உள்ளூர் செய்திகள்

ஆதி மனிதன் பிறந்த பூமி! - தென் ஆப்ரிக்க பயணக் கட்டுரை

'எவ்ரிதிங் இஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்...'தென் ஆப்ரிக்க சுற்றுலாவுக்காக, சென்னையில், எமிரேட் விமானத்தில் ஏறியதும் கேட்ட, மேற்கத்திய பாடல் இது! மனம், லேசாக துள்ள ஆரம்பித்தது.எமிரேட் விமானத்தின், ஜம்போ பிரமிப்பை ரசித்தபடி, பயணத்திற்கான ஏற்பாட்டில், நான் சந்தித்த பல சிரமங்களையும், அவற்றிலிருந்து மீண்ட விதத்தையும் அசை போட்டேன்.தென் ஆப்ரிக்க சுற்றுலா துறையினர் ஏற்பாடு செய்திருந்த, இந்திய பத்திரிகையாளர்களுக்கான தென் ஆப்ரிக்க சிறப்பு சுற்றுலா அழைப்பிதழ் கைக்கு வந்ததும், 'தினமலர்' நாளிதழின் இணை ஆசிரியரிடம், 'சார்... இப்படி ஒரு அழைப்பு வந்துள்ளது; யாரை அனுப்பலாம்...' எனக் கேட்டேன். 'நீயே சென்று வாயேன்...' என்றார். மனித இனம் உருவான பூமியை நோக்கி, நாம் பயணப்படப் போகிறோம்; அதுவும், அந்நாட்டு அரசு அழைப்பின்படி... மனம் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தது.தென் ஆப்ரிக்க சுற்றுலா துறைக்கான, மக்கள் தொடர்பு பிரிவின் மும்பை கிளை அலுவலகத்தினரின் அழைப்பு வந்ததும், அதற்கு ஒப்புதல் தெரிவித்து, பாஸ்போர்ட் நகலுடன், கடிதம் அனுப்ப கூறினர்; பாஸ்போர்ட் நகலை, 'சாப்ட் காப்பி'யாக, என் கம்ப்யூட்டரில் வைத்திருந்ததால், அடுத்த, 10வது நிமிடம் அனுப்பி வைத்தேன்.அடுத்த நாளே, தென் ஆப்ரிக்க ஹை கமிஷனிடமிருந்து அழைப்பு கடிதமும், 'நான், என் பயண காலத்தில், உங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறேன்...' என்பதற்கான, 'இண்டெம்னிட்டி' சான்றிதழ் அதாவது, உறுதிமொழி பத்திரத்தை அனுப்பி வைத்தனர். அழைப்பை ஏற்று, பத்திரத்தை பூர்த்தி செய்து அனுப்பினேன்.மூன்றாவது நாள், விசாவுக்கான விண்ணப்பம் வந்தது; விசாவை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க, அந்நாட்டு தூதரகத்துக்கு, குறைந்தபட்சம், ஏழு நாட்கள் ஆகும் என தகவல் தெரிந்தது. சுற்றுலா கிளம்ப, அவர்கள் குறித்திருந்த நாளுக்கும், விசா விண்ணப்பம் அனுப்பிய நாளுக்குமிடையே, இடைவெளி, 10 நாட்களே இருந்தன; இடையில், மூன்று நாட்கள், விடுமுறை வேறு!மேலும், விசா விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள, சென்னையில் அலுவலகம் ஏதும் இல்லை; பெங்களூரில் தான் உள்ளது. உடனே, பெங்களூருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து, விசாவுக்காக காத்திருந்தேன். பயணம் கிளம்பும் நாள் வரை, விசா வரவில்லை.இது போன்ற நேரங்களில், 'டென்ஷனே' ஆகாமல், பிற முக்கிய வேலைகளை முடிக்க, இணை ஆசிரியர் கற்றுக் கொடுத்திருந்ததால், அலுவலகத்தில், என் வேலைகளில் மூழ்கினேன். மதியம், 1:00 மணிக்கு, விசா வந்தது; இணை ஆசிரியரிடம் சொன்னேன். 'பத்திரமாகச் சென்று வா...' என, விடை கொடுத்தார்.பாதுகாப்பு மற்றும் குடியுரிமை நடைமுறைகளை முடித்து, 9:30க்கு விமானம் ஏறினேன்.'எவ்ரிதிங் இஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்...'சென்னையிலிருந்து துபாய்க்கு பயணம்; அங்கு, மூன்று மணி நேர காத்திருப்பு; அங்கிருந்து தென் ஆப்ரிக்காவின், கேப்டவுன் நகருக்குப் பயணம்; அங்கு, நான்கு நாட்கள் தங்கல். அங்கிருந்து கிளம்பி, ஜோகன்னஸ்பர்க் நகருக்கு விமானம் மூலம் பயணம்; அங்கு மூன்று நாட்கள் தங்கல்; மறுபடி துபாய் வந்து, அங்கிருந்து சென்னை கிளம்பல். இது தான், எனக்கு போடப்பட்டிருந்த பயணத் திட்டம்.மற்ற பத்திரிகையாளர்கள் கேரளா, தெலுங்கனா, குஜராத் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து கிளம்ப வேண்டி இருந்ததால், அவரவருக்கு ஏற்ற வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.இந்தியாவிலிருந்து கிளம்பி, அனைவரும், துபாயில் சந்திப்பதென ஏற்பாடாகி இருந்தது. யார் யார் எப்படி இருப்பரோ, நட்புடன் பழகுவரா போன்ற கேள்விகள், மனதில் அசை போட, 'எவ்ரிதிங் இஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்...' என, மனதைத் தேற்றியபடி, துபாய் மண்ணில் இறங்கினேன்; இரவு மணி, 12:30!துபாய் சர்வதேச விமான நிலையம், பிரமிக்க வைத்தது. 7,200 ஏக்கர் பரப்பளவில், தலா, 15 வெளியேற்றங்கள் உடைய மூன்று டெர்மினல்களுடன், ஆண்டுக்கு, ஒன்பது கோடி பயணிகள் வந்து செல்லக் கூடிய திறன் பெற்றதாக அமைந்திருந்தது. ஒரு டெர்மினலிலிருந்து, மற்றொரு டெர்மினலுக்கு, ரயிலில் செல்லக் கூடிய அளவுக்கு பிரமாண்டம்.ஆனால், எங்கேயும் திணறி நிற்பதற்கு அவசியமில்லாமல், கைகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன; வழிகாட்டும் நபர்களும், ஆங்காங்கே உதவிக்கு நிற்கின்றனர். துபாயில் இறங்கியதும், சக பத்திரிகையாளர்களைத் தேடி, அவர்கள் இருந்த டெர்மினலுக்கு, ரயில் மூலம் சென்று சேர்ந்தேன். 'வாட்ஸ் ஆப்'பில் ஏற்கனவே அவர்களுடன் பேசி இருந்ததால், எளிதில் அடையாளம் காண முடிந்தது. இரவு களைப்பில், பாதி பேர் உறங்கிக் கொண்டிருந்தனர்; மீதி பேர், 'லேப்டாப்'பில் மூழ்கி இருந்தனர்.நான் அருகில் சென்றதும், என்னை ஏற, இறங்க நோக்கி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எல்லாரிடமுமே, என்னை போலவே ஒரு தயக்கம் இருந்ததை உணர்ந்தேன். 'சக பத்திரிகையாளர்கள் நட்புடன் பழகுவரா, அவர்களின் மொழி நமக்குத் தெரியாதே, அவர்கள் ஆங்கிலத்தில் பேசினால், நம்மால் சரியாக பதில் சொல்ல வருமா, நாம் பேசும் அரைகுறை ஆங்கிலத்தை அவர்கள் புரிந்து கொள்வரா, நம் தாய்மொழி அவர்களுக்குப் புரியுமா...' என, பல குழப்பங்களுடன், அவர்கள் இருந்ததை ஊகிக்க முடிந்தது.தயக்கத்தை உதறித் தள்ளி, டூர் பொறுப்பாளரான பெண்ணிடம், 'ஹாய்... ஐ கெஸ் யு ஆர்...' என, உரத்த குரலில் நான் கேட்ட உடனே, 'லேப்டாப்'பில் மூழ்கி இருந்த அவர், சட்டென நிமிர்ந்து, சல்யூட் அடிக்காத குறையாக எழுந்து நின்று, அங்கிருந்தவர்களை அறிமுகப்படுத்த துவங்கினார்.அதிகாலை, 2:45 மணிக்கு, துபாயிலிருந்து, தென் ஆப்ரிக்க தலைநகரான கேப்டவுனுக்கு விமானம் கிளம்பியது. ஒன்பது மணி நேர பயணம். விமானத்தில், 'வைபை' இணைப்பு கிடைத்ததால், 'வாட்ஸ் ஆப்' மூலம், குடும்பத்தினருடன் பேச முடிந்தது. இடையிடையே, விமான பணிப்பெண்களின் விருந்து உபசாரம்.கேப்டவுன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதுமே, தடையில்லா குடியுரிமை சான்று வாங்க, வரிசையில் நின்றோம். அமைதியாக இருந்தது விமான நிலையம். தென் ஆப்ரிக்காவின் தென்கோடியில் அமைந்திருந்ததால், சுற்றுலா பயணியர் வருகை மட்டுமே தென்பட்டது; உள்நாட்டுப் பயணிகள் அதிகம் இல்லை. அட்டகாசமான, 12 டிகிரி செல்ஷியஸ் பருவநிலையை உணர்ந்தோம்.எங்களை அழைத்துச் செல்ல வந்த கைடு, இலக்கண சுத்தமான, ஆங்கிலத்தில், 'வெல்கம் ஸ்பீச்' கொடுத்தார். இடை இடையே, 'சவுத் ஆப்ரிக்கான்ஸ்' என்றார். உச்சரிப்பு வித்தியாசமாக இருந்ததை கவனித்தேன்.அவர், டெம்போ டிராவலர் மாதிரியான ஒரு வேன் கொண்டு வந்திருந்தார். 'லக்கேஜ்' வைக்க, வழக்கம் போல, எல்லாரும் வேனின் மேல் கூரையை, அண்ணாந்து பார்த்தோம். அதை, அவர் புரிந்து, 'களுக்' என சிரித்து, ஒரு, 'விசில்' அடித்தார். 'டிரெய்லர் பாக்ஸ்' ஒன்றை ஒருவர் கொண்டு வந்து, வேனுடன் இணைத்துக் கொடுத்தார். அதில், எங்கள் பெட்டிகளை அடுக்கினார் கைடு. 'நம்மூரில் இது போல் இல்லயே...' என, ஆளாளுக்கு வியந்து நின்றோம். ஆனால் அடுத்த நொடியே, 'நம் சாலைகளின் அகலம், இந்த டிரெயிலரின் திருப்பத்திற்கெல்லாம் ஒத்து வராது...' என, சமாதான வாக்கியங்களை பரிமாறியபடி, வேனில் ஏறி, கிளம்பினோம்.— தொடரும்.பி.பானுமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !