உள்ளூர் செய்திகள்

பார்க்க வேண்டிய நகரம், பாங்காக்! (2)

'தாய்லாந்து நாட்டு தலைநகரான பாங்காக்கில், ஆறு வழி மற்றும் எட்டு வழி என, சாலைகள் பெரிதாக உள்ளன. ஆனால், கார்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்...' என, வழிகாட்டி கூறினார். போக்குவரத்து நெரிசல் எவ்வளவு இருந்தாலும், வாகனங்களில் செல்வோர், வரிசையாக சென்றனர். நம் ஊரை போல், வளைந்து வளைந்து, யாரும் உள்ளே புகுந்து செல்லவில்லை. அனைத்திலும் ஒரு ஒழுங்கை கடைப் பிடிக்கின்றனர்.நகரில் எங்கு பார்த்தாலும், உயர்ந்து நிற்கும் கட்டடங்களின் உயரமும், வடிவமைப்பும், வியப்பில் ஆழ்த்தின. சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருவதால், ஓட்டல்கள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு ஓட்டல்களும், 25 மாடிகளுக்கு மேல் உள்ளன.கட்டடங்களை பார்த்தபடி, காரில் பயணமானோம். முக்கிய இடங்களில், தாய்லாந்து மன்னர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, அனைவரும், மன்னருக்கு, மிகுந்த மரியாதை அளிக்கின்றனர். பாங்காக்கில் இருந்து, 60 கி.மீ., தொலைவில், சமுத் சோங்ரம் என்ற நகரில், 'மேயிக்லாங் ரயில்வே மார்க்கெட்' உள்ளது. இது, வேடிக்கையான சந்தை.இந்த சந்தை, மீட்டர் கேஜ் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கடைகளில், காய்கறிகள், பழங்கள், மீன்கள், கருவாடு மற்றும் இறைச்சி வகைகள் விற்கப்படுகின்றன. ரயில் வரும்போது, கடையை உள்ளுக்குள் இழுத்து, வழி விடுகின்றனர், வியாபாரிகள். ரயில் அப்பகுதியை கடந்ததும், மீண்டும் கடைகள் தண்டவாளத்திற்கு வந்து விடுகின்றன. அதை பார்த்தபடி, பாங்காக்கில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள, 'டேம்னோன் சதுக்' - மிதக்கும் சந்தைக்கு சென்றோம். இங்கு, நீளமான படகுகளில், காய்கறிகள், பழங்கள், கைவினைப் பொருட்கள், உணவு பண்டங்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.படகுகளை துடுப்பால் தள்ளி செல்கின்றனர். நதியின் மீதும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிலும், பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடைகளின் முன் படகை நிறுத்தி, நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.சில நேரங்களில், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, நெரிசல் ஏற்படுகிறது. பேரம் பேசி, குறைந்த விலைக்கு, பொருட்களை வாங்கலாம். பேரம் பேச, மொழி பிரச்னை அல்ல. பொருட்களின் விலையை, 'கால்குலேட்டரில் டைப்' செய்து காண்பிப்பர். அதே, 'கால்குலேட்டரில்' நாம் வாங்க விரும்பும் விலையை தெரிவிக்க வேண்டும். அவர், சிறிது விலையை குறைப்பார். இவ்வாறு பேரம் பேசுகையில், இருவரும் ஒரு விலையில் சந்திப்போம். அந்த விலைக்கு பொருளை வாங்கலாம். சந்தையை பார்வையிட்டு திரும்பினால், நம் படகு சவாரி புகைப்படத்தை, 'பிரேம்' போட்டு வைத்துள்ளனர். விரும்பினால், விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.சந்தையை பார்வையிட்டு, மீண்டும் பாங்காக் திரும்பினோம். இரவு, பாங்காக்கில் புகழ்பெற்ற, 'இந்திரா மார்க்கெட்' சென்றோம். இங்கு, துணி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்கும் கடைகள் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கான உடைகள், கை பைகள், பர்சுகள், நகைகள் ஏராளமான, 'டிசைனில்' உள்ளன. கைக்கடிகாரங்கள், சாக்லெட்டுகள் என, தேவையானதை வாங்கலாம். ஆனால், பேரம் பேசினால் மட்டுமே, விலையை குறைப்பர். அதன் அருகிலேயே, 'மேக்ரோ மார்க்கெட்' உள்ளது. இங்கும், ஏராளமான கடைகள் உள்ளன. இந்திரா மார்க்கெட்டை விட, இங்கு, பொருட்கள் விலை சற்று குறைவு. வியாபாரிகளில் பலர், தமிழ் பேசுகின்றனர். எனவே, பேரம் பேசி பொருட்களை வாங்கலாம்.தாய்லாந்தை பொறுத்தவரை, அசைவ உணவு சாப்பிடுவோருக்கு, பிரச்னை இல்லை. கடல் உணவு வகைகள், சிக்கன் போன்றவை தாராளமாக கிடைக்கிறது. ஆனால், சைவ உணவு சாப்பிடுவோர் நிலை சிரமம். இந்திய உணவு விடுதிகள் உள்ளன. அங்கு, வட மாநில உணவு வகைகள் அதிகம் கிடைக்கின்றன.பப்பாளி, மாம்பழம், கொய்யா, தர்பூசணி, வாழைப்பழம் போன்றவை, தாராளமாக கிடைக்கிறது. எனவே, சமாளித்துக் கொள்ளலாம்.இரவு, ஓட்டலுக்கு திரும்பினோம். பாங்காக்கை பொறுத்த வரை, பகலை விட, இரவு கொண்டாட்டம் தான் அதிகம். இரவு முழுவதும் நகரம் விழித்திருக்கிறது. அனைத்து கட்டடங்களும், மின்னொளியில் ஜொலிக்கின்றன. 'மசாஜ் பார்லர்'கள் அதிகம் உள்ளன. குறைந்தபட்ச கட்டணம், 500 ரூபாய். அதற்கு மேல், உங்களின் தேவைக்கேற்ப, கட்டணம் நிர்ணயிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையே புறப்பட வேண்டும் என்பதால், இரவு, 12:30 மணிக்கு துாங்க சென்றேன். காலை, 7:00 மணிக்கு, ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட சென்றால், 'ரெஸ்டாரன்ட்' நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் சூப், பிரட் வகைகளே கிடைத்தன. சிற்றுண்டி முடித்ததும், ஆயுத்தயா மாவட்டத்தில் உள்ள, அஜினோ மோட்டோ ஆலையை பார்வையிட சென்றோம். 'அஜினோ மோட்டோ' உப்பு, விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்படுகிறது; இதை சாப்பிட்டால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற உணர்வு, நம்மிடம் வேரூன்றி உள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல் என்பதை, அங்கு சென்ற பிறகு அறிய முடிந்தது. — தொடரும்.ம. அறம்வளர்த்த நாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !