விவசாயம்!
வெறிச்சோடிக் கிடந்தது, ஊர். பெருசுகள் முதல், சிறுசுகள் வரை எல்லாரும் மாடசாமி வீட்டில் உட்கார்ந்திருந்தனர். அழுகைச் சத்தம் மட்டும், விடாமல் கேட்டது.''விவசாயத்த நம்பியிருக்கிற எல்லாருக்கும், கடைசியில, இதுதான் கதின்னு சொல்லாம சொல்லிட்டு போயிட்டான், மாடசாமி. போங்கப்பா... விவசாயமும் வேணாம்; ஒரு மண்ணும் வேணாம். காலம் பூரா காடு, கரை, தோட்டந்தொரவுல கெடந்து, நாம என்னத்தக் கண்டோம்... வாங்குன கடனுக்கு வட்டி ஏறி போயி, வீட்டுல இருக்கிற பண்ட, பாத்திரங்கள இழந்து, கண்ணீரும், கம்பலையுமா வாழ்ந்துட்டு இருக்கோம். போதும்டா சாமி... நஞ்சையும், புஞ்சையும், நம்மள, நஞ்சு தின்ன வச்சுப்புடுச்சே...''எந்தவித பாதுகாப்புமில்லாத இந்த விவசாயத்த நம்பி, இனி, பொழப்பு நடத்த முடியாது. எல்லா பயலுகளும், இந்த சனியன விட்டுட்டு, திருப்பூர், கோயமுத்தூர்ன்னு போயி, செங்கச் சூளை, பனியன் கம்பெனின்னு, ஏதாவது ஒண்ணுல வேல செஞ்சு, வயித்த கழுவுவோம். மாடசாமி நெலம, இனி யாருக்கும் வரக்கூடாது,'' புலம்பி தீர்த்தார் ரங்கசாமி கிழவன்.''ஐய்யயோ... எங்கள இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டீங்களே... வெவசாயத்தில நட்டமுன்னா, அத, அடுத்த வெள்ளாமையில எடுத்திரலாம்; உசுரு நட்டப்பட்டா, அத எங்க போயி எடுக்கிறது. எஞ்சாமி... ராத்திரி பகல்ன்னு பாக்காம எப்பவும், காடு, கரைன்னு தானே கெடப்பே... புள்ளகுட்டிகளுக்கு சோறுல்லன்னாலும், வெள்ளாமைக்கு எப்படியாவது தண்ணி பாய்ச்சுவயே உனக்கா, இந்த நெலம...'' என, ஒப்பாரி வைத்தாள், மாடசாமியின் மனைவி.''மாடசாமி தான் என்ன செய்வான் பாபம்... காலம் பூரா, விவசாயம் செய்து, கடனுக்கு மேல கடன் ஆனது தான் மிச்சம். வட்டிக்கு குடுத்தவன் தெனமும் வாசலுக்கு வந்தா நல்லாவாயிருக்கும்... யார் கிட்டப் போயி, இதச் சொல்றதுன்னு தான், பய கண்ண மூடிட்டான்...'' என்றார் கூட்டத்தில் ஒருவர்.''அப்படிச் சொல்லாதீங்க... நாமளும் தான், தெனம் தெனம், உசுரோட செத்துட்டு இருக்கோம். பக்கத்துல இருக்கிற நெலமெல்லாம், 'பிளாட்' போடுறாங்களாம்; வீடு கட்டி, அதுல, ரெண்டு வீடும் தாரேன்னு சொல்றாங்க. நாமளும் கைக்கு வந்த காசுக்கு அத வித்துட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, பொழப்பு தேடி, வேற எங்கயாவது போக வேண்டியது தான்,'' என்றார், மற்றொருவர்.''வானம் பாத்த பூமி, வானம் பாத்துக்கிட்டே தானிருக்கு... ஒரு பொட்டு மழையில்ல; தண்ணீர் பாய்ச்சணும்ன்னா கரன்ட் இல்ல. ஆறு, வாய்க்கால்ல போதுமான தண்ணி வரல. இப்படியிருந்தா, எப்படி விவசாயம் செய்றது... வாத்தியார் புள்ள வாத்தியார் ஆகிறான்; போலீஸ்காரன் மகன் போலீசாகிறான்; டாக்டர் மகன் டாக்டராகுறான் இப்படியே அவனவன், புள்ளைகளை நல்ல முறையில பொழைக்க வைக்கணும்ன்னு தான் முறுக்கிட்டு திரியுறானுகளேயொழிய எவனாவது தன்னோட மகன, விவசாயி ஆக்கணும்ன்னு நினைக்கிறானா... மாட்டான். ஏன்னா, இதுல, என்ன பெருசா சம்பாதிச்சுற முடியும்ன்னு நெனைக்கிறதோட, விவசாயின்னு சொல்றதுக்கே இங்க வெட்கப்படுறானுங்க,'' என்றார் ரங்கசாமி கிழவன்.ஊர், உறவுகள் எல்லாம், மாடசாமிக்கு மலர் மரியாதை செய்தது.''மாடசாமி கொஞ்சம் அவசரப்பட்டுட்டான்; லாப, நஷ்டமெல்லாம் விவசாயத்தில சகஜம் தான். அதுக்கு போயி, பொசுக்குன்னு சாகுறது, எந்த விதத்தில் நியாயம்...''இவன் செத்துப் போனா மட்டும் பூமியில கொத்து கொத்தா காச்சிருமா... இல்ல, வௌஞ்ச வெள்ளாமைக்கு தான், நியாயமான வெல கெடச்சுருமா... வெளைய வைக்கிறது நாமளா இருந்தாலும், விலைய நிர்ணயிக்கிறது வேறொருத்தனா தானா இருக்கான். நம்ம கிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப்போயி, கண்ணாடிக் கடையில, பாக்கெட் போட்டு, பவுசா வித்து, பணம் சம்பாதிக்கிறான். லாபம் அவனுக்கு; நட்டம் நமக்கு!''என்னைக்கு இந்த நெலம மாறுதோ, அன்னைக்கு தான், விவசாயி சந்தோஷமா இருப்பான். இல்ல, மாடசாமி மாதிரி இன்னும், எத்தன ஆளுக சாகப் போறாங்களோ...'' மாலையை, மாடசாமியின் காலில் வைத்து புலம்பினார், ஒரு விவசாயி.''இவன் கூட்டுக்காரன் கூட, நெலத்த வித்திட்டு, டவுன்ல ரெண்டு, மூணு காரு வாங்கி, வாடகைக்கு விட்டு பொழப்பு நடத்துறானாம். ஆனா, இவன் மட்டும் தான், 'நெலத்த விக்க முடியாது, கடைசி வரைக்கும் நான் விவசாயம் தான் செய்வேன்; செத்தாக் கூட என்னோட நிலத்துல தான் என்னைய புதைக்கணும்'ன்னு பிடிவாதமா இருந்திருக்கான். பாவிப் பய, அவன் சொன்னது அப்பிடியே பலிச்சுருச்சே...''பலவாறாக புலம்பியபடி உட்கார்ந்திருந்தனர், ஆட்கள்.தென்னங்கீற்றில், வேயப்பட்ட பந்தலில், சூரிய ஒளி பட்டு, தரையில் வட்ட வட்டமாய், மினுங்கியது. ஊரிலுள்ள, எல்லாக் கடைகளும் அடைத்து, ஊரே துக்கத்தை அனுஷ்டித்தது. கூடியிருந்த சொந்தபந்தங்கள், மாடசாமியின் குணநலன்களைச் சொல்லியவாறு அமர்ந்திருந்தனர்.வெயில் கொஞ்சங் கொஞ்சமாய் குறைந்து, மங்கத் துவங்கியது, வானம். அன்றைக்கு யாரும் வேலை வெட்டிக்கு போகவில்லை என்பதால், விவசாயத்தையும், விவசாய நிலங்களை பற்றியும் விலா வாரியாக பேசினர்.ஊரிலுள்ள, எல்லா விவசாய நிலங்களையும் விற்று, ஊரைக் காலி செய்து, திருப்பூர், கோயமுத்தூர் போக தீர்மானித்தனர். எல்லாருடைய கண்களிலும், பயத்தின் பீதி பிதுங்கி வழிந்தது. ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர். இருந்தாலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, இங்கு யார் இருக்கின்றனர். தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் இந்த சமூகம், விவசாயப் பொருட்களின் விலையை தீர்மானிக்காது. ஆபரணங்களை விட, அத்தியாவசியம் இங்கு இது முக்கியமென்று எவரும் நினைப்பதில்லை. இதையெல்லாம் கேட்டவாறு அமர்ந்திருந்த கனகராஜ், 'பொசு'க்கென எழுந்து, ''நானும், காலையில இருந்து பாத்துட்டுத்தான் இருக்கேன்; ஏன் இப்பிடி, புலம்பி சாகுறீங்க. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்ல இருக்குதுன்னு சொன்னாங்க. ஆனா, அது அரசியல்வாதிகளால, திரும்பிப் பாக்க முடியாத நிலையில இருக்கு... விவசாயம் இல்லன்னா, இங்க ஒரு பயலும் உசுரோட இருக்க முடியாது. பருப்பும், அரிசியும் தான்யா வாழ்க்கைக்குத் தேவை. பணங்காச சாப்பிட்டுட்டு உசுரு வாழ முடியாதுன்னு என்னைக்கு உரைக்குதோ, அப்பத்தான்யா நாம யாருன்னு... இந்த உலகத்துக்கு தெரியும்.''அத்தர் பூசுனவன மதிக்கிற இந்த உலகம் சேறும், சகதியுமா இருக்கிற விவசாயியையும் மதிக்கணும். விவசாய வீதியில பாத்தா, கையெடுத்துக் கும்பிடணும். வரம் கெடைக்குமுன்னு கோவிலுக்குப் போயி கடவுளக் கும்பிடுற மனுசங்க. வயல்ல எறங்கி, நமக்கு உணவக் குடுக்கிற விவசாயி, கடவுள விட ஒசந்தவன்னு உணரணும்.''ஏய்யா... எல்லாரும் விவசாயம் செய்யாம, வேற வேலைக்கு ஓடுறான்... இந்த தொழில்ல பாதுகாப்பு இல்ல; படிச்சவன் எல்லாம், நான் டாக்டர் ஆவேன், இன்ஜினியர் ஆவேன், வக்கீல் ஆவேன், கலெக்டர் ஆவேன்னு தான் இன்டர்வியூ குடுக்கிறானே தவிர, எவனாவது விவசாயி ஆவேன்; விவசாயத்தில புதுசு புதுசா கண்டுபிடிச்சு, பெரிய அளவுல விருத்தி செய்வேன்னு சொல்லியிருக்கானா... சொல்ல மாட்டான். காரணம், விவசாயம் செய்தா பணம், காசு சம்பாதிக்க முடியாது. இதுல வாழ்க்கைக்கான பாதுகாப்பு இல்ல. வர்ற வருமானத்த வச்சு காரு, வண்டி வாங்கவோ, சொகுசு வாழ்க்கை வாழவோ முடியாதுன்னு தான ஓடுறான்... இத மாத்தணும்,'' என, தொண்டை நரம்புகள் புடைக்க, பேசினார் கனகராஜ்.எல்லாரும் மாடசாமியை மறந்து, கனகராஜின் பேச்சில் கவனம் செலுத்தினர்.''மாடசாமி எதுக்கு செத்துப் போனான்... விவசாயத்தில நஷ்டம்; வாங்குன கடன திருப்பிக் கட்ட முடியல. கடன் கொடுத்தவன் குடும்பத்த கேவலமா பேசுவானே... அவமானமாச்சேன்னு செத்துப் போயிட்டான். இந்த பிரச்னைக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பாக்கணுமே தவிர, விவசாய நிலங்கள வித்திட்டு போகணும்ன்னு சொல்றீங்களே... எங்க போனாலும் சோறு சாப்பிடணுமுள்ளே...''அரசாங்க ஊழியருக்கு, 58 வயசுக்கு பின், அரசு பென்ஷன் தர்றதுல்ல... அதமாதிரி, தலைமுறை தலைமுறையா, விவசாயம் பாக்குற நமக்கு, அரசு பென்ஷன் கொடுக்கணும். தொழில் துவங்குறதுக்கு மட்டுமே பேங்குல கடன் தர்றது மாதிரி, விவசாயிகளுக்கு மட்டுமே தனியா ஒரு பேங்க் உருவாக்கணும். விவசாயப் பொருட்கள, விவசாயிகளே நேரடியா விற்பனை செய்யணும். இடைத் தரகர் எவனும் இருக்கக் கூடாது.''அரசாங்கம் இன்னும் அதிகமா விவசாயக் கல்லூரிகள உருவாக்கணும்; விவசாயத்த படிக்க மாணவர்கள உற்சாகப்படுத்தணும். அரசியல், சினிமா, தொழில்ன்னு அதுல சாதிச்சவங்களுக்கு விருது குடுக்கிற மாதிரி, விவசாயத்தில சாதிச்சவங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் விருது, பரிசுகள் வழங்கி கவுரவிக்கணும். பேப்பர்காரங்க, 'டிவி'க்காரங்க, சினிமாப் பக்கமே சாயாம, விவசாயிகளையும் பேட்டி எடுத்து, அவங்கள, விளம்பரப்படுத்தணும். அப்புறம் பாருங்க, ரியல் எஸ்டேட்காரன், 'அட்ரஸ்' இல்லாமப் போவான். நிலத்த விக்கிறவன் யோசிப்பான்.''இங்க மனுச எல்லாருமே பணமும், பொருளும், புகழும் வேணும்ன்னு தான் அலையுறாங்க. அத, நம்ம விவசாயம் குடுத்துச்சுன்னா, நம்ம நாட்டுல விவசாயம் கொடிகட்டிப் பறக்கும். இங்க, பெரிய தொழிலா, விவசாயம் மட்டும் தான் இருக்கும்,'' என்று கனகராஜ் சொன்னபோது, இழவு வீடென்ற சம்பிரதாயத்தை மறந்து, எல்லாரும் கை தட்டினர்.ரங்கசாமிக் கிழவன் கண்களிலிருந்து, கண்ணீர், 'மளமள'வென வழிந்தது.''தம்பி... நீ சொல்றது நெசம் தான்பா... விவசாய நிலங்கள நாங்க விக்கமாட்டோம்; இனிமே, இன்னொரு மாடசாமிய, நாம இழக்கக் கூடாது,'' என்றார், ரங்கசாமி கிழவன்.அன்று மாலை, மாடசாமியை, அவர் நிலத்திலேயே அடக்கம் செய்தனர்.மறுநாள், கனகராஜ் சொன்ன அத்தனை அம்சங்களையும், மனுவாக எழுதி, கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர், ஊர் மக்கள்.மா.செல்லமுத்துசொந்த ஊர்: தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம், படிப்பு: எம்.காம்., எம்.பில்., டி.எப்., (டெக்.,) சென்னையிலுள்ள, அரசு திரைப்படக் கல்லூரியில், திரைப்பட இயக்குனர் பயிற்சி பெற்றுள்ளார். சில திரைப்படங்களில், உதவி இயக்குனராகவும், சூரிய நகரம் என்ற படத்தையும், ஒன்பது குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.கதை, கவிதை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். நிறைய எழுத வேண்டும் என்பது இவரது விருப்பம்.