சினிமா ஜானகிராமன்!
'இதுவரை தமிழில், 7,000 திரைப்படங்கள் வந்துள்ளன. இதில், என்னிடம், 6,000 படங்கள் உள்ளன. 'அது மட்டுமல்ல, இந்த, 6,000 படங்களிலும் நடித்தவர்கள், இயக்குனர், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யார் என்ற விபரங்களை, துல்லியமாக, படங்களுடன் சேமித்து வைத்துள்ளேன்...' என்கிறார், ஜானகிராமன்.சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, ஜானகிராமனுக்கு, சிறு வயதில், ரேடியோவில் கேட்ட திரைப்பட பாடல்களும், பார்த்த, எங்க வீட்டுப் பிள்ளை படமும், சினிமா மீது, அவருக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது.சினிமா பற்றிய விபரம், குறிப்பு மற்றும் பாட்டு புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், உண்ணும், உறங்கும் நேரம் தவிர, இதற்காகவே செலவிட்டு வருகிறார். இவரது முயற்சிகளுக்கு, மனைவி சாந்தா துணையாக இருந்து வருகிறார்.பத்து பைசா தான், அன்றைய பாட்டுப் புத்தகத்தின் விலை. ஆனால், அதை, 'டிசைன் டிசைன்' ஆக வெளியிட்டுள்ளனர். அன்பே வா படப்பாடல் புத்தகம், அந்தக் கால, 'ரிக்கார்டு' போலவே இருக்கும். இதுபோன்ற வித்தியாசமான பாட்டுப் புத்தகத்தை, மெருகு குறையாமல் ஆயிரக்கணக்கில் வைத்துள்ளார்.ஆறாயிரம் சினிமாவை சேர்ப்பதற்கு, பெரிதும் சிரமப்பட்டு இருக்கிறார். சில சினிமாக்களை வாங்குவதற்காக, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார். பிரான்சில் இருந்த நண்பர்களிடம் சொல்லி, சில சினிமாக்களை பெற்றுள்ளார்.வீடியோ டேப், சி.டி., புளூ ரே போன்று, எந்த வடிவத்தில் சினிமா வந்தாலும், வாங்கி சேமித்துள்ளார். இன்றைய நவீன தொழில்நுட்பம் காரணமாக, அனைத்தையும், 'ஹார்ட் டிஸ்கில்' பதிவு செய்து வைத்துள்ளார்.கடந்த, 1931ல் வெளிவந்த, முதல் பேசும் படமான, காளிதாஸ் முதல், 2020ல் வெளிவந்த சினிமாக்கள் வரை, ஆண்டு வாரியாக தொகுத்து வைத்துள்ளார்.கதாநாயக நடிகர், நடிகை என்று இல்லாமல், நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர்கள் என்று, அனைவரது வாழ்க்கை வரலாறையும், எழுதி வைத்துள்ளார்.சினிமாவிற்கு முன், பின் நடந்த சுவாரசியமான தகவல்களையும் தொகுத்து வைத்துள்ளார்.சினிமா தொடர்பாக இவ்வளவு சேகரித்துள்ள இவர், இதுவரை, எந்த சினிமா கலைஞர்களையும் நேரில் சந்தித்ததில்லை.'சினிமா என்பது, பிரமாண்டமான காட்சி ஊடகம் என்றாலும், நாளைய வரலாற்று ஆய்வாளர்களுக்கோ, இன்றைக்கு சினிமா ஊடகப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கோ, சினிமா தொடர்பான ஆவணங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது.'நிகழ்கால, வருங்கால ஆய்வாளர்களுக்கு பயன்படட்டும் என்று, அந்தப் பணியை, என் சொந்த விருப்பத்தின்படி செய்துள்ளேன்.'இது அத்தனையையும் புத்தகமாக போட்டால், ஐந்து பகுதிகளுக்கு மேல் வரும்; பல லட்சம் செலவாகும். ஆனால், அதற்கு சக்தியில்லை. பொருளாதார ரீதியாக உதவுபவர்கள் கிடைத்தால், புத்தகமாக வெளியிடுவேன்...' என்று சொல்லும், ஜானகிராமனை தொடர்பு கொள்வதற்கான மொபைல் எண்: 8248624646. எல். எம். ராஜ்