உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... (23)

சென்னை, கோடம்பாக்கம் வாசகி, விஜயா சுப்பிரமணியன், 97-ம் ஆண்டு டூரில், தன் மூன்று வயது மகள் திவ்யலட்சுமியுடன் கலந்து கொண்ட போது, அந்த குழந்தை செய்த சேட்டைகளை, கடந்த வாரம் சொல்லியிருந்தேன், அந்த குழந்தை வளர்ந்து, தற்போது, 19 வயது கல்லூரி மாணவியாக, வெள்ளி விழா டூரில் கலந்து கொள்ள போவதை அறிந்து, 'இப்ப குழந்தையிடம் குறும்புகள் குறைஞ்சுருக்கா?' என்று, கேட்டதும், 'என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க... இப்ப அவ ரொம்ப சமர்த்து; நீங்களே பார்க்கத்தானே போறீங்க...' என்றார்.நாங்களும் பார்த்தோம்... உங்க வீட்டு எங்க வீட்டு சமர்த்து அல்ல; உலக மகா சமர்த்து என்பதை.காலை உணவு காரப்பணியாரம் என்றால், 'எத்தனை பணியாரம் என்று தெளிவா சொல்லுங்கள்...' என்பார். படகு குழாமில், மிதித்து ஓட்டும் படகில், சும்மா காலை வைத்துக்கொண்டு, 'ரொம்ப ஈஸியா படகு போச்சுல்ல...' என்பார், 'மிதிச்சவளுக்கு இல்ல தெரியும் வலி; சும்மா காலை வச்சுட்டு வந்தா அப்படித்தான் இருக்கும்...' எனறார், அவருக்கு கம்பெனி கொடுக்கபோய், கால் வீங்கி திரும்பிய சிவகாசி பானுமதி.பூங்காவில், 'சிறுவர்கள் மட்டும் ஊஞ்சல் ஆடலாம்' என்று போட்டிருந்த போர்டின் மீது, ஒரு துண்டை போட்டு மூடிவிட்டு, ஆடிய ஆட்டத்தில், எங்கே ஊஞ்சல் அறுந்துவிடுமோ என்று அனைவருமே பயந்து போயினர். அதே நேரம், இவ்வளவு உயரத்திற்கு போய் ஆட முடியுமா என்று வியந்தும் பார்த்தனர். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'என்னோட இந்த ஆட்டத்துல மோதி ஜெயிக்க யாருக்காவது தைரியம் இருக்கா...' என்று கேட்டு அனைவரையும் உசுப்பேத்தி விட்டுட்டார்.தோற்பது மட்டும் இல்லாமல், முதல் நாள் பெய்த மழையால் சேறும் சகதியுமாக கிடந்த மண்ணில், தவறி விழுந்தால், துணியெல்லாம் கறையாகிவிடும் அபாயமும் இருந்தது. ஆனாலும், திவ்யாவின் சவாலை சந்தித்தே தீர்வது என்ற முடிவுடன், அங்கு கூடியிருந்த நண்பர்கள் பலரும், மீசையை முறுக்கியபடி, திவ்யாவுடன் போட்டியிட்டு புறமுதுகிட்டு திரும்பினர்.'ஏன் தாயி, நான் உன்கூட போட்டி போடலாமா?' என்று அப்பாவித்தனமாக கேட்டு, ஊஞ்சல் விளையாட்டில், திவ்யாவை தோற்கடித்து, அங்கு குழுமியிருந்த ஆண்குலத்தின் புகழை காப்பாற்றினார் ஒருவர், அவர் வேறு யாருமல்ல அந்துமணியேதான். அதற்குப்பிறகுதான் ஊஞ்சலைவிட்டே இறங்கினார் திவ்யா. அவர் இறங்கியதும், ஓடிப்போய் ஊஞ்சலை சுருட்டி, பத்திரப்படுத்திய பூங்கா வாட்ச்மேன், டூர் முடியும் வரை, அந்த ஊஞ்சலை கீழே இறக்கவேயில்லை.இதெல்லாம், திவ்யாவின் குறும்பிற்கான சாம்பிள்கள்தான். அதற்கு முன், 97-ல் வந்த யாஸ்மின் பற்றி, சொல்லியாக வேண்டும்.வழக்கமாக கூப்பன் அனுப்பும் வாசகர்கள், தாங்கள் நீண்ட கால வாசகர்கள் என்றும், தங்களது தாத்தா காலத்திலிருந்தே தினமலர் மட்டுமே வாங்குவதாகவும், வாரமலர் இதழை பார்க்காமல் ஞாயிற்றுக்கிழமை விடியாது என்று தினமலர் மற்றும், வாரமலர் இதழுக்கும் இடையே உள்ள தங்களது நேசத்தையும், பாசத்தையும் கூப்பன் ஒட்டிய கடிதத்தில் எழுதி வெளிப்படுத்தி இருப்பர்.இந்நிலையில், மூன்றாவது வாரம், மூட்டை மூட்டையாக வந்த டூர் கூப்பன் ஒன்றில், பெறுநர் விலாசத்தில், அந்துமணியின் அந்த வார கேள்வி - பதில் பகுதியில் இடம் பெற்றிருந்த, 'மாஸ்க்' போட்ட படம் ஒட்டியிருந்தது. அனுப்புனர் பகுதியில், புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு, விலாசம் கிறுக்கப்பட்டு இருந்தது.உள்ளே, 'நீங்க உங்க ஊழியர்களை, வாசகர்கள் என்ற பெயரில் கூட்டிக்கொண்டு போகப் போறீங்க. இதுக்கு எதுக்கு விளம்பரம், கூப்பன் எல்லாம். எப்படியோ போங்க...' என்று எழுதி, இப்படிக்கு, யாஸ்மின் என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது.இருபத்தைந்து வருடங்களாக நடந்து முடிந்த குற்றால டூரில், இதுவரை, 375 தினமலர் - வாரமலர் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஆண்கள், 322 பேர்; பெண்கள் 428 பேர், குழந்தைகள் 67 பேர். இவர்களில் ஒரே ஒருவர் கூட தினமலர் ஊழியர்களோ, அவர்தம் குழந்தைகளோ கிடையாது. அந்த அளவிற்கு, இது முழுக்க முழுக்க வாரமலர் வாசகர்கள் மட்டுமே பங்கேற்கும் டூர். இதில், நூற்றுக்கு நூறு சதவீதம், உறுதியாக இருந்து, வாசகர்களுக்காவே, இந்த டூரை நடத்திக்கொண்டு இருக்கிறார் அந்துமணி.டூரில் தேர்ந்து எடுக்கப்படும் வரை, பல வாசகர்களும் நம்பிக்கை இல்லாமல்தான் இருப்பர். ஆனால், அவர்கள் எல்லாம் தேர்வாகி வந்து, பத்து, இருபது வருடமாக விடாமல் கூப்பன் போட்டு, தேர்வாகி வந்த வாசகர்களை எல்லாம் டூரில், சந்திக்கும் போதுதான், 'ஆகா... நாம நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு...' என்பதை புரிந்து கொள்வர்.அதிலும், மதுரையைச் சேர்ந்த ஒருவர், கடந்த இருபது ஆண்டுகளாக, கூப்பன் போட்டும் இதுவரை தேர்வாகவில்லை.ஆனால் மதுரையில் டூர் ஆரம்பிக்கும் ஒவ்வொரு வருடமும் தவறாது வந்து, ஒரு வாசகர் விடாமல் கைகொடுத்தும், கைகூப்பியும் மகிழ்ச்சியுடன் வாசகர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்பார். இன்னமும் சந்தோஷமாக வழியனுப்பி வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.அவர் யார் என்பதையும், விழுப்புரம் வாசகி யாஸ்மினை சந்தித்த சுவாரசியமான அனுபவத்தை யும், அடுத்த வாரம் சொல்கிறேன்.— அருவி கொட்டும்.குற்றாலமும்,பாலருவியும்...குற்றாலத்தில் இருந்து, 25 கி.மீ., தூரத்தில் உள்ளது பாலருவி. செங்கோட்டை- - கொல்லம் ரோட்டில், கேரள மாநில எல்லைக்குள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் இருந்து, 4 கி.மீ., தூரத்தில், இந்த அருவிக்கான பாதை துவங்கும். இந்த அருவி, பால் பொங்கி பெருகி நுரையுடன் வழிவதால், இதற்கு பாலருவி என்று பெயர்.ஆண்டு முழுவதும் இந்த அருவியில், தண்ணீர் விழும். குற்றாலத்தில் தண்ணீர் குறைவாக விழும் காலத்தில், இந்த அருவிக்கு மக்கள் படையெடுத்து செல்வர். 4 கி.மீ., தூரம், காட்டுப்பாதைக்குள் நடந்து செல்ல வேண்டும்.அமைதியும், பசுமையும் நிறைந்து காணப் படும், இந்த பாலருவி பகுதி, இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த பகுதியாகும். வழியில், நெளிந்து நெளிந்து பன்னீர் போல ஓடும் ஆற்றுத் தண்ணீரும்,தொலைவில் கேட்கும் அருவி சத்தமும் இனிமை சேர்க்கும். பெண்கள் தகுந்த துணை மற்றும் பாதுகாப்புடன் செல்வது நல்லது.கேரள வனத்துறை, இப்பகுதியை நன்றாக பராமரித்து வருகிறது. அனுமதி கட்டணம் பத்து ரூபாய்! கோடைகாலத்தில், விலங்குகள் தண்ணீர் தேடி வரும் என்பதால், அப்போது, இங்கு செல்ல அனுமதி கிடைக்காது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !