உள்ளூர் செய்திகள்

சரிந்த சுவர்!

வேகமாக உள்ளே வந்து, கையிலிருந்த சூட்கேசை விட்டெறிந்து, சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள், மகள் சுபத்ரா.சத்தம் கேட்டு வந்த அம்மா சங்கரி, ''வாம்மா வா,'' என்றபடி, உள்ளே சென்று, ஒரு நொடியில் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள்.கணவனோடு ஏதோ மனஸ்தாபம் போல, ரொம்பவும் அழுது, கண்களும், முகமும் வாடிப் போயிருந்தது.சுவர் கடிகாரம், 9:00 மணியைக் காட்டியது. காலை, 6:00 மணிக்கு சென்னையில் புறப்பட்டிருந்தால், இப்போது தான் வந்து சேர்ந்திருக்க முடியும். ஆனாலும், இப்போது கேட்பது சரியாகாது என்று தீர்மானித்த சங்கரி, காபியை மகளிடம் கொடுத்து உள்ளே போனாள்.மகளின் எதிர்பாராத வருகையால், அவசர அவசரமாக வேலைகளை செய்தபோதும், மனம் மட்டும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கியது.பாலாற்றின் கரையோரம் உள்ள, வெம்பாக்கம் என்ற கிராமத்தில், சிவப்பிரகாசத்துக்கு சங்கரி வாக்கப்பட்டு வந்து, இன்றோடு, 43 ஆண்டுகளாகிறது. நிறைய நில புலன்களுடைய பாரம்பரியமிக்க விவசாய குடும்பம் என்பதால், எப்போதும் வேலை இருக்கும்.கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், ஒன்று விட்ட மைத்துனர் மற்றும் வருவோர், போவோருக்கு சமைப்பது, பரிமாறுவது என்று, மாறி மாறி ஓயாத வேலை தான். சில சமயம், வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டி வரும். என்றாலும் ஒருநாளும் அவளுக்கு சலிப்பே தோன்றியதில்லை.மாமனார் - மாமியார் காலம் முடிந்தது. ஒரே நாத்தனாரை திருவண்ணாமலையில், தொழில் அதிபர் மணிமாறன் திருமணம் செய்து கொண்டான். நாத்தனார் பிள்ளை, தமிழரசன் தான், இப்போது சென்னை, எல் அண்ட் டி கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான். அவனுக்கு தான் சுபத்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.தமிழரசனின் அப்பா - அம்மா, திருவண்ணாமலையில் இருப்பதால், சுபத்ராவிற்கு தனிக்குடித்தனம் தான்.சுபத்ராவிற்கு திருமணமாகி நான்காம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தது. ஒருவேளை குழந்தை இல்லை என்பதை குறையாக சொல்லி, தமிழரசன் அழ வைத்திருப்பானோ என்று நினைத்தவள், 'சே சே, அவன் அப்படிப்பட்டவன் இல்லை. இவள் தான் அவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும்...' என்று தீர்மானித்தபடியே, ஹாலுக்கு வந்தாள். டீபாயின் மேல் காபி, அப்படியே இருந்ததை பார்த்து, வேறு காபி போட்டு எடுத்து வந்து, ''இந்தா இதை குடி. கொஞ்ச நேரம், 'ரெஸ்ட்' எடுத்து, எப்பவேணா குளிச்சுட்டு டிபன் சாப்பிடு,'' என்றாள், சங்கரி.''அம்மா, நான் இனிமே அந்த வீட்டுக்கு போகப் போறதில்ல,'' என்றாள், சுபத்ரா.''என்ன இது சின்ன குழந்தையாட்டும்... எதாயிருந்தாலும் அப்பா வரட்டும்...'' என்று மகளை சமாதானப்படுத்தினாள், சங்கரி.''எனக்கு வெறுத்துப் போச்சும்மா. ஒரு வார்த்தை சந்தோஷமா பேசறதுக்கு கூட நேரம் இல்லாம, எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு... சென்னையில் இருக்கோம்ன்னு தான் பேரே தவிர, எங்கேயும் அழைச்சுட்டு போறதில்ல...''அது கூட பரவாயில்லை, முடியலேன்னு இதமா ஒரு வார்த்தை சொல்லலாமே... நேற்று இரவு, இப்படி இருக்கீங்களேன்னு சண்டை போட்டு, சாப்பிடாம படுத்துட்டேன். அப்பவும் அவர் கவலைப்படலை.''காலையில் எழுந்து பல் துலக்கி, அவர்கிட்ட சொல்லாம சூட்கேசை எடுத்துகிட்டு முன்னால இருக்கிற கடை பையனிடம், 'வீட்டம்மா, வெண்பாக்கம் போறாங்கன்னு சொல்லிடுடா'ன்னு, பஸ் பிடிச்சு வந்துட்டேம்மா,'' என்று கூறி அழுதாள்.காலை, 11:00 மணிக்கு போன் செய்து, சுபத்ரா வந்திருப்பதை உறுதி செய்து கொண்டான், தமிழரசன்.சிவப்பிரகாசம் வீட்டுக்கு வரும்போது, மதியம் 12:30 ஆகி விட்டது. ஹாலை ஒட்டிய அறையில் கட்டிலில் படுத்திருந்தாள், சுபத்ரா.''சுபத்ரா, தனியா வந்திருக்கா. உள்ளே துாங்கறா. கூப்பிடவா,'' என்றாள், சங்கரி.''என்ன சமாசாரம்ன்னு ஏதாவது சொன்னாளா,'' என்றார்.மகள் கூறியதை சுருக்கமாக சொல்லி, ''உப்பு பெறாத விஷயத்தையெல்லாம் பெரிசா நினைச்சு புலம்பிக்கிட்டிருக்கா,'' என, சங்கரி கூறியதும், சுபத்ராவுக்கு கோபம் கோபமாக வந்தது.'சரி, அப்பா இதற்கு என்ன சொல்லப் போகிறார்...' என்று, காதை கூர்மையாக்கினாள், சுபத்ரா.''அப்படியா... உப்பு பெறாத இதுக்கா இப்படி சண்டை போட்டிருக்கா,'' என, அப்பா கூறியதும், சுபத்ராவிற்கு சுருக்கென்றது.'சே, அப்பாவிற்கு கூடவா என் கஷ்டம் புரியவில்லை...' என்று எண்ணியபடியே, ஊஞ்சலில் வந்தமர்ந்தாள், சுபத்ரா.''வாம்மா, எப்ப வந்தே... என்ன ஆயிற்று, தனியா வந்தியாமே. ஒரு போன் பண்ணியிருந்தா, நானே வந்து அழைச்சுகிட்டு வந்திருப்பேனே,'' என, சிவப்பிரகாசம் கூறியதும், பொல பொலவென்று கண்ணீரை மட்டுமே பதிலாக்கினாள், சுபத்ரா.''சுபத்ரா, அழாதே. நீ வருத்தப்பட்டா எங்களால தாங்க முடியுமா. உனக்கு மனசு சரியாகற வரைக்கும் எங்க கூடவே இரு. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும். சொல்லாம வந்துட்டேன்னு, கவலைப்பட்டு மாப்பிள்ளை போன் பண்ணினதா அம்மா சொன்னா,'' என்றார்.''ம்ஹூம், ரொம்ப கவலை தான்,'' என்று வெடித்தாள், சுபத்ரா.மாலை, 4:00 மணி. இவள் வந்திருப்பது தெரிந்து, பக்கத்து வீட்டு நளினி பார்க்க வந்தாள். காபி குடித்த பின், தோட்டத்திலிருந்த மேடையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.''கணவர் வீட்டில், மாமனார், மாமியாருடன், கணவரை பிரிந்த நாத்தனார் என, இவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் அளவில்லாமல் இருக்கிறது. அது மட்டுமல்ல, சந்தேகப் பிராணியாக கணவன் இருப்பதும் பெரிய சித்திரவதையாக உள்ளது,'' என, புலம்பினாள், நளினி.நளினி கூறியதை கேட்டு, கணவனுக்கும், தனக்குமிடையே மனதிற்குள் கட்டியிருந்த முதல் தடுப்புச்சுவர் துாள் துாளாக சிதறி விழுவதை உணர்ந்தாள், சுபத்ரா.மறுநாள் சுபத்ரா எழுந்திருப்பதற்குள் வயலுக்கு சென்றிருந்தார், சிவப்பிரகாசம்.காபியை சுபத்ராவிடம் கொடுத்து, ''எதிர் வீட்டுக்கு போய், புனிதாவையும், அவள் பையன் கந்தனையும் டிபன் சாப்பிட வரச்சொல். மதியம் சமையல் எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லி வா,'' என்றாள், சங்கரி.சுபத்ராவை வரவேற்று, ''நீ எப்ப வந்தே... வா உட்கார்,'' என்றாள், புனிதா.அம்மா சாப்பிட வரச் சொன்னதை கூறினாள், சுபத்ரா.''வேண்டாம் சுபத்ரா... டிபன், சமையல் எல்லாமே ரெடி பண்ணிட்டேன். அம்மாவுக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லு,'' என்றாள், புனிதா.அந்த ஊர் அரசு பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றுகிறாள், புனிதா. இந்த ஊருக்கு வந்தபோது, ஒன்றரை வயது குழந்தையாக இருந்தான், கந்தன். கணவன், துபாயில் வேலை செய்வதாக கூறியிருந்தாள், புனிதா.கோடை விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு போய், புனிதாவும், கந்தனும் இரண்டு நாட்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.''அது சரி புனிதா, கந்தனோட அப்பாவுக்கு துபாயில் ஐந்து வருஷம் வேலைன்னு சொல்லியிருந்தியே, எப்போ வருவார்,'' என்று யதார்த்தமாக கேட்டாள், சுபத்ரா.புனிதாவின் கண்கள் கலங்கின. ஏதோ சாக்கு சொல்லி கந்தனை பக்கத்து வீட்டுக்கு அனுப்பினாள், புனிதா. ''என் கணவன் பிரபாகரன், பெருங்குடிகாரன். அதனால், தான் செய்து கொண்டிருந்த நல்ல வேலையை இழந்ததோடு, வேலைக்கும் செல்லாமல், குடிக்க பணம் கேட்டு இம்சைபடுத்துவான்.''இல்லாவிட்டால் அவன் வாங்கிய கடனுக்கு பணம் கேட்டு, என்னை அடித்து நொறுக்குவான். பொறுத்து பொறுத்து பார்த்து, படித்த ஆசிரியர் பயிற்சி கை கொடுக்க, பெற்றவர்களின் அனுமதியோடு போராடி, அவனிடமிருந்து பூரணமாக விடுதலை வாங்கி விட்டேன்.''மகனுக்காகவே உயிர் வாழ்கிறேன். நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு நம்பிதான் சொன்னேன். எல்லாரையும் போல கந்தனும், அவன் அப்பா துபாயில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறான், அவனுக்கு தெரியக் கூடாது,'' என்று விசும்பினாள், புனிதா.'இப்படி அக்கிரமகார ஒருவனா, சாதுவான புனிதாவுக்கு வாய்க்க வேண்டும்...' என்று நினைத்த சுபத்ராவின், மன கோட்டையில் கட்டியிருந்த, தமிழரசனுக்கு எதிரான இரண்டாம் தடுப்பு சுவரும், சடசடவென்று சரிந்து வீழ்ந்தது.அலுவலக வேலை தான் முதன்மையானது என்று ஓடிக்கொண்டே இருக்கும் தன் கணவனை குறை கூறி வருத்தப்பட்டது தவறு என புரிந்தது, சுபத்ராவிற்கு.மாலையில், தெரு கோடியில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு போனாள், சுபத்ரா. அங்கிருந்த அனைவரும், அவளிடம் நலம் விசாரித்தனர்.'என்ன விஷயம், வீட்டுக்காரர் வரலியா?' என, சிலர் கேட்கவும், அவளுக்கு சங்கடமாக இருந்தது.ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தாள், சுபத்ரா. கேட் திறந்து உள்ளே வந்தான், தமிழரசன்.''வாங்க...'' என்று, முகம் மலர வரவேற்றாள், சுபத்ரா.கையில் வைத்திருந்த பையை சுபத்ராவிடம் கொடுத்து, ''அம்மாகிட்ட கொடு,'' என்றான்.ஹாலில் கலகலப்பாக கணவன், மகள், மருமகள் பேசிக் கொண்டிருப்பதை மனநிறைவுடன் பார்த்தாள், சங்கரி. எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.''மாமா, மாமி, நாளைக்கு காலையிலேயே நாங்க கிளம்பணும். சுபத்ராவை அழைச்சுட்டு போகத்தான் எல்லா வேலையையும் போட்டுட்டு வந்திருக்கேன்,'' என்றான், தமிழரசன்.''ஞாயிற்றுக் கிழமைதானே, இருந்துட்டு போகலாமேப்பா,'' என்றார், சிவப்பிரகாசம்.''ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்யணும். இல்லேன்னா வேலை சேர்ந்துடும். என்ன, கொஞ்சம் லேட்டா போகலாம். அவ்வளவு தான்,'' என்றான்.இரவு சாப்பிட உட்கார்ந்த தமிழரசனுக்கு, வாழை இலையை தேடி, அடுக்களைக்கு வந்த சுபத்ராவுக்கு, உப்பு கண்ணில் பட்டது.தான் இந்த உப்பு பெறாத விஷயத்திற்கு போய் கோபித்து வந்திருப்பதை எண்ணி சிரித்தாள். அங்கு வந்த தமிழரசனுக்கு, அவள் சிரிப்பு சத்தம் கேட்டும், அதற்கான காரணத்தை அவன் கேட்கவில்லை.மறுநாள் காலை, பலகாரங்கள், காய்கறி என, மூட்டை முடிச்சுகளுடன், தமிழரசனுடன் கிளம்பினாள், சுபத்ரா. பெற்றோரை பிரியும் வருத்தம் இருந்தாலும், தமிழரசன் மேல் கோபம் இல்லாமல், தெருவாரும், ஊராரும் மெச்ச பெருமையுடன் சென்னைக்கு போகிறோம் என, கம்பீரமாய் பஸ் ஏறினாள்.வரும்போது அறியாமையால் சுபத்ரா அழுத அழுகைக்கும், இனி அவளை பிரிந்திருக்க வேண்டுமே என்று சங்கரி அழுகிற அழுகைக்கும், வாழ்க்கை பாடத்தை படித்த பெண்களுக்கு தான் வித்தியாசம் புரியும். அன்னபூரணி அம்மாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !