இதப்படிங்க முதல்ல....
தாசரி நாராயணராவ் ஏலப்புரட்சிக்கு ஆதரவு!அரசியல் பிரவேசத்தில் இருந்த தெலுங்குப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ், தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். தமிழில் விமல் நடித்த, மஞ்சப்பை படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து வருபவர், ராம்கோபால் வர்மா இயக்கிய, அனுஷனம் என்ற படத்தை ஏலமுறையில் வெளியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு, 'யார் வேண்டுமானாலும், படங்களை ஏலத்தில் வாங்கி வெளியிடும் வியாபாரத்தை செய்யலாம்...' என்று தெரிவித்துள்ள அவர், 'இது திரையுலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்...' என்றும் தெரிவித்துள்ளார். தாசரி நாராயணராவின் பேச்சுக்கு பின், தமிழ் சினிமா துறையினரும் எதிர்காலத்தில் படங்களை ஏலத்தில் விற்பனை செய்ய யோசிக்கத் துவங்கி விட்டனர்.— சினிமா பொன்னையா.உடலை வருத்தி நடித்த ரக் ஷிதா!அம்பேல் ஜூட் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருபவர் ரக் ஷிதா. கதைப்படி அப்படத்தில் சமூக கும்பலால் கடத்தப்படும் வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்காக மாதக்கணக்கில் அவர்களின் பிடியில் இருக்கும் போது, பல நாட்களாக பசியும், பட்டினியுமாக இருக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், அக்காட்சிகளுக்காக தன் உடலை வருத்த முடிவு செய்த ரக் ஷிதா, ஒரு வாரம் சரியான உணவுகளே எடுத்துக் கொள்ளாமல், தன் உடம்பில் சோர்வுத்தன்மையை காண்பித்து, தத்ரூபமாக நடித்துள்ளார். 'சினிமா உலகைப் பொறுத்தவரை எந்த நடிகையும் இப்படி உடலை வருத்தி நடித்ததில்லை...' என்று, ரக் ஷிதாவை கோடம்பாக்கத்தில் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!— எலீசா.'ஒரு டிக்கட்ல ரெண்டு சினிமா!'முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த, ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ராகவா லாரன்ஸ், தற்போது, முனி படத்தின், 3வது பாகமான கங்கா படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கிடையே, தன் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட அவர், அந்த படத்திற்கு, ஒரு டிக்கட்ல ரெண்டு சினிமா என்று பெயர் வைத்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கிய, ஒரு வீடு இரு வாசல் படத்தைப்போன்று, இடைவேளைக்கு முன், ஒரு கதையும், பின், இன்னொரு கதை என, இரண்டு கதைகளில் அப்படம் உருவாகிறது. இதில் கிழவன் ரோலில் நடிக்கும் லாரன்சுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், கருப்பு துரை ரோலில் நடிக்கும் லாரன்சுக்கு, ராய் லட்சுமியும் ஜோடியாக நடிக்கின்றனர்.- சி.பொ.,உடல் உறுப்பு தானம் செய்யும் நாகார்ஜுனா!'ஆர்கன் டொனேஷன்' எனும் அமைப்பு, உடல் உறுப்புகளை தானம் செய்வதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில், மாஜி நடிகை அமலா, ஏற்கனவே தன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அவரது கணவர் நாகார்ஜுனாவும் தற்போது, இறப்புக்கு பின், தன் உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதோடு நில்லாமல், தன் ரசிகர்களிடமும் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார். இதையடுத்து, அவரது ரசிகர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருவதோடு, அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.— சினிமா பொன்னையா.கறுப்பு பூனை!பெரும்பாலும் நள்ளிரவு விருந்து நிகழ்ச்சி களில் தான் நடிகைகள் சரக்கு அடிப்பர். ஆனால், அந்த ஒல்லிக்குச்சி இசையமைப்பாளருடன், 'கிசுகிசு'க்கப்பட்ட ஐந்தெழுத்து நடிகையோ, கேரவனுக்குள்ளேயே சரக்கு அடிப்பதோடு, தம் அடித்து புகை மண்டலத்தை ஏற்படுத்துகிறார். இதனால், அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் கதாநாயகர்கள் முகம் சுளிக்கின்றனர்.கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு வந்த வாசனைக் காமெடியனுக்கு, படங்கள் குறைந்து விட்டதால், பட எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியாக, தன் சம்பளத்தை தடாலடியாக இறக்கியுள்ளார். மேலும், தனக்கு போட்டியாக, களத்தில் நிற்கும் பரோட்டா நடிகருக்கான பட வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அவருக்கு அதிர்ச்சி கொடுக்கவும், 'ரூட்' போட்டுக் கொண்டிருக்கிறார்.துளிகள்!* லிங்கா படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க வரும் பிரதான காமெடியனாக நடித்து வருகிறார் சந்தானம்.* கமலுடன், விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, பாபநாசம் படத்திலும் நடிக்க சான்ஸ் கேட்டார். ஆனால், 'உனக்கு பொருத்தமான கேரக்டர் இந்த படத்தில் இல்லை...' என்று சொல்லி விட்டார் கமல்.* தேசிங்கு ராஜா படத்தில் விமலுடன் நடித்த பிந்து மாதவி, இப்போது விமலுக்கு மட்டுமின்றி, அவரது மனைவிக்கும் நெருக்கமான தோழியாகி விட்டார்.அவ்ளோதான்!