தனுஷ்கோடி தந்த விதை ஆட்டுக்கு தீவனமானது!
ஜோத்பூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சியாளர் வி.கே.மாத்துார்; இவர், சில ஆண்டுகளுக்கு முன், தமிழகம் வந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டார். அப்போது கோடை காலம் என்பதால், வெயில் சுட்டெரித்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், சீமைகருவேல மரங்களில் இருந்து காய்ந்து விழும் விதைகளை தின்பதை பார்த்துள்ளார்.உடனே, அந்த விதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதில், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதை அறிந்தவர், பின், ராஜஸ்தானிலும், சீமைகருவேல மரங்களின் விதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதிலும், ஊட்டச்சத்து இருப்பது தெரிந்தது. உடனே, சில ரசாயன கலவையுடன் மலிவான விலையில், கால்நடைகளுக்கான தீவனமாக தயாரித்தார். இது பற்றி அவர், 'தற்போது எங்களிடம், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பராமரிப்பில் உள்ளன; அவை, சீமைக் கருவேல விதையில் தயாரித்த தீவனத்தை தின்று, 'கொழு கொழு'வென இருக்கின்றன...' என்கிறார்.