உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல....

இடம் பெயரும் வடிவேலு!

அரசியல் புயலில் சிக்கி சிதைந்து கிடக்கும் வைகைப் புயல் வடிவேலு, சென்னையில் விஜயகாந்த் வீட்டுக்கு அருகில் உள்ள, தன் வீட்டை மாற்ற முடிவு செய்துள்ளார். அதன் காரணமாக, வேறு பகுதியில், வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, ஒரு புதிய வீடு கட்டியுள்ளார்.— சினிமா பொன்னையா

விதார்த் நடிக்கும் இன்னொரு, 'மைனா'!

'மைனா'வுக்கு பின், விதார்த் நடித்த, 'முதல் இடம்' மற்றும் 'கொள்ளைக்காரன்' படங்கள் தோற்றுவிட்டதால், அவரது மார்க்கெட் ஆடிப்போய் கிடக்கிறது. இந்நிலையில், 'காட்டுமல்லி' படத்தில் தீவிரமாக நடித்து வரும் அவர், 'இப்படம் எனக்கு இன்னொரு, 'மைனா' போன்று பெரிய வெற்றியை கொடுக்கும்...' என்கிறார். — சி.பொ.,

டாப்சி தீவிரம்!

'ஆடுகளம்' டாப்சிக்கு, தமிழ் சினிமா மீது நம்பிக்கை வந்து விட்டது. அதனால், புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் அவர், தமிழ் பேசவும் பயிற்சி எடுக்கிறார். யூனிட் நண்பர்களிடம், முடிந்த வரை தனக்குத் தெரிந்த தமிழில் பேசி, தெரியாத வார்த்தைகளை கேட்டறிந்தும் வருகிறார். பாம்பு தின்கிற ஊரிலே போனால், நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும்!— எலீசா

லட்சுமிராய் குத்தாட்டம்!

'வனயுத்தம்' படத்தில், லட்சுமிராய் குத்தாட்டம் ஆடியுள்ள விவகாரம் பரவியதைத் தொடர்ந்து, பல கம்பெனிகள், அவரை முற்றுகையிட்டுள்ளன. அதனால், இதுதான் காசை கறக்க சரியான தருணம் என்று, ஒரு பாட்டுக்கு ஆட, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கூலி கேட்கிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!— எலீசா

மதன் கார்க்கியின் எதிர்பார்ப்பு!

'கண்டேன் காதலை' படத்தில், பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, 'எந்திரன்' படத்திற்கு எழுதிய, 'பூம்பூம் - ரோபோடா' மற்றும் 'இரும்பிலே ஒரு இதயம்' ஆகிய பாடல்களுக்கு பின், பிசியான பாடலாசிரியராகி விட்டார். இந்நிலையில், 'முகமூடி' படத்தில், தான் எழுதியுள்ள, 'வாயமூடி சும்மா இருடா' என்ற பாடலும், 'ஹிட்' ஆகியுள்ளது. இனி, முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு பாடல் எழுதவே முக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.— சி.பொ.,

அரை நிர்வாணமாக நடித்த ரீமாசென்!

திருமணத்துக்கு முன் நடித்ததை விட, சமீபத்தில், 'கேங்ஸ் ஆப் வசேப்பூர்' என்ற இந்தி படத்தில், ஜாக்கெட்டே அணியாமல் நடித்துள்ளார் ரீமாசென். அவரது முதுகுபுறத்தை, படுகவர்ச்சியாக படமாக்கி உள்ளனர். ரீமாவின் கணவர் ஷிவ்கரண் இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லவில்லையாம். மாறாக, 'கதைக்கு தேவையானபடி நடிப்பதில் தவறில்லை' என்று, ரீமாவை தட்டிக் கொடுத்துள்ளார். கொண்டவன் பலம் இருந்தால், மண்டலம் எல்லாம் ஆளலாம்!— எலீசா

அடர்ந்த காட்டில் விஜயலட்சுமி!

'அஞ்சாதே' விஜயலட்சுமி, 'வனயுத்தம்' படத்தில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில், காலில் செருப்பு அணியாமலேயே சில காட்சிகளில், அடர்ந்த காடுகளில், நடித்த போது, அந்த கேரக்டரின் வலியை உணர்ந்து நடித்ததால், காலில் முள்குத்திய வலி கூட தெரியவில்லை என்கிறார். ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.— எலீசா

'தில்லு முல்லு'வில் எம்.எஸ்.வி., பாடல்கள்!

கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடித்த, 'தில்லு முல்லு' படம் மீண்டும் ரீ-மேக் ஆகிறது. 'கலகலப்பு' சிவா நடிக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றாலும், இப்படத்திற்கு ஏற்கனவே இசையமைத்த, எம்.எஸ்.விஸ்வநாதனின் சில பாடல்களும் படத்தில் இடம் பெறுகின்றன.— சி.பொ.,

வில்லனாக நடிக்க மறுத்த நரேன்!

'முகமூடி' படத்தில் வில்லனாக நடித்த நரேன், மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க சிலர் அழைப்பு விடுத்தனர். அதற்கு, 'எனக்கு, 'அஞ்சாதே' படத்தை கொடுத்த டைரக்டர் மிஷ்கின் என் நண்பர் என்பதால் மட்டுமே, 'முகமூடி' படத்தில் வில்லனாக நடித்தேன். ஆனால், இனி அவரே சொன்னாலும், தொடர்ந்து வில்லனாக நடிக்கும் எண்ணம் இல்லை...' என்று சொல்லி விட்டார்.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !