தீர்த்த வலம் வருவோமா?
செப்., 24, புரட்டாசி தீர்த்தவாரிதிருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் உட்பட பல மலைக் கோவில்களில் கிரிவலம் வருவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில், புரட்டாசி திருவோணத்தன்று தீர்த்தவலம் வருகின்றனர்.தேவ, அசுரர்களின் தந்தையான காஷ்யபர், நாரதர், வருணன் மற்றும் சுகோஷன் போன்றோர் திருமாலிடம் சென்று, பிரகலாதனுக்கு அருள் செய்த நரசிம்ம ரூபத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.பொதிகை மலை, சித்ரா நதிக்கரையில், தவம் செய்து வரும்படியும், அங்கே காட்சி தருவதாகவும் வாக்களித்தார் நரசிம்மர். அதனால், நால்வரும் தவத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள், பிரதோஷ வேளையில், இரண்யனை சம்ஹாரம் செய்த கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார் நரசிம்மர். பிற்காலத்தில், அவ்விடத்தில் மன்னர்களால் கோவில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி, மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால், மார்பில் லட்சுமியை பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர்.ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்திலும், புதுச்சேரி அருகிலுள்ள சிங்ககிரி மற்றும் கீழப்பாவூரிலும், 16 கைகளுடன் கூடிய நரசிம்மரை தரிசிக்கலாம்.இங்கு, தலையில் கிரீடம், வெண்கொற்றக்குடை சகிதமாக கம்பீரமாக காட்சி தரும் நரசிம்மரை, சூரியனும், சந்திரனும் வெண்சாமரம் வீசி வணங்குகின்றனர்.அத்துடன், இரண்யனின் தந்தையும், பிரகலாதனின் தாத்தாவுமான காஷ்யப முனிவர், பிரகலாதன், அவனுடைய தாய் ஆகியோர் நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கின்றனர். சங்கு, சக்கரம் வைத்துள்ள நரசிம்மரின் வலது கரங்களில் ஒன்று, நாரதரின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அபூர்வ வடிவ சிறப்புடன் அருள்புரிந்து வரும் நரசிம்மரை அருகில் நின்று வழிபடலாம்.பொதுவாக கோவில்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் தான் தீர்த்தம் அமைந்திருக்கும். ஆனால், இங்கு நரசிம்மர் சன்னிதி முன்பாகவே தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாறான அமைப்பு மிகவும் அபூர்வம்.ஒவ்வொரு மாதமும் சுவாதி, திருவோணம், வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் தீர்த்தம் வலம் வரும் உற்சவம் நடக்கிறது. புரட்டாசி திருவோண தீர்த்தவாரியன்று காலை, 11:30 மணிக்கு ஒரு முறையும், மாலை, 6:00 மணிக்கு மூன்று முறையும், தெப்பகுளத்தை வலம் வருவார் சுவாமி. அவரோடு இணைந்து, பக்தர்கள் வலம் வருவர்.இந்த தீர்த்தம், கங்கை மற்றும் நர்மதையாக கருதப்படுவதால், இந்நாளில் தீர்த்த வலம் வருவோரின் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.நரசிம்மருக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும், மூலவராக பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். இவருடன், அலர்மேல்மங்கை தாயார் உள்ளார்.மதுரையில் இருந்து செல்பவர்கள் திருநெல்வேலி அல்லது தென்காசி வழியாக செல்லலாம். திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், 50 கி.மீ., தூரத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து பிரியும் சாலையில், 4 கி.மீ., சென்றால், கீழப்பாவூரை அடையலாம். தென்காசியில் இருந்து திருநெல்வேலி சாலையில், 8 கி.மீ., கடந்தால் பாவூர்சத்திரத்தை அடையலாம்.அலைபேசி: 94423 30643.தி.செல்லப்பா