பசுமை நிறைந்த நினைவுகளே... (8)
குற்றால டூரில் கலந்து கொள்ள விரும்பும் வாசகர்களின், முதல் தேடல், அன்றும் இன்றும் அந்துமணியாகவே இருந்தாலும், அவரை அடையாளம் காணும் வாய்ப்பு, அரிதானதே.கடந்த, 2013-ல் மட்டும்தான், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாார். ஆனால், 1992-ம் வருடம், வாசகர்கள், அவரை, அடையாளம் காணும் வாய்ப்பு கிடைத்தது, 'அது என்ன' என்பதை, இந்த வாரம் சொல்வதாக, கூறியிருந்தேன்.அந்த வாய்ப்பை சொல்வதற்கு முன், 1992-ம் ஆண்டிற்கு, ஒரு விசேஷம் உண்டு. அது என்னவென்றால், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் குற்றால டூர், அந்த வருடம், இரண்டு முறை நடை பெற்றது.ஜýலை மாதம், வழக்கம் போல டூர் நடந்து முடிந்தது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம், வழக்கமான நடைமுறைகளுடன், இன்னொரு டூரையும் நடத்தினார். எந்த டூர் என்றாலும், அந்துமணியின் நண்பர் கள், தவறாது ஆஜராகி விடுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு பெரிய பின்னணி இருந்தாலும், டூரை பொறுத்த வரை, குழந்தை களைப் போல மாறி, தத்தம் திறமைகளை வெளிப்படுத்தி, வாசகர்களை சந்தோஷப் படுத்துவர்.அவர்களில் சிலரைப்பற்றி...சுப்புராம் - மதுரையில் பிரபலமான கட்டடக் கலைஞர். இவருக்கு அருமையான குரல்வளம். தன் குரல்வளத்தால், குற்றால டூரின் போது, பாட்டுப்பாடி வாசகர்களை மகிழ்விப்பார். 'சுப்புராம் சார் இப்போது பாடுவார்' என்று, சொல்லி முடிப்பதற்குள், பி.பி.சீனிவாஸ் குரலில், 'மயக்கமா... கலக்கமா...' என்று பாட ஆரம்பித்து விடுவார். இப்போது, இப்படி கூச்சப் படாமல் பாடுபவர், முன்பு, இவரை பாட வைக்க படாதபாடுபட வேண்டும்; அவ்வளவு கூச்சப்படுவார்.'பாடுங்க சுப்புராம் பாடுங்க. உங்க பாட்டை கேட்க ஓடோடி வந்திருக்கோம்...' என்று, நண்பர்கள் ஒட்டுமொத்தமாய் வற்புறுத்தினாலும், 'எனக்கு இசைக்கருவிகள் இருந்தால் தான் பாடவரும்...' என்று சொல்லி, தவிர்க்கப் பார்ப்பார். உடனே, ஓடிப்போய் தபேலா, கொட்டு, மத்தளம் போன்றவற்றை கொண்டு வந்து, 'ம்...இப்ப பாடுங்க...' என்று சொன்னதும், 'இதெல்லாம் வேண்டாம்... எனக்கு, கடம் அதாவது, மண்பானை வேண்டும்...' என்பார். குற்றாலத்தை அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருந்த, தென்காசி தேவராஜன், உடனே, தென்காசியில் உள்ள மண்பானை வியாபாரியிடம் பானை வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டபோது, இரவு 10:00 மணி. 'காலையில் வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று பானைக்காரர் சொன்னபோது, 'அப்படி சொல்லாதீங்கய்யா. இது, பானை இல்லை. எங்களுக்கு கடம்...' என்று விவரித்து, அடம் பிடித்து, பானையை வாங்கி வந்தார். அதன் பின், பாட ஆரம்பித்தவர், இப்போது, எந்த இசைக்கருவியும் இல்லாமலே, டூரின் போது பாடிக் கொண்டிருக்கிறார்.இதே போல, டூரின் போது, ஒரு இடத்தில் கலகலப்பும், சிரிப்பும், வேடிக்கையும், விளையாட்டும் பொங்கி வழிகிறது என்றால், அங்கே சந்தேகமில்லாமல், பேராசிரியர் கண்ணன் இருக்கிறார் என்று அர்த்தம். மதுரை சமூகவியல் கல்லூரியில், முதல்வராக இருக்கும் இவர், டூருக்கு வந்துவிட்டால், மூன்று நாட்களும், மூன்று நிமிடங்களாய் பறந்துவிடும். கண்ணன் என்ற பெயருக்கு ஏற்ப, கண்ணும், கன்னமும் சிரிக்க இவர் நடத்தும், வேடிக்கை விளையாட்டுக்களில், மனம் பறிகொடுக்காதவர் யாரும் கிடையாது.இதே போல, அந்துமணியின் மற்றுமொரு நண்பர் அழகுராஜா. தற்போது, ஆஸ்திரேலியாவில் வழக்கறிஞராக இருக்கும் இவர், அந்துமணியின் அன்பிற்கு கட்டுப்பட்டு, குற்றால டூரில் கலந்து கொள்வார். ஒரு முறை, திருப்பூரில், தினமலர் சார்பாக, 50வது சுதந்திரதின ஓட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து, பிரிவதற்கு முன், இவர் சொன்ன ஜோக்கை கேட்டு, வந்திருந்த அனைவரும் உருண்டு, புரண்டு, சிரித்தனர் என, கேள்விப்பட்டிருந்தேன். அதை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த லாட்ஜின் அறையில், இருந்த நண்பர்கள் எட்டு பேரும், சிரித்த சிரிப்பை கேட்டு, அக்கம் பக்கம் அறைகளில் இருந்தவர்கள், 'என்ன தூங்கவிடாமல் சத்தம் போடுகிறீர்கள்' எனக் கேட்பதற்காக, அறைக்குள் எட்டிப்பார்த்தவர்கள், அங்கு நடந்து கொண்டிருந்த நகைச்சுவை திருவிழாவில், தாங்களும் கலந்து கொண்டு நனைந்தனர். சிரித்து சிரித்து, 'இதற்கு மேல் முடியாது ஐயா... விட்டுருங்க...' என்று சொல்லி, கண்ணில் நீர் வடிய, தூங்கச்செல்லும் போது, அதிகாலை, 4:00 மணி. இப்படி விடிய விடிய சிரிக்கவைத்த சிரிப்புக்கு, சொந்தக்காரர்தான் அழகுராஜா.இது போக, கண்ணதாசன் பாடல்களின் களஞ்சியமான ரஷீத், வெட்ரன் விளையாட்டு வீரர் குணா, மதுரை ஆட்டோ கண்ணன், திருச்சி சுந்தர், பாலு என்று நீண்ட பட்டியல் உண்டு.இவர்கள் எல்லாருமே, 92-ம் ஆண்டில் முதல் டூருக்கு வந்து, இரண்டாவது டூரில் வர சாத்தியப்படாத போது, அந்துமணியே தனியாக, டூரை, 'லீட்' செய்தார். தனியாக இருந்து சாதிப்பது என்பது, அவருக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போன்றது. ஆகவே, 'எடு வண்டியை, விடு குற்றாலத்திற்கு...' என்று வந்துவிட்டார்.ஆக, இரண்டாவது டூரில், நானும், அந்து மணியும் மட்டுமே இருந்தோம். நான் யார் என்பது வாசகருக்கு தெரியும். என்னைத்தவிர, கூட இருந்த இரண்டாவது நபர் அந்துமணிதான். ஆகவே, வாசகர்கள் எளிதில் அறிந்து, நெருங்க, பழக, நிறையவே வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனரா... என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.குற்றாலமும்-பேரருவியும்...உலகம் முழுவதும் எத்தனையோ அருவிகள் இருக்கின்றன. அதில் சில, நயாகரா அருவியைப் போல் எட்ட இருந்து பார்க்க மட்டுமே முடியும். தவிர, அது, அச்சமூட்டும் அருவியும் கூட. கேரளாவில் உள்ள அதிராபள்ளி அருவி, கொடைக்கானல் போகும் வழியில் உள்ள எலிவால் அருவி போன்றவைகளை, தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்க முடியுமே தவிர, அதில் குளிக்கும் அனுபவத்தை பெற முடியாது.அந்த வகையில், பொதிகை மலையில் பிறந்து, பல்வேறு மூலிகைகளை தழுவியபடி விழும், குற்றால அருவிகளில் குளிப்பது, மனதிற்கு இதமாகவும், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி, ஆரோக்கியத்தை அள்ளித் தருகின்றது.குற்றால அருவிகளின் இருப்பிடம், தமிழக-கேரளா எல்லையை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை. இது தாமிரபரணி, சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு போன்ற ஆறுகளின் பிறப்பிடமாகவும் உள்ளது.குற்றாலத்தில் பேரருவி, சிற்றருவி, செண்பகா அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி போன்ற அருவிகள் உள்ளன. இது தவிர, தனியார் எஸ்டேட்டிற்குள், வந்து விழும் அருவிகள் தனி. இத்தகைய அருவிகளில், மக்கள் அதிகம் பயன்படுத்துவது மெயினருவி, பிரதான அருவி, பெரிய அருவி என்ற பெயர்களில் அழைக்கப்படும் பேரருவியாகும். காரணம், அணுகுவதற்கு எளிதாக இருப்பதால்.சுமார், 288 அடி உயரத்தில் இருந்து, பொங்குமாங்கடல் என்ற ஆழமான துறையில் விழுந்து, பொங்கி பரந்து விரிந்து விழுகிறது. அழகிய வளைவு (ஆர்ச்) உண்டு. இந்த ஆர்ச்சின், ஒரு பகுதி ஆண்களுக்கும், மற்ற பகுதி, பெண்களுக்கும் பிரித்து விடப்பட்டுள்ளது.'ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுகிறது; மக்கள் குளிக்க தடை...' என்று அவ்வப்போது, படத்துடன் செய்தி இடம் பெறுவது, இந்த அருவியே!எத்தனை முறை குளித்தாலும், அலுக்காத, அற்புதமான அருவி இது.***— அருவி கொட்டும்.எல். முருகராஜ்