உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... (37)

கடந்த, 2000மாவது ஆண்டு மற்றும் வெள்ளி விழா ஆண்டுகளில், தன் மனைவி மீனாட்சியுடன் கலந்து கொண்ட வாசகர் ரவீந்திரன், எதிர்பாராதவிதமாக பர்சை தொலைத்ததும், அதை எடுத்தவர் கடிதத்துடன் திரும்ப கொடுத்ததையும், அப்படி திரும்ப வந்த பர்சில் எல்லாம் இருந்தது; ஆனால், பணம் ஐநுாறு மட்டும் இல்லை என்பதையும், சம்பவத்தை கேள்விப்பட்டு பர்சை வாங்கிப் பார்த்த அந்துமணி, திரும்ப தந்த போது அந்த பர்சினுள் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது என்றும், கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அந்த ஆச்சர்யம் வேறு ஒன்றும் இல்லை, காணாமல் போன ஐநுாறு ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் இருந்தது.எந்த வகையிலும் டூருக்கு வந்த வாசகர்கள் மனம் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்பதில், அந்துமணிக்கு இருந்த அன்பும், அக்கறையும் தான், அங்கே ஆயிரம் ரூபாயாக வெளிப்பட்டது.அப்படி கொடுத்ததையும் அப்பட்டமாக கொடுக்காமல், வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக யாருக்கும் தெரியாமல், பர்சுக்குள் பணம் வைத்து கொடுத்த விதத்தை நினைத்து, ஆச்சரியப்பட்டு போனார் ரவீந்திரன்.'அதை வெறும் ஆயிரம் ரூபாயாக பார்க்கவில்லை, வாசகர் மீது அவர் வைத்திருக்கும் அளவற்ற பாசத்தின் அடையாளமாகவே பார்க்கிறேன்...' என்று கூறி நெகிழ்ந்தார் ரவீந்தரன்.கடந்த, 2000மாவது ஆண்டில், டூருக்கு வந்த போது, ஒரு உயரதிகாரியாக மட்டுமே அடையாளப் படுத்தப்பட்ட ரவீந்திரன், இந்த முறை ஓவியராக, கவிஞராக, நல்ல தமிழ் ஆர்வலராக வெளிப்பட்டார்.மெயினருவியை எல்லாரும் கேமரா கண்ணால் படம் எடுத்த போது, இவர் அதை, முகக் கண்ணால் பார்த்து, அகக்கண்ணில் பதிவு செய்து, அப்படியே ஓவியமாக படைத்தார்.அதே போல மாலை நடைபெற்ற வாசகர் அரங்கத்தில், அவர் வாசித்த கவிதை இப்போதும் வாசகர் நெஞ்சில் நிழலாடுகிறது.அந்த வருட டூரில், ரவீந்திரனுக்கு அவர் வயதையொத்த ஒரு நண்பர் கிடைத்திருந்தார்.அவரது பெயர் தீனதயாளன். வேலூரில் கல்வி துறையின் முதன்மை பொறுப்பில் இருந்தார்.'அலுவலக பொறுப்பின் தன்மை காரணமாக அளவாக சிரித்து, அளவாக பேசி, அளவாக சாப்பிட்டு என்று, வாழ்க்கையை பல வருடங்களாக அளந்து அளந்துதான் வாழ்ந்து வருகிறேன்.'அலுவலகத்தை விட்டு, வீட்டிற்கு போனாலும், மனதால் அலுவலகத்தை சுமந்து செல்வதால், வீட்டிலும் என் நிலமை, அளவு கோலின்படியே அமைந்து விட்டது.'சப்தமிட்டு சிரிப்பதும், சந்தோஷம் வரும்போது பாடுவதும், அரட்டை அடிப்பதும், அலுவலக மொழியின்றி பேசுவதும் தப்பான விஷயம் போல மனதில் பதிந்து விட்டது.'எனக்கு தெரிகிறது நான் உணர்வும், உயிரோட்டமும் இல்லாத அரசு இயந்திரம் என்று...' தன்மனதில் உள்ளதை, நண்பரிடம் கொட்டிய தீனதயாளன், 'டூர் நடைபெறும் இந்த மூன்று நாட்களும், ஒரு சந்தோஷமான, சுதந்திர மனிதனாக இருக்கப் போகிறேன்...' என்று, சொன்னார்.அவர் சொன்னபடியே நடந்து கொண்டார்; அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், உணவு விஷயத்திலும் அவர் மேற்கொண்ட சுதந்திரம்தான் கொஞ்சம் விபரீதமாகி விட்டது.அது என்ன விபரீதம் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.குற்றாலமும், கிட்டப்பாவும்!சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும், சங்கீத மேதையாகவும், தேசியவாதியாகவும் திகழ்ந்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா என, அழைக்கப்பட்ட, செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா. இவர், ஆகஸ்டு 25, 1906ல் செங்கோட்டையில் பிறந்தார். தந்தை கங்காதரய்யர்; தாய் மீனாட்சி அம்மாள்.கிட்டப்பா, நாகூர் தர்காவின் ஆஸ்தான வித்வானும், இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் புலமை வாய்ந்தவருமான உஸ்தாத் தாவுத் மியானிடம் இசை பயின்றார்.'காயாத கானகத்தே, கோடையிலே இளைப்பாற்றி' மற்றும் 'எவரனி' போன்ற பாடல்கள், கிட்டப்பாவின் பெயரை, இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.கடந்த, 1926ல் கிட்டப்பா கே.பி. சுந்தராம்பாளுடன் நடித்த நாடகங்கள் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்தன. இவர்கள் இருவரின் நடிப்பையும், பாடும் திறமை குறித்தும் அந்தக் கால பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாயின.ஏற்கனவே, திருமணமான கிட்டப்பாவை, கே.பி.சுந்தராம்பாள் விரும்பி மணந்தார். ஆனால், திரையுலக தம்பதிகள் பிரிவது என்பது, அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக, சில ஆண்டுகளில் பிரிந்து விட்டனர்.கடந்த, 1933 செப்டம்பரில் திருவாரூரில் கிட்டப்பா ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, மேடையில் மயங்கி வீழ்ந்தார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர், தன் 28வது வயதில் டிச., 2, 1933ல் இறந்து போனார்.தன், 28வது வயதில் இறந்து போனாலும், நூற்றாண்டை கடந்தும் அவரது பெயரை இங்கே உள்ளவர்கள் உச்சரித்துக்கொண்டு, இருப்பதற்கு காரணம், அவர், தன் நன்கொடையால் எழுப்பிய ஸ்ரீமூலம் வாசகசாலை என்ற நூலகம்தான்.ஆக, நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது பெரிதல்ல; வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதே பெரிய விஷயம்.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !