தலைமுறைகள்.... இடைவெளிகள்.....
''டேய் பிருத்வி... இப்பத்தான், சச்சின் பேட்டை சுழட்டி, 'கிரவுண்ட்'குள்ள வந்த மாதிரி இருக்கு, அவர் ரிட்டயர்மென்ட்டை என்னால, தாங்கிக்கவே முடியலடா,'' என்று, கண்ணாடியை கழட்டியபடி, ராகவன் சொன்னபோது, அவர் நிஜமாகவே, அழுவது போல் தோன்றியது.''தாத்தா... சும்மா ஓவரா பீல் செய்யாதீங்க. சச்சின் என்ன உங்க காலமா... நீங்க பிராட்மேன் காலத்து ஆளு... சும்மா சீன் காட்டிட்டு,'' என்றவன், தட்டிலிருந்த சமோசாவை எடுத்து, இரண்டாய் விண்டு, தாத்தாவிற்கு பாதியை தந்தான்.''சச்சினுக்கு ஏதுடா காலம்? அவர் காலத்தை கடந்தவர். உன்னோட பேரன் கூட, அவரைப் பத்தி சிலாகிச்சு பேசுவான்,'' என்று, கண்சிமிட்டி சொன்னார் ராகவன்.அவர் சொன்னதன் அர்த்தம் புரிபட, ''ம்ம்ம்... சச்சின், காலத்த கடந்து நிலைச்சு நிற்கணும்ன்னு, ஆசைப்படற மாதிரி தெரியலயே... உங்க பேர் தான் காலத்தை கடந்து வரணும்ன்னு ஆசைப்படுற மாதிரியில இருக்கு,'' என்று கூறினான். பிருத்வி,அவர்களுடைய அன்பு பரிமாற்றத்தை, அடிக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கருக்கு, அடிவயிற்றில் இருந்து, ஒரு கேவல் வந்து, நெஞ்சை அடைத்தது. மறு நொடி, இயலாமை, கோபமாய் வெடித்து, எழுதிக் கொண்டிருந்த பேனாவை சோபாவில் விசிறியடித்தவர், ''ராஜி... எங்க போன நீ? டிபன் எடுத்து வை,'' என்று, வீடே அதிரும்படி குரல் கொடுத்தார்.''எப்பயோ ரெடி,'' என்றவள், ''பிருத்வி வாடா... நீயும், அப்பா கூட வந்து சாப்பிடு,'' என்று, மகனை அழைத்தாள் ராஜி.''அம்மா... நானும், தாத்தாவும், பீச்சுக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வறோம்; வந்து சாப்பிட்டுக்கறேன்,'' கூலாய் மறுத்து விட்டு, நகர்ந்தான் பிருத்வி.''பீச்சுக்கா! இந்நேரத்துலயா... என்னப்பா இது, இந்த வீட்ல யாரும் சரியா சிந்திக்கவே மாட்டீங்களா?'' என்று, அப்பாவை பார்த்து, அலுப்பாய் கேட்டார் பாஸ்கர். உடனே, அம்மாவுக்கு முசுக்கென்று கோபம் வந்தது.''என்ன பாஸ்கி, அவர் என்ன சின்னப் புள்ளயா... நிக்க வச்சு கேள்வி கேட்குற? அவருக்கு, எல்லாம் தெரியும். நீ பேசாமலிரு.''பாஸ்கருக்கு எரிச்சலாய் இருந்தது. காலண்டரைப் பார்த்தான்; காலண்டரே கடிகாரம் போல், ஓடுவதாய் தோன்றியது. நிற்க, நடக்க, படுக்க, எதற்கும் நேரமில்லாத ஜீவனம். ஆனால், இந்த ஓட்டத்தை புரிந்து கொள்ளத்தான் வீட்டில் யாரும் இல்லை.''என்னங்க மணி பத்தாகுது... இன்னும் தூங்கலயா,''அருகில் வந்து அன்பாய் கேட்டாள் மனைவி ராஜி.''இல்ல ராஜி... கொஞ்சம் வேலை இருக்கு; முடிக்கணும். சரி, பீச்சுக்கு போன தாத்தாவும், பேரனும் வந்தாச்சா?''''ம்... வந்து, சாப்பிட்டு படுத்தாச்சு.''''ஏன் ராஜி, இந்த வீட்ல யாருக்கும், நான் தேவைப்படாமலயே போய்ட்டேன்ல.''''என்ன பேச்சுங்க இது, யார் அப்படிச் சொன்னா?''''உன் பிள்ளயும், மாமனாரும் சேந்துட்டு, இந்த வீட்ல அடிக்குற கொட்டத்த பாத்தியா... நான் நாயா, பேயா உழைக்கிறேன். ஆனா, நான் யாருக்கும் தேவையேயில்ல.''இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள் ராஜி. அவள், எது சொன்னாலும், அது பிரச்னையாகும். இது, இன்று நேற்றில்லை, பிருத்வி வளரத் துவங்கிய நாளில் இருந்து, அப்பா - பிள்ளை இருவருக்கும் இடையில், இந்த பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.எந்நேரமும் வேலை, பார்ட்டி, புரோக்ராம், என்று, நாள் முழுவதும் பரபரப்பாய் இருக்கும் பாஸ்கரனிடம், குழந்தை பிருத்விக்கு ஒதுக்க நேரமில்லாமல் போனது. தன்னுடைய, ஒவ்வொரு தேவைக்கும், அம்மாவை தூது அனுப்பியே நிறைவேற்றிக் கொண்டான் பிருத்வி.அவன் எட்டாவது படிக்கும்போது, தாத்தா ராகவன், பணி ஓய்வு பெற்று, பாட்டியுடன் இவர்களுடைய வீட்டில் வந்து தங்கினார். அதன் பின் தான், பிருத்வியின் வாழ்க்கையே மாறிப் போனது.பாட்டி நிறைய கதை சொன்னாள்; ஓரிகாமி கற்றுத் தந்தாள். தாத்தாவும், பாட்டியும் பிருத்வியுடன், தேவைப்பட்டதும், படாததுமாய் நிறையப் பேசினர். எப்போதும், தன்னுடைய ஒவ்வொரு காரியமும், மற்றவர்களால் வியந்து பார்க்கப்படுவதுதான் குழந்தைகளின் விருப்பம். தனக்கான ரசிகர்களாக தாத்தாவும், பாட்டியும், மாறியதில் இருந்து, பெரிய தன்னம்பிக்கையுடன் வலம் வந்தான் பிருத்வி.அதன் பின், அவனுடைய செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள். படிப்பிலும், பேச்சிலும் நல்ல முன்னேற்றம். துளித்துளியாய் அவனுடைய உலகம் முழுக்க தாத்தா, பாட்டியுடையதாகி விட்டது. இந்த மாற்றங்களை, கவனிக்கிற நிலையில் பாஸ்கரனும் இல்லை''என்னங்க... பிருத்வி இன்டர்வியூ போகணும்ன்னு சொல்றான்; 2000 ரூபா வேணுமாம்.'' மெதுவாய் கேட்டாள் ராஜி.'சுர்'ரென்று, கோபம் வந்தது பாஸ்கருக்கு. 'ஏன், இதக்கூட, அவன் வந்து கேட்கக்கூடாதா...' என்ற, 'ஈகோ' எட்டிப் பார்த்தது.''ஏன் துரை, அவர் வந்து கேட்க மாட்டாராமா... எதுக்குமே, நான் தேவைப்படாத போது, இதுக்கு மட்டும் நானெதுக்கு, அவனையே ஏற்பாடு செய்துக்க சொல்லு,''என்று, எகிறி குதித்தார்.சோபவில் பாஸ்கரனின் அருகில், அமர்ந்த ராகவன், ''பாஸ்கரா... எல்லாத்தையும் தப்பா பாக்காதே, உன்னால முடியலன்னா சொல்லு; நான் தந்துட்டு போறேன்,'' என்றார்.பிரச்னை ஏற்படக் கூடாது என்று தான், அப்படிச் சொன்னார் ராகவன். அது பாஸ்கரை இன்னும் சூடாக்கியது.''என்னடா இவ்வளவு நேரமாச்சே... நீங்களோ இல்லை அம்மாவோ, அவனுக்காக பரிஞ்கிட்டு வரலையேன்னு பார்த்தேன். அவன் எதுக்கும் எங்கிட்ட ஒட்டறதில்லையேன்னு உங்க யாருக்காவது கவலை இருக்கா... உங்க யாருக்குமே நான் தேவையில்லாத ஆளா போயிட்டேன்ல...'' பாஸ்கரன் மன வலியோடு பேசியபோது, யாருமே எதிர்த்து பேசவில்லை. பதில் பேசி, சூழலை ரசாபாசமாக்க யாரும் விரும்பவில்லை.இன்டர்வியூ சென்று வந்த பிருத்வி, தேர்வாகி கோல்கட்டாவிற்கு, ஒரு ஆண்டு, டிரெயினிங்கிற்காக கிளம்பிக் கொண்டிருந்தான். தாத்தாவும் - பாட்டியும், அவனுடன் தங்குவதற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.சேர்ந்தே இருந்தும், விலகி இருந்த மகன், தன்னைவிட்டு ஒரேடியாய் விலகிப் போகப் போகிறானே என, எண்ணியப்படி, வாசலில் பூக்களை அள்ளித் தெளித்திருந்த நித்தியமல்லிச் செடியின் கிளைகளை, வெறுமையாக பார்த்துக் கொண்டு, சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார் பாஸ்கர்.''பாஸ்கரா... பனி கொட்டுது, ஏன் இப்படி பனியில் படுத்துருக்க?'' என்று கேட்டபடி அருகில் வந்தார் அப்பா.அவரைப் பார்க்க விரும்பாமல், வேறுபக்கம் தலையை திருப்பிக் கொண்டார் பாஸ்கர்.''இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த, 'ஈகோ' சண்டைய தொடரப் போற?'' என்று, மென்மையாய் கேட்டார் அப்பா.''யாரு நானா... 'ஈகோ' சண்டை போடறேன்? நீங்க தான் உங்க பேரன் கூட சேர்ந்துக்கிட்டு, என்னை அப்படி நடத்தறீங்க... நான் தெரியாம தான் கேட்கறேன்... நான் இல்லாம, அந்தப் பேரன் எங்கிருந்து வந்தான்? அவன் கூட சேர்ந்துட்டு, என்னை ஒதுக்குறீங்களே,'' என்றார் ஆற்றாமையுடன் பாஸ்கர்.இதைக் கேட்டதும், ராகவன், வாய்விட்டு சிரித்தார்.''அதையேதான், நான் கேட்குறேன்... நான் இல்லாம, நீ எங்கிருந்து வந்தே... நீ மரத்துல, எத்தனை பழம்ன்னு பாக்குற... நான் பழத்துல, எத்தனை மரம்ன்னு பாக்குறேன். உன் வயசுல, நானும் இப்படித்தான் இருந்தேன். என் வயசுல, நீயும் என்னை மாதிரி தான் இருப்பே. அதனால, எனக்கு, உன்னை பத்தி கவலை இல்லை,'' என்று கூறி, மகனின் தலையை, வருடிக் கொடுத்தார்.பாஸ்கருக்கு அப்பாவிடம் நிறைய பேச வேண்டும் போல் தோன்றியது. எழுந்து உட்கார்ந்தவர், ''இங்கயே எங்கிட்ட ஒட்ட மாட்டேங்கறான். நாளைக்கு கோல்கட்டா கிளம்ப போறீங்க... இனிமே, அவன் எங்கிட்ட எப்ப ஒட்டி, உறவாடி... எனக்கு நம்பிக்கையே இல்லப்பா... எல்லாம் அலுத்துப் போச்சு. இந்த அம்பது வயசுல, எதை நோக்கி ஓடறோம், யாருக்காக ஓடறோம்ன்னு தெரியல. பத்து புள்ளையா இருக்கு எனக்கு? ஒரு புள்ளை, அதுவும் அணில் பிள்ளைன்னு ஆகிருச்சு.''நிதானமாய் மகனின் முகம் பார்த்தார் அப்பா.''இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி, இதே கவலைல தான், நானும் இருந்தேன்னு சொன்னா நீ நம்புவியா? அப்போ, உன்னால இதை உணரக் கூட முடியல,''என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.''நானா... பிருத்வி மாதிரியா, இருக்கவே இருக்காது அப்பா.''''ஆனா, அதுதான் உண்மை; ஏன்னா, அப்போ நான் உன்னை மாதிரி தான் ஓடிட்டு இருந்தேன். பணம் ஈட்டுறதும், பணம் ஈட்ட கத்துத் தர்றதும் மட்டுமில்ல ஒரு தந்தையோட கடமை. அன்பு, அரவணைப்பு, தோழமைங்கற பெரிய விஷயத்தை எல்லாம் கூட கத்துத் தரணும்கறதை, நான் அப்ப உணரவேயில்லை. இதையெல்லாம் உங்கிட்ட காட்டின, எங்கம்மா அதாவது உன் பாட்டிக்கிட்ட ஒட்டிகிட்ட. நீ வளர வளர, என்னைவிட்டு விலகிப் போனதை தாங்காம, நான் தவிச்சப்ப, எங்கம்மா எனக்கு சொன்ன ஆறுதலைத்தான், இப்ப, நான் உனக்கு தர்றேன். கவலைப்படாத... அவன் அப்பா ஆகும் போது, தன் அப்பாவுடைய வலி புரியும். நீ தாத்தா ஆகும் போது, உனக்கும், உன் மகனுக்குமான இடைவெளி குறையும்,''என்றார்.''அப்பா...'' என்று ஏதோ சொல்ல தவித்தார் பாஸ்கரன்.''உண்மைதான்ப்பா. தாத்தா என்கிற உறவு, மகனுக்கும், பேரனுக்கும் இடையிலான ஒரு பாலம். நான் அப்பாவா இருந்தப்போ, என் மகன் எனக்கு அடங்கி இருக்கணும்ன்னு நினைச்சேன். நான் தாத்தாவா ஆனப்போ, என் பேரனுக்குள்ள நான் அடங்கணும்கற அன்பு மட்டும் இருக்குது. அந்த அன்பினால தான், என்னால அவனோட கலக்க முடியுது. அவனுக்கு பிடிச்சத பேசி, அவனோட விளையாடி, என்னுடைய, 'ஈகோ'வெல்லாம் பொடிப்பொடியாக, நானே அவனாக முடியுது. எப்பவும் இடைவெளிய குறைக்க ரெண்டு ஆயுதம்தான் உலகத்துல இருக்கு. ஒண்ணு பேச்சு, இன்னொன்ணு மவுனம். அவன் பேசும்போது, கேட்க மவுனமாக இருக்க தயாரா இருந்தா, எல்லாம் சரியாகும்.''அப்பா, பேசப்பேச பாஸ்கருக்கு அழுகை பீறிட்டது. பார்வையை வேறுபக்கம் திருப்பி, உணர்வை அடக்கினார்.''உன்னுடைய வருத்தங்கள் புரியுது... ஆனால், இடைவெளிகள் நிறைஞ்சு நிற்கிற நம்ம வாழ்க்கையில, நாம செய்ய வேண்டிய விஷயம் ஒண்ணே ஒண்ணுதான். எத்தனை வேலைகள் இருந்தாலும், குழந்தைகளோடு, நெருங்கி பழகணும் அதைவிட மிகப்பெரிய சம்பாத்தியம் உலகத்துல இல்லைங்கிற விஷயத்தை, நம்ம பிருத்விக்கு புரிய வைக்கணும். ஏன்னா, இருபத்தைஞ்சு வருஷம் கழிச்சு, நம்பளை மாதிரி, அவனும் வருத்தப்படக் கூடாதில்லையா...''வயது முதிர்ந்த தன் தந்தையின் கருணை மிகுந்த சொற்களை, கண்கள் பனிக்க கேட்டுக் கொண்டிருந்தார் பாஸ்கர். ஆனாலும், தனக்கும், தன் அப்பாவிற்கும் இடையேயுள்ள இடைவெளி குறையவே, இத்தனை காலமானது என்றால், தனக்கும், தன் மகனுக்கும் உள்ள இடைவெளி, எப்போது குறையும் என்று பெருமூச்சு வந்தது. ஆனால், குறையும் என்ற எண்ணமே நிம்மதியை தருவதாய் இருந்தது.எஸ். செண்பகவல்லி