உள்ளூர் செய்திகள்

போட்டி போடலாமா?

புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்... மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வீண் புகழ்ச்சி எதில் கொண்டு போய் விடும் என்பதை விளக்கும், நிகழ்வு இது:உலகையே காப்பாற்றக்கூடிய பகவான் வாசுதேவனாக (கண்ணனாக) அவதரித்திருப்பதாக, பவுண்ட்ரகன் எனும் மன்னனை, பலர் புகழ்ந்தனர்.அந்த புகழ்ச்சியாளர்களின் புகழ்ச்சியில் மயங்கினான், மன்னன்.'நாமே தான் எல்லாம்; தெய்வமே நாம் தான்...' என்ற எண்ணம், மன்னனின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. விளைவு...கண்ணனைப் போலவே, தானும் சங்கு - சக்கரம் முதலானவைகளை தரித்துக் கொண்டான்.மேலும், 'அனைவரையும் காத்து அருள் புரிவதற்காக அவதாரம் செய்திருக்கும் வாசுதேவன், நான் ஒருவன் மட்டுமே; வேறு எவனும் இல்லை.'ஆகையால், (வாசுதேவன் எனும்) உன் பெயரை மாற்றிக்கொள். அறியாமையால், நீ, என்னைப் போலவே சங்கு - சக்கரம் முதலானவைகளை வைத்துக் கொண்டிருக்கிறாய்; அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நீ என்னை சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், என்னுடன் சண்டையிட வேண்டும்...' என்று, கண்ணனையே எச்சரித்து, துாது அனுப்பினான்.மன்னன் உத்தரவை மேற்கொண்ட துாதனும், கண்ணனை தேடிப் போனான்.கிருஷ்ண பரமாத்மா, துவாரகையில், சபையில் இருந்த நேரம் அது. உக்ரசேன மன்னர் முதலானோரும் அங்கு இருந்தனர்.பலர் நிறைந்த அச்சபையில், பண்பாடே இல்லாமல் மன்னனின் வார்த்தைகளை அப்படியே சொன்னான், துாதன். கூடவே, 'பூ பாரம் தீர்ப்பதற்காக அவதரித்தவர் எங்கள் மன்னர்...' என்றும் கூறினான்.துாதன் சொன்னதை கேட்டதும், சபையில் இருந்த அனைவரும் பலமாக சிரித்தனர்.'துாதனே... உன் மன்னன், அவன் வைத்திருக்கும் பொய் சின்னங்களை இழந்து, தரையில் கிடக்கப் போகிறான். என்னை சரணடையச் சொன்ன அவன் உடம்பு, நாய்களுக்கு சரணமாக கிடக்கப் போகிறது என்று சொல்...' என்றார், கண்ணன்.தன்னை ஏவிய மன்னனிடம் அதை அப்படியே சொன்னான், துாதன். போர் மூண்டது.இரண்டு அக்குரோணி சேனைகளுடன் பவுண்ட்ரகன் இறங்க, அவன் நண்பனான காசி மன்னன், மூன்று அக்குரோணி சேனைகளுடன் உதவி புரிய வந்தான்.வந்த படைகள் மற்றும் பவுண்ட்ரகன் உட்பட அனைவரும், கொஞ்ச நேரத்திலேயே கண்ணனால் கொல்லப்பட்டனர்.வஞ்சப் புகழ்ச்சியில் மயங்கி, தற்புகழ்ச்சி பேசி, தெய்வத்தையே வென்று விட்டதாக பேசும் மனிதர்களுக்கு, தெய்வம், தான் யார் என்பதை காட்டிவிடும்.பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!இதயத்திலிருந்து, 108 நாடிகள் பிரிகின்றன. இதனால், இதயப்பூர்வமாக நாம் சொல்லும் கடவுளின் திருநாமங்களை, 108 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !