குறுக்கிட்டு, 'எனக்கு, சம்மதம்ன்னு ஐயாகிட்ட சொல்லிடுங்க...' என்றான்.அம்மா தடுத்தும் கேட்கவில்லை. 'பெரியய்யா நல்லவரு. அவருக்காக, நம்மால இந்த உதவி தான் செய்ய முடியும்ன்னா எனக்கு சந்தோஷம்மா...' என்று சொல்லி விட்டான்.இப்போது, அதற்காக தான், ஐயா வாங்கி தந்த புது சட்டை, பேன்ட்டுடன் பெரியய்யாவின் காரில் ஏறி, விசாலாட்சியும், மாரியும் சென்று கொண்டிருக்கின்றனர் சென்னையை நோக்கி.இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதல் முறை. அவனுக்கு வழியில் பார்ப்பது எல்லாம் புதிதாக இருந்தது. ஒரு இடத்தில் வண்டி பெட்ரோல் போட நின்றது. என்ன ஆச்சரியம்! மாரியை போல் கால் சரியில்லாத ஒருவர், அங்கு கணக்குகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வருபவர்களிடம், உற்சாகமா பேசிக் கொண்டும், சுறுசுறுப்புடன் இருக்கும் தோரணையை பார்த்து, அவர் தான் முதலாளி என்று தெரிந்து கொண்டான். மாரிக்கு ஆச்சரியம். இப்படி நடக்குமா... வண்டி, சென்னைக்குள் சென்றது. பிளாட்பார ஓரத்தில், கண் தெரியாத ஒருவர், பொம்மைகள் விற்பதை பார்த்து, இன்னும் ஆச்சரியம். 'எப்படி, இவர் வீட்டிலிருந்து இங்கு வருவார்; எப்படி, வியாபாரம் செய்வார்; எப்படி வீட்டிற்கு திரும்புவார்' இது, அவனுக்கு புது அனுபவமாக இருந்தது.பெரியய்யா மகனுக்காக, சென்னையில் ஒரு சொந்த வீடே வாங்கி தந்திருக்கிறார். அங்கு சென்றதும், இன்னும் ஆச்சரியம். புதிதாக நான்கு பேரை சந்தித்தான்.அவர்கள் பெரியய்யாவிடம் வந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அங்கு உள்ளே சென்றதும், சாப்பிடுவதற்காக, சமைத்த பொருட்களையெல்லாம் எடுத்து வைத்து விட்டு, அப்பளம் பொரித்துக் கொண்டிருந்த லதாவை, அவர் அம்மா அழைத்ததும், அவளும் வந்து, பெரியய்யாவை நலம் விசாரித்தாள்.மாரியப்பனையும், அவன் அம்மாவையும் கூட விசாரித்தனர். “பெரியய்யா நீங்க வருவீங்கன்னு போன்ல சொன்னாங்க. நல்லா இருக்கீங்களா...” என்று, உருக்கமாக கேட்டனர்.சாப்பிட்டு முடித்த பின் விசாலாட்சி, ''பெரியய்யா இவங்க எல்லாரும் இங்க வேலை பார்க்குறாங்களா,” என்று கேட்க, “இல்ல, இதான் இவங்க வீடு,” என்று சொன்னதும், புரியாமல் விழித்தாள்.“ஆமாம். ஒருநாள் என் பையன் செல்வமும், அவன் நண்பர்களும் ரோட்டோர கடையில் சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப, இந்தப் பொண்ணு லதாவும், அவள் பெற்றோரும், பிச்சையெடுத்துகிட்டு இருந்தாங்க. என் பையன் காசு குடுக்க முற்பட, அவன் ப்ரெண்ட், 'இவங்களுக்கென்ன குறை. இவங்களுக்கு காசு குடுக்காத... ஒரு இளம் பொண்ணை வச்சி, நம்மகிட்ட இரக்கம் வரவச்சி, பணம் சம்பாதிக்குதுங்க. இந்த ஆளும், இந்த அம்மாவும் நல்லாதான இருக்காங்கன்'னு சொல்லி தடுத்திருக்கிறான். அங்க ஏற்பட்ட விவாதத்துல, 'இப்படி அவுங்க மேல அக்கறை இருக்கறவன்னா, உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி, வேலை போட்டுக்குடு...' என்று விளையாட்டாக சொல்ல, என் பையன் அழைத்து வந்து விட்டான்.“இவங்க, இங்க இருக்கறதால, நானும் கொஞ்சம் என் மகனைப் பற்றி பயப்படாம இருக்க முடியுது. லதாவோட அப்பா, முனியன் தோட்ட வேலை எல்லாம் பார்த்துப்பான். தெருவுல ஒரு பெட்டிக் கடை வச்சிருக்கான். இந்த லதா நல்லா சமைக்க கத்துக்கிட்டா. பக்கத்து தெருவுல, இரவு பள்ளியில் படிக்கிறா. இவ தம்பியும் ஸ்கூல் போறான்.“நம்ம ஊர் திருவிழாவுக்கு எல்லாரும் வர்றதா இருந்தது. அதுக்குள்ள செல்வத்துக்கு முடியாம போயிடுச்சி,” என்று சொல்லி, கண் கலங்கினார்.இப்போது, மாரிக்கு மிகவும் பெருமையாக இருந்தது... 'இவ்வளவு நல்ல மனம் படைத்த செல்வத்துக்கு தான், கிட்னி கொடுக்க போகிறோம்' என்று நினைத்தபடி, லதாவுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்தான். அங்கிருந்த நான்கு வாரமும், அவனுக்கு. புது அனுபவமாக இருந்தது. லதா, 'அண்ணா அண்ணா' என்று, அன்பாக கூப்பிட்டாள்.மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு போய், எல்லா டெஸ்ட்டும் எடுத்து, டாக்டரை பார்த்தாகி விட்டது. அங்கே செல்வத்தின் துணைக்கு, பெரியய்யாவின் மகளும், மருமகனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.ஒரு வாரம் சென்றதும், ஆபரேஷன் முடிந்து விட்டது. மாரி கண் விழித்துப் பார்த்தான். முதல்முறையாக, அவன் முகத்தில் மகிழ்ச்சி, பெருமை எல்லாம் குடியிருந்தது. ஆனால், ஆச்சரியம்... கால்களில் என்ன கட்டு என்று புரியாமல் விழித்தான்.“என் மருமகன், செல்வத்துக்கு கிட்னி கொடுத்துட்டாரு. அதுக்காக தான் துபாய்ல இருந்து வந்திருக்காங்க,” என்றார் பெரியய்யா.'அப்ப ஏன் எங்களை கூட்டிட்டு வந்தீங்க'ன்னு புரியாமல் பார்த்த மாரியிடம், “புள்ள மேல நான் எப்படி பாசமா இருக்கேனோ, அப்படித்தான் விசாலாட்சியும், தான் பெத்த புள்ள மேல பாசமாக இருப்பா. கூனோ, குருடோ எல்லாமே உணர்ச்சியுள்ள உயிர்கள்ன்னு புரிஞ்சுக்காம, அன்னைக்கு உன் வீட்ல வந்து பேசினதை நினைச்சு, எனக்கே வெட்கமா போயிடுச்சு. நான் இப்படி கேட்டது தெரிஞ்சா, என் மவன் நொந்து போயிடுவான். அவன் மனசு ரொம்ப பெரிசு. ஒரு தாயோட மனசை கஷ்டப்படுத்தின நானே, அவ மனச குளிர வைக்க நினைச்சேன்.“இப்ப உன் கால் வளைவு கொஞ்சம் சரி செய்யப்பட்டிருக்கு. இனி, நீ கொஞ்சம் கொஞ்சமா நடக்கலாமாம். இதயெல்லாம் சொல்லி கூப்பிட்டு இருந்தா, நீ வரமாட்டியோன்னு தான், சொல்லாம கூட்டி வந்தேன். இப்ப தான் மனசு நிம்மதியாச்சு,” என்று சொன்னவரை, நன்றியோடு கை கூப்பினான் மாரி.மூன்று மாதம் ஆன பின், அவன் தாய் மட்டும் ஊருக்கு போனாள். பிளாட்பாரத்தில் பொம்மை விற்பவர், பெட்ரோல் போடுபவர், இவர்களையெல்லாம் யாரும் கேலி செய்யாமலா இருந்திருப்பர். அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதில் அல்லவா, அவர்களின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.முதலில், நாம் நமக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான், நம்மை மதிப்பர் என்ற உண்மையை புரிந்து கொண்டான் மாரி. வேலியில் அடிவாங்கிய ஓணான், வேப்ப மரத்தின் உயரத்தில் ஏறி, நின்று கொண்டது. தண்ணீரில் அடி வாங்கிய தவளை, கரையில் நிற்பவர்களுக்கே, தண்ணீர் காட்டி விளையாடியது. பாதையில் கிடக்கும் கற்களையும், முற்களையும், உற்றுப் பார்த்து, பாறாங்கல்லா உறைந்து கிடப்பதை விட, ஊனத்தை மறந்து வேலை செய்வது மேல் என்பதை புரிந்து கொண்ட மாரி, செல்வத்துடனே தங்கிக் கொள்வதாக சொல்லி விட்டான். இன்று, அவன் உடலிலும், உள்ளத்திலும் ஊனம் என்பதை தூக்கி எறிந்து, நடக்கக் கற்றுக் கொண்டான்.இன்று, அவனும் முனியனின் கடை வியாபாரத்திற்கு செல்கிறான். இப்போது எல்லாரும் அவனை இயல்பாக பார்ப்பதாகவே தோன்றுகிறது.வலிமையும், பலமும் உடலைப் பொறுத்ததல்ல; அவரவர் உள்ளத்தை பொறுத்தது என்பதை புரிந்து கொண்டான் மாரி.தி.கற்பகம்வயது: 26, சொந்த ஊர்: சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஏரியூர். கல்வித் தகுதி: செவிலியர் பட்டப்படிப்பு. பள்ளி நாட்களில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். இவர் எழுதிய முதல் சிறுகதை யான இது, ஆறுதல் பரிசு பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறார். எதிர்காலத்தில் நிறைய எழுத வேண்டும் என்பதும், செவிலியர் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதும் இவரது லட்சியம். தன்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஊக்கப்படுத்துபவர், தன் தந்தையே என்று கூறுகிறார்.