ஹாரிக்கு, "டூ விட்ட பிப்பா, புதிய காதலரை பிடித்தார்!
பிரிட்டன் இளவரசி கதே வில்லியமின் திருமணத்துக்கு பின், அவரது தங்கை பிப்பா மிடில்டனும், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இளவரசர் வில்லியமின் சகோதரர் ஹாரிக்கும், பிப்பாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், பிரிட்டன் மீடியாக்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. அதற்கு ஏற்றாற்போல், இருவரும் ஜோடியாக சேர்ந்து, வெளி இடங்களில் சுற்றினர். ஆனால், இளவரசர் ஹாரியுடனான காதலுக்கு, 'டூ' விட்டு விட்டார், பிப்பா.தன்னுடன், எடின்பர்க் பல்கலையில் படித்த ஜார்ஜ் பெர்சி என்பவருடன், ஊர் சுற்றி வருகிறார். ஜார்ஜும், பிரிட்டனின் புகழ்பெற்ற பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்தவர் என்பதால், பிப்பாவின் பெற்றோர், இதை கண்டு கொள்ளவில்லை. இளவரசர் வில்லியம், தன் காதல் மனைவி கதேயுடன், சமீபத்தில் பிரான்சில் உள்ள, மலைகள் சூழ்ந்த சுற்றுலா தலத்துக்கு சென்றிருந்தார்.கதேயின் பெற்றோரும் வந்திருந்தனர். இவர்களுடன், சிறப்பு அழைப்பாளர்களாக பிப்பாவும், அவரது மனம் கவர்ந்த ஜார்ஜ் பெர்சியும் வந்திருந்தனர். இருவரும், பனி மலைகளில், ஆசை தீர, பனிச் சறுக்கு விளையாடி மகிழ்ந்ததை, வில்லியம், கதே உள்ளிட்டவர்கள், பார்த்து கைதட்டி, ரசித்தனர். கதே வீட்டில், விரைவில், 'டும், டும்' சத்தம் கேட்கப் போவதாக, பிரிட்டன் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.— ஜோல்னா பையன்.