தீபாவளி கோவில்!
கிருஷ்ணர் மற்றும் நரகாசுரனுடன் சம்பந்தப்பட்டது, தீபாவளி பண்டிகை. கிருஷ்ணருக்கும், பூமிதேவியான சத்யபாமாவுக்கும் பிறந்த நரகாசுரன், அசுர குணங்களுடன் வளர்ந்து அனைவருக்கும் துன்பம் தந்தான். 'தாயின் கையால் மட்டுமே மரணம்...' என்ற வரம் பெற்றிருந்த நரகாசுரன், தான் ஆட்சி செய்த ப்ராக்ஜோதிஷபுரம் என்ற இடத்தில் கொல்லப்பட்டான். அதுவே, இன்றைய அசாம் தலைநகர், கவுகாத்தி.கவுகாத்தியில், நரகாசுரனை அழித்த கிருஷ்ணருக்கு, கோவில் இருக்கிறது. இதை, அஸ்வ கிளந்தா கோவில் என்கின்றனர். அஸ்வ என்றால் குதிரை. கிளந்தா என்றால் களைப்பு. நரகாசுரனை அழிக்க, தன் தேரில் வந்தார், கிருஷ்ணர். தேரை ஓட்டியது, நரகாசுரனைப் பெற்ற சத்யபாமா. குதிரைகள் நீண்ட துாரம் ஓடி வந்த களைப்பில், தேரின் வேகம் குறைந்தது. உடனே, இவ்விடத்தில் நிறுத்தி, குதிரைகளுக்கு ஓய்வு கொடுத்தனர். குதிரைகள் களைத்து நின்ற இந்த இடத்தை அசாமிய மொழியில், 'அஸ்வ கிளந்தா' என்றனர். மற்றொரு வரலாறு, மகாபாரதத்திலிருந்து இந்தக் கோவிலுக்கு சொல்லப்படுகிறது. பாரதப் போரில், அர்ஜுனன் மகன் அபிமன்யு வீரமாகப் போரிட்டான்.அபிமன்யுவைக் கொல்ல, சக்ரவியூகம் வகுத்தனர், கவுரவர்கள். அதிலிருந்து, அவனால் வெளி வர முடியாது என்பதால், தன் மகனைக் காக்க, அர்ஜுனனும் அங்கு தேரில் வந்தான். ஆனால், அவனது தேர்க்குதிரைகள் முன்னேறாதபடி சதி செய்யப்பட்டது. எனவே, இந்த இடம், 'அஸ்வ கிரதா' எனப்பட்டது. கிரதா என்றால், சதி என பொருள்.நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் முகாமிட்ட, இவ்வூரின் வரலாறு அறிந்த மன்னர் சிவசங்கா, கிருஷ்ணருக்கு கோவில் எழுப்பினார். இது, 300 ஆண்டுகள் பழமையான மலைக்கோவில். மலையடிவாரத்தில் கூர்மயானார்தான் என்ற பெயரில், ஆமை வடிவில், சுவாமி காட்சியளிக்கிறார். மலை மேல் ஜனார்தனன், அனந்தசாய் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.பிரம்மபுத்திரா நதியின் வடகரையில், கோவில் உள்ளது. இந்த நதியை சராய்காட் பாலம் வழியாக கடக்கலாம், பக்தர்கள். நதிக்கரையிலுள்ள புண்ணிய கட்டங்களிலிருந்து, படகுகளும் செல்கின்றன. இவ்வூரில் புகழ்மிக்க சக்தி பீடமான, காமாக்யா கோவிலும் இருக்கிறது. ஒருமுறை பிரம்மாவின் மகனான பிரம்மபுத்திரனை, சபித்து விட்டார், வசிஷ்டர்.இதற்கு விமோசனம் கேட்ட போது, 'பங்குனி மாத வளர்பிறை அஷ்டமியன்று, பூலோகத்திலுள்ள நதியில் நீராடினால், பாவ விமோசனம் கிடைக்கும்...' என்றார். இவனது பெயரால், அந்த நதி பிரம்மபுத்திரா என, பெயர் பெற்றது.இந்த அஷ்டமியை, அசோகாஷ்டமி என்பர். இந்நாளில், ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவர். முன்னோருக்கு பிரம்மபுத்திராவில் தர்ப்பணமும் கொடுப்பர். கிருஷ்ண ஜெயந்தியும் இங்கு முக்கிய திருவிழா.தீபாவளி நாளில், நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணர் கோவிலுக்கு, ஒருமுறை சென்று வாருங்களேன்! தி. செல்லப்பா