நெல் வயலை சுற்றுலாத்தலமாக்கிய, விவசாயி பிரசீத் குமார்!
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள, சுல்தான் பதேரி அருகே, நம்பிக்கோல்லி என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயி, பிரசீத் குமார், தன் நெல் வயலில், 'நெல் கலை' மூலம், அழகிய ஓவியங்களை உருவாக்குகிறார். இது, ஜப்பான் நாட்டிலுள்ள, 'தம்போ ஆர்ட்' எனும் கலையை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக இவர், பல நிறங்களையும், உயரங்களும் கொண்ட நெல் வகைகளைப் பயன்படுத்தி, நெல் வயலில் முப்பரிமாண ஓவியங்களை உருவாக்குகிறார். இவருடைய, 10 ஏக்கர் நிலத்தில், 30 சென்ட் பரப்பில், இக்கலையைச் செய்கிறார். கடந்த, 2024ல் சிவன் உருவத்தையும், அதற்கு முன்பு இந்திய வரைபடம், குருவாயூரப்பன், புத்தர் மற்றும் மீன் போன்றவற்றையும் உருவாக்கினார். இக்கலைக்காக ஊதா நிற நெல், ரக்தசாலி, சின்னர், ஜீரகசாலா போன்ற அரிய நெல் வகைகளைப் பயன்படுத்துகிறார். இவை மருத்துவ குணம் கொண்டவை. இவரது இணையதளம் மூலமாக, பாரம்பரிய நெல் விதைகளும் விற்கப்படுகின்றன. இக்கலை, உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவர்கிறது. கடந்த ஆண்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்து ரசித்தனர். 2019--20ல், கேரள அரசு இவருக்கு, 'ஹரித வ்யக்தி விருது' வழங்கியது. இது, விவசாயத்தை இளைஞர்களிடம் பரப்புவதோடு, உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது; பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்கவும், இது உதவுகிறது. - ஜோல்னாபையன்