உள்ளூர் செய்திகள்

முதலாளி (6)

'செம்மீன்' புகழ் ராமு காரியட் மற்றும் கன்னட டைரக்டர் சித்தலிங்கையா ஆகியோரின் சீரிய துணையோடு தான் டி.ஆர்.சுந்தரம் மலையாள மற்றும் கன்னட படங்களைத் தயாரித்தார். அடுத்தபடியாக டைரக்டரின் கவனம் இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. பாரதிதாசன் எழுதிய, 'எதிர்பாராத முத்தம்' எனும் காதல் ஓவியத்தை படமாக்க முடிவு செய்தார். இதற்கு டைரக்டராக தமிழைச் சரிவர அறியாத எல்லிஸ் ஆர்.டங்கனும். அவருக்கு உதவியாளராக கே.சோமுவும் நியமிக்கப்பட்டனர்.கலைஞர் அங்கே மாத சம்பளத்தில் வசனம் எழுத நியமிக்கப்பட்டார். 'குண்டலகேசி' என்ற காவியத்தைத் தழுவி அவர் எழுதியிருந்த நாடகம்தான், 'மந்திரிகுமாரி!' 'மந்திரிகுமாரி' எனும் நாடகத்தை படமாக்க, டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்து விட்டார். டைரக்டர் எல்லிஸ்.ஆர்.டங்கன். வசனகர்த்தா, மு.கருணாநிதி.சினிமா உலகின் சரித்திரத்திலேயே முதன்முதலாக போஸ்டரில், 'கதைவசனம் மு.கருணாநிதி' என்று விளம்பரப்படுத்தியதே, 'மந்திரிகுமாரி' படத்தில் தான். கருணாநிதி, மாடர்ன் தியேட்டர்சுக்குள் வசனகர்த்தாவாக நுழைந்தவுடன், அங்கே எழுத்துப் புரட்சி நடைபெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.'மந்திரிகுமாரி' படத்திற்கு யாரை கதாநாயகனாகப் போடுவது எனும் சர்ச்சை, திடீரெனத் தலையைத் தூக்கியது. அந்த சமயத்தில், எம்.ஜி.ஆர்., ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நடித்து வந்தார். அதே சமயத்தில், கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான, 'மருதநாட்டு இளவரசி' எனும் படத்திலும் அவர் நடித்திருந்தார். அந்த படத்தை எழுதி முடித்த பின் தான், கருணாநிதி சேலம் வந்தார்.டைரக்டர் எல்லிஸ்.ஆர்.டங்கனுக்கு, எம்.ஜி.ஆரின் தாடையிலிருந்த சிறுகுழி கண்ணை உறுத்தியது. அதனால், அவர் கதாநாயகனாக நடிக்க வேண்டாம் என்றார். கருணாநிதியோ, எம்.ஜி.ஆர்., நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார். இரண்டு பேரையும் சமாதானப்படுத்த, தாடையில் சிறிய தாடி ஒட்டப்பட்டது. டங்கன் சமாதானமடைந்தார். எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் விருப்பப்படி கதாநாயகன் ஆனார். கருணாநிதி மாடர்ன் தியேட்டர்சில் பெற்ற முதல் வெற்றி அது.கருணாநிதி, வீட்டில் அமர்ந்தும், ரிகர்சலில் அமர்ந்தும், தொடர்ந்து வசனங்கள் எழுதத் துவங்கினார். அவரது வசனங்களை, இடையில் ஒரு நபர் வாங்கி, அதில் சில திருத்தங்கள் செய்து, பின்னால் டி.ஆர்.சுந்தரத்திற்கு அனுப்பும் வழக்கத்தை மேற்கொண்டு இருந்தார். தன் வசனத்தில் இன்னொருவர் கை வைப்பதா? மாறுதல் வேண்டின் டைரக்டர் தானே சொல்ல வேண்டும். அதனால், டி.ஆர்.சுந்தரத்திடம் இதைப்பற்றிச் சொல்லி, குறைபட்டுக் கொண்டார் கருணாநிதி. அப்போதே டைரக்டர் உத்தரவு போட்டு விட்டார். கருணாநிதி எழுதும் வசனம், நேராகத் தன் மேஜைக்கு வர வேண்டும் என்று. இது எழுத்தாளராக அவருக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி.கருணாநிதி வசனங்களை எழுதுவதோடு நிற்காமல், நடிப்பைப் பற்றியும், கேமராக் கோணங்களைப் பற்றியும், மார்ஜின் பகுதியில் குறித்து வைப்பார். இதை, டி.ஆர்.சுந்தரம் மிகவும் பாராட்டினார். கருணாநிதியின் வசனங்களில் திருத்தம் செய்ய முயன்ற அந்த நண்பர் கோ.தா.சண்முகசுந்தரம். 'மேதாவி' எனும் புனைப்பெயரில், பல நவீனங்கள் எழுதியவர். சண்டமாருதம் பத்திரிகையில், சிலநாட்கள் உதவி ஆசிரியராக இருந்தவர். கருணாநிதிக்கு முன்பே, மாடர்ன் தியேட்டர்சுக்குள் வந்து விட்ட கண்ணதாசன், சில நாட்களில், சண்டமாருதம் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்ற அனுப்பப்பட்டார். அப்போது, ஆசிரியராக இருந்த, 'மேதாவி' இங்கே, கதை இலாகாவில் பணியாற்ற வந்துவிட்டார். அப்போது நடந்த சிறு பிரச்னை இது.'மந்திரிகுமாரி' படபிடிப்பு, மிக வேகமாக நடந்தது. அப்போதெல்லாம், கருணாநிதியும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றார். டைரக்டரின் அனுமதியுடன், சில நேரங்களில், வசனங்களை புதிதாகச் சேர்க்க வேண்டியோ, குறைக்க வேண்டியோ இருக்கும். அதை, கதாசிரியரே செய்யட்டும் என்று டைரக்டர் அபிப்பிராயப்பட்டார். மாடர்ன் தியேட்டர்சுக்கு இதெல்லாம் புதிய பழக்கம். இதை ஏற்படுத்தியவர் கருணாநிதி. வசனகர்த்தா தான், ஒரு படத்தின் ஜீவநாடி என்பதை புரிய வைத்தவர். வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு பேசும்போது, நடிப்பு தானாக வந்துவிடும் என்ற எண்ணத்தை, டி.ஆர்.சுந்தரம் மனதில், கருணாநிதி பதிய வைத்தார் என்றால் அது உண்மை.'மந்திரிகுமாரி'யின் மூலம், பிரபலமான கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தது எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல, வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரும் தான். ஏற்கனவே, கதாநாயக அந்தஸ்தைப் பெற்று இருந்த எம்.ஜி.ஆர்., மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது, 'மந்திரிகுமாரி'யின் மூலம்தான். நம்பியாரும் அவ்வாறே தலையை மொட்டை அடித்தும், அவர் ராஜகுருவாக நடித்ததையும் எப்படி மறக்க முடியும்?ஆக, மந்திரிகுமாரி மூலம் பலர், பிரபலமடைந்தனர் என்றால், அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ரிலீஸ் செய்யப்பட்ட தேதியிலிருந்து, அந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது எனலாம். இந்தப் படத்தின் பல பகுதிகள் எடுக்கப்படாமல் இருக்கும் போதே, எல்லீஸ்.ஆர்.டங்கன், ஏதோ அவசர வேலையின் காரணமாக அயல்நாடு சென்றுவிட, பாக்கி எல்லா வேலைகளையும் டி.ஆர்.சுந்தரம் தான் செய்தார். படம் சென்சாருக்குப் போன போது, சிறு பிரச்னைகள் தலைதூக்கின. அதையும் மிகவும் நன்றாக ஒழுங்குபடுத்தி, படத்தை ரிலீஸ் செய்தார் டி.ஆர்.சுந்தரம்.'மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் டைரக்டர் டி.ஆர்.சுந்தரம் படம் எடுத்தார்' என்று, ஒரே வரியில் சொல்லி விடலாம். ஆனால், அவர் எடுத்த படங்களின் பின்னால் உள்ள சில முக்கியமான, அதே சமயம், மிகவும் அவசியமான விஷயங்களை, இங்கே குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.டி.ஆர்.சுந்தரம், மறைந்த நடிகர் பி.யூ.சின்னப்பாவுக்கு புதுவாழ்வு கொடுத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 1930ம் ஆண்டின் பின்பகுதியில், 'சந்திரகாந்தா, மாத்ருபூமி மற்றும் யயாதி' எனும் படங்களில் நடித்த பின்னும், பி.யூ.சின்னப்பாவினால், திரை உலகில் நன்றாகப் பிரகாசிக்க முடியவில்லை. அதனால், மிகவும் வெறுப்படைந்த சின்னப்பா, தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கே திரும்பி விட்டார். சின்னப்பாவின் மனக்கிலேசத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட டி.ஆர்.சுந்தரம், அவரை மிகுந்த பிரயாசையுடன் சேலத்திற்கு வரவழைத்து, 'உத்தமபுத்திரன்' படத்தில் நடிக்க வைத்தார். படம் மிகவும் வெற்றி பெறவே, சின்னப்பா எனும் நட்சத்திரம் மீண்டும் உதயமானார்.— தொடரும்.ரா. வேங்கடசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !