உள்ளூர் செய்திகள்

ஆற்றுக்குள்ளே திருவிழா!

மே 10 - அழகர் வைபவம்வைகை ஆறு இன்று போல் அன்று இல்லை. ஒருகாலத்தில், வைகை ஆற்றின் இருமருங்கிலும், ஏராளமான மரங்கள் இருந்தன; அவற்றில், வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து, வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியின் அழகை, 'பரிபாடல்' போன்ற இலக்கியங்கள் விவரிப்பதிலிருந்து, அதன் வளத்தை அறியலாம்.தன் திருமணத்துக்கு வந்தவர்களின் தாகம் தீர, சிரசை, சற்றே கவிழ்த்து, கங்கையை இங்கே விட்டார், சிவன். பெருமானால் உருவாக்கப்பட்ட இந்நதியை, 'தென்னக கங்கை' என்றே சொல்லலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது!வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பல நாட்கள் மூழ்கி கிடந்தால், பிறவி கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார், சுதபஸ் என்ற முனிவர்.அதற்கேற்றாற் போல், ஒருநாள், வைகை கரைக்கு வந்த துர்வாச முனிவருக்கு, மரியாதை செலுத்தவில்லை, சுதபஸ். இதனால், கோபமடைந்த துர்வாசர், 'என் வருகையை மதிக்காத நீ, மண்டூகமாக (தவளை) இந்த நதியிலேயே கிட...' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.துர்வாசர் ஏன் சுதபஸ் முனிவரை 'மண்டூகமாகப் போ...' என, சபிக்க வேண்டும்... மாறாக, 'மச்சமாகப் போ (மீன்)...' என, சபித்திருக்கலாமே!மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும்; தவளை என்றால் தண்ணீர், தரை என, எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.அன்று முதல், சுதபஸுக்கு மண்டூக முனிவர் என, பெயர் ஏற்பட்டது. தவளையாய், நீண்ட காலம் வைகை நதியில் கிடந்தார். அவ்வப்போது, தரைக்கு வருவார். காரணம், 'சுந்தரராஜர் என்ற பெயர் கொண்ட அழகர், திருமாலிருஞ்சோலையில் இருந்து, எந்நாளில், வைகைக்கு எழுந்தருளுகிறாரோ, அன்று, சாப விமோசனம் கிடைக்கும்...' என்பது, துர்வாசர் கொடுத்த சாப விமோசனம்.'ஒருவேளை, பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்து வந்தால், துள்ளி குதித்து, அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே...' என்பது சுதபஸ் எண்ணம்!ஒருமுறை, அழகர்கோவிலில் இருந்து, சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் வந்தார்; வைகையில் இறங்கினார். அப்போது, அவரது திருவடி, மண்டூகர் மீது பட, சுய உருவைப் பெற்றார், சுதபஸ்.'பெருமாளே... இனி, எனக்கு மோட்சம் தானே...''சுதபஸ்... இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்...'என்றார், பெருமாள்.திருமாலின் திருவடி பட்ட அந்த நொடியே, அவர் மோட்சத்திற்கு போனார்.அழகர் ஆற்றில் இறங்கும் போது, நாமும், வைகையில் இறங்கினால், அவரது திருவடி தரிசனம் கிடைத்து, வாழ்வுக்குப் பின் மட்டுமல்ல; வாழும் போதும், சகல வளத்துடன், சொர்க்க வாழ்வு அமையும்.அழகரைக் காண, மீனாட்சி பட்டணத்துக்குப் புறப்படுவோமா!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !