உள்ளூர் செய்திகள்

இரும்பு கூண்டுக்குள் பிச்சைக்காரர்கள்!

சீனாவின், தெற்கு பகுதியில் உள்ள நான்சாங் என்ற இடத்தில், உள்ளூர் திருவிழாக்கள், அடிக்கடி கோலாகலமாக நடக்கும். சீனாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பார்வையாளர்கள், இங்கு வருவதுண்டு.திருவிழாவை காண வரும் பார்வையாளர்கள், பிச்சைக்காரர்களின் தொல்லை களுக்கு ஆளாவது, வழக்கமாக இருந்தது. பார்வையாளர்களை, துரத்தி துரத்திச் சென்று, பணம், உணவு பொருட்களை கேட்டு, தொல்லை கொடுத்து வந்தனர். பிடிவாதம் பிடித்த பிச்சைக்காரர்கள் சிலர், பிச்சை போடாதவர்களை, தகாத வார்த்தைகளில், திட்டித் தீர்ப்பதும் உண்டு. இதனால், வெளிநாட்டவர் மத்தியில், சீனாவின் பெருமைக்கு, தீங்கு ஏற்படுவதாக, சீன அரசு கருதியது.இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக, நான்சாங் நகர நிர்வாகம் சார்பில், தற்போது அதிரடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, திருவிழா சமயங்களில், விழா நடக்கும் இடத்துக்கு சற்று தள்ளி, கம்பிகளால் அமைக்கப்பட்ட கூண்டுகள் வைக்கப்படும். பிச்சை எடுக்க விரும்புவோர், இந்த கூண்டுக்குள், வரிசையாக அமர வேண்டியது தான். கூண்டுக்கு வெளியில், பிச்சை பாத்திரங்களை வைத்துக் கொள்ளலாம்.பிச்சை போட விரும்புவோர், கூண்டுக்கு அருகில் சென்று, பிச்சை போடலாம். எந்த காரணத்தைக் கொண்டும், திருவிழா முடியும் வரை, பிச்சைக்காரர்கள் கூண்டை விட்டு வெளியில் வரக் கூடாது என்பது, முக்கிய நிபந்தனை. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு மட்டும், சிறிது நேரம் வெளியில் வரலாம். மற்ற நேரங்களில், கூண்டுக்குள் தான், அமர்ந்திருக்க வேண்டும்.கூண்டை விட்டு வெளியில் வரும் பிச்சைக்காரர்களை, போலீசார் நன்கு, 'கவனித்து' அந்த ஊருக்கு வெளியே விட்டு விட்டு வந்து விடுவர். அப்புறம், அந்த பிச்சைக்காரர், ஊருக்குள் நுழைய முடியாது. இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் பிச்சைக்காரர்கள் மட்டுமே, திருவிழா சமயங்களில், ஊருக்குள் அனுமதிக்கப்படுவர்.நான்சாங் நகர நிர்வாகிகள் கூறுகையில்,'இந்த புதிய திட்டத்தால், பார்வையாளர் களுக்கு, பிச்சைக்காரர்களால், எந்த தொல்லையும் இல்லை. விரைவில், சீனா முழுவதும், இந்த திட்டத்தை அமல்படுத்தும், ஐடியாவும் உள்ளது...' என்கின்றனர்.ஆனால், மனித உரிமை ஆர்வலர்களோ, 'பிச்சைக்காரர்களை, இரும்புக் கூண்டுக்குள், விலங்குகளை போல், அடைத்து வைத்திருப்பது, கண்டிக்கத் தக்கது. அவர்களும், மனிதர்கள் தானே. பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்துவதற்கு, வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, இதுபோல், கூண்டுக்குள் அடைத்து வைப்பது, மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல்...' என, போர்க்கொடி தூக்கியுள்ளனர். ***என். நேகாஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !