பிட்ஸ்(ஸா)
மறைந்த கர்நாடக இசைப் பாடகர், ஜி.என்.பி.,யின் பாட்டு என்றால், எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டு மட்டுமல்ல, அவர், 'கிராப்' மீதும் எனக்கு ஒரு கண். நானும் சலூனில் எத்தனையோ தொழில் வல்லுனர்களிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். 'ஜி.என்.பி., ஸ்டைலில் வெட்டுப்பா...' என்று! யாருக்குமே ஜி.என்.பி., ஸ்டைல் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை.என் பேரன் இந்த விஷயத்தில், எனக்கு ஒரு உதவி செய்தான். 'இந்தாங்க தாத்தா. இதை எடுத்துட்டு போய் சலூனில் காட்டுங்க...' என்று, பாடகர் ஜி.என்.பி., படத்தை கம்ப்யூட்டரிலிருந்து பிரின்ட் - அவுட் எடுத்துக் கொடுத்தான்.முடிவெட்டிக் கொள்ள சென்றபோது, ஞாபகமாக அதையும் எடுத்துச் சென்றேன். என் சிகை அலங்காரரிடம் அதைக்காட்டி, 'இவர் மாதிரியே வெட்டிவிடு...' என்றேன். சலூன்காரர் படத்தைப் பார்த்ததும் வியந்து, 'இந்த மகாராஜன் பாட்டுன்னா எனக்கு உசிருங்க; சகுந்தலையில பாடுவார் பாருங்க ஒரு பாட்டு, பிரேமையில் யாவும் மறந்தேனே...' என்று கூறி, நெகிழ்ந்து போனவர், அவருடைய பாடல் ஒன்றையும், அருமையாகப் பாடினார். ரசிக்கும்படி இருந்தது; என் மனம் நிறைந்தது. 'கிராப்' என்னவோ பழைய கிராப் மாதிரிதான் இருந்தது. வழக்கமாக கட்டிங்கிற்கு, 120 ரூபாய் கொடுப்பேன்; இந்தத் தடவை திருப்தியுடன், 200 ரூபாய் கொடுத்தேன்.— பாக்கியம் ராமசாமி.