கனவுத்தோட்டம் (4) - சோற்றுக் கற்றாழை!
பார்க்க அழகாய் இருக்கோ இல்லையோ, நம்மை அழகாய் வைக்க உதவும் செடி, இந்த கற்றாழை. அழகோடு ஆரோக்கியத்தையும் தரும் போது, இந்த குற்றுச்செடியை வளர்க்கலாமே! கற்றாழை செடிக்கு, குறைந்த அளவு சூரிய ஒளி இருந்தாலே போதும். ஜன்னல் ஓரத்தில், ஜன்னல் கம்பியில் என வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் போதுமானது. செடியின் அடிப்பாகத்தில் வெள்ளை நிறத்தில் மெலிதாய் ஒரு படலம் இருக்கும். அப்பகுதி வரை துண்டாய் வெட்டி, 12 நாட்கள் உலர வைத்து, அந்த துண்டிலிருந்து சாறெல்லாம் உலர்ந்த பின், மண்ணில் நட்டு வைத்தால், ஒரு வாரம் கழித்து மெலிதாய் துளிர் விட ஆரம்பிக்கும். ரொம்ப எளிய வழி, அருகில் இருக்கும் நர்சரியில், 10- ரூபாய் கொடுத்து வேரோடு வாங்கி வந்து, தொட்டியில் வைத்து நீர் விட, வளர ஆரம்பித்து விடும். வழிய வழிய தண்ணீர் விட வேண்டியதில்லை. தோட்ட மண், தேங்காய் நார் மற்றும் எரு உரம் ஆகியவற்றின் கலவை இதற்கு போதுமானது. வேர்கள் ஊடுருவி நன்கு வளர, மண் தளர்வாக இருக்க வேண்டும்.இயற்கை வயகாரா என்று சொல்லக் கூடிய சோற்றுக் கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை, பேய் கற்றாழை மற்றும் ரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன.யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்... பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோறாக சாப்பிட கிடைத்ததால், இதற்கு சோற்றுக் கற்றாழை என, பெயர் வரக் காரணமாம். சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி, அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி, பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும். நறுக்கும் போது சொட்டும் மஞ்சள் நீர் முழுவதுமாக வடியும் வரை கழுவ வேண்டும்.இதில், அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், கழுவாமல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அதிகாலையில் உண்டு வர, வயிற்று புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும். பத்து நாட்கள், காரம்,புளி, உப்பு நீக்கி, அரை உப்புடன் உணவு உண்ண வேண்டும். வயிற்றுப்போக்கை குறைக்கவும் உதவுகிறது, சோற்றுக் கற்றாழை சாறு. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதோடு, உடல் எடையையும் ஒழுங்குபடுத்தும். மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால், மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் கட்டுப்படுத்தப்படுகிறது.பல காரணங்களால் மனித உடலில் புற்றுநோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக் கூடிய அபாயம் உள்ளது. இந்த கொடிய செல்களை அழித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆற்றல், கற்றாழைக்கு உண்டு. காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி, அதிக அளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். மாலை நேரத்தில் இந்த செடிகளுக்கு மத்தியில் ஒரு நடை நடந்துவிட்டு வாருங்கள். கண்களுக்கும் குளிர்ச்சி, மனதுக்கும் இதம், உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். கசப்பே இல்லாமல் கமகம வாசனை மற்றும் பல நன்மைகளை தரக்கூடிய புதினா பற்றி அடுத்த இதழில்... - வளரும்.ம. வான்மதி