உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே (49)

கடந்த, 2002-ல் குற்றால டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும், அந்துமணியை சந்தித்து பேசுவதற்காகவே, கொடைக்கானலை தேர்வு செய்து, தங்கள் சொந்த செலவில் குடும்பத்துடன் வந்தனர். வந்தவர்களுடன் மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்த அந்துமணி, அவர்களிடம் விடை பெறும் போது, 'உங்கள் அனைவருக்கும் ஓட்டல் வரவேற்பறையில் ஒரு சந்தோஷம் காத்திருக்கிறது...' என்று சொல்லிச் சென்றார் என்று, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அது என்ன சந்தோஷம் என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஓட்டல் வரவேற்பறைக்கு சென்றனர்.அங்கே வாசகர்கள் தங்கியிருந்த அறை வாடகை மற்றும் மூன்று நாட்களுக்கான உணவு செலவு முழுவதையும் அந்துமணியே செலுத்தியிருந்தார்.இந்த செலவை தங்களுக்குள் பிரித்து செலுத்துவதாக இருந்த வாசகர்களுக்கு, இது அதிகப்படியான இன்ப அதிர்ச்சியை தந்தது.குற்றால டூரின் பழைய கதையுடன், ஒரு புது கதையை இந்த வாரம் சொல்கிறேன். ஏனெனில் எனக்குள் சிரித்து சிரித்து வயிறு புண்ணான இந்த கதையை, உடனே சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும் என்பதால், இந்த வாரம் இந்த புதுக்கதை.இந்த ஆண்டிற்கான குற்றால டூர் வாசகர்கள் ஒவ்வொருவரையும் தேடிச்சென்றது ஒரு இனிய அனுபவம் என்றாலும், தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள பள்ளிப்பட்டில் வசித்து வந்த அழகு கலை நிபுணரான வாசகி லதாவை தேடிச் சென்றது மறக்க முடியாத அனுபவம்.சென்னையில் இருந்து திருத்தணிக்குள் சென்று பின், ஆர்.கே.பேட்டை வழியாக பள்ளிப்பட்டு செல்ல வேண்டும். ஆனால், கார் டிரைவர் பழனிக்கு ஊரும் புதுசு; தொழிலும் புதுசு. ஆகவே திருத்தணிக்கு போவதற்கு பதிலாக திருப்பதி செல்லும் ரோடை பிடித்து விட்டார்.'நீங்க ரொம்ப நல்லவரு சார்; நான் டிரைவிங்கிற்கு வந்த உடனேயே தொலைதூர சவாரி கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்; உங்கள மறக்கவே மாட்டேன்...' என்றபடி காரை ஓட்டிச் சென்றார்.கொஞ்ச தூரம் சென்றதும், ஜிலேபியை பிய்த்து போட்டது போல, ஊர் பெயர் பலகை ஒன்று வரவும், டிரைவர் பழனி முகத்தில் கலவர ரேகை படர்ந்தது. 'சார் நாம எங்கேயோ போய்க்கிட்டு இருக்கோம்...' என்றார். வாசகி லதாவிற்கு போன் செய்து விசாரிக்க, 'நீங்க நகரி ரூட்ல சுத்திக்கிட்டு வர்ரீங்க; அந்த ரூட்டு கொஞ்ச தூரம் ஆந்திராவிற்குள் போய், பின் தமிழ்நாட்டுக்குள் வரும்...' என்றார்.விஷயத்தை சொன்னதும், டிரைவர் அலற ஆரம்பித்தார். அதற்கேற்ப மறைந்த ஆந்திரா முதல்வர்கள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்,ராஜசேகரரெட்டி ஆகியோர் சிலைகள் வரவே, அழவே ஆரம்பித்து விட்டார் டிரைவர் பழனி.'காரை ஆந்திராவிற்குள் ஓட்டு வதற்கு அனுமதியில்ல சார்; பிடிச்சா அபாரதம் போடுவதுடன் காரை ஸ்டேஷனுக்கு       கொண்டு போய்டுவாங்க என் வேலையே போய்டும்; பழையபடி கிராமத்துக்கு போகவேண்டியதுதான். ஐயோ... ரோட்ல பாக்கிற ஆளுக எல்லாம் ஆர்.டி.ஒ., ஆபிஸ் ஆளுக மாதிரியே இருக்காங்காங்களே... நீங்க ரொம்ப மோசமான ஆளு சார்...' என்றெல்லாம் புலம்பிக்கொண்டே வந்தார்.'சரி தைரியமா வண்டிய ஓட்டுங்க; யார் போன் செய்தாலும் உடனே எடுத்துருங்க. முக்கியமா உங்க கம்பெனியில இருந்து போன் செய்தா ஒரே ரிங்ல எடுத்துருங்க; இல்லைன்னா நீங்க கூப்பிட்ட நம்பர் பிசின்னு தெலுங்குல சொல்லி, உங்கள காட்டிக் கொடுத்துடும்...' என்றவுடனேயே, 'இவ்வளவு கலவரத்திலும் எப்படி சார் நிதானமா யோசிக்கிறீங்க... நீங்க மெய்யாலுமே நல்லவரு சார்...' என்றபடி நகரிக்குள் போய், பாலத்தை கடந்து, எம்.ஜி.ஆர்., திருவள்ளூவர் சிலையை பார்த்த பின் தான் அவருக்கு மூச்சே வந்தது.பள்ளிப்பட்டு லதா சொன்ன அடையாளப்படி காஞ்சிபுரம் கூட்டுறவு பாங்க் அருகில், மாடியிலிருந்த அழகு நிலையத்திற்கு போன போது, அது, வாசகி லதாவிற்கு போட்டி அழகு நிலையம் என்று தெரியாமல் போனது.ஆந்திராவிற்கே உரிய பெரிய அகலமான சிவப்பு குங்கும பொட்டு வைத்திருந்த, ஐம்பது வயதைக் கடந்த கனத்த சரீரம் கொண்ட அம்மையார், வாயில் சீப்பை கவ்வியபடி, ஒரு வாடிக்கையாளரின் முடியை எண்ணி எண்ணி, ஒதுக்கிக்கொண்டு இருந்தார்.அவரைப் பார்த்து, 'நீங்க லதா தானே...' என்றேன். அந்த பெயரைக் கேட்டதும், உடனே கோபத்துடன், 'இல்லை...' என்றவர், அடுத்த கேள்வி கேட்பதற்குள், 'நான் லதா இல்லைன்னா அப்ப உங்க பெயர் என்னன்னு கேட்பீங்க; பிறகு உங்க நம்பர் என்னன்னு கேட்பீங்க. அப்புறம் கடன் வேணுமா, கார்டு வேணுமான்னு கேட்டு தொல்லை செய்வீங்க; எனக்கு வேலை இருக்கு கிளம்புங்க...' என்றார்.வாசகி லதாவிற்கு போன் செய்து, இருக்குமிடத்தை சொன்னதும், 'நீங்க சைடுல போய்ட்டீங்க; எதிர்ல வாங்க...' என்றார்.எதிரில் கொஞ்சம் தள்ளியிருந்த கட்டடத்தின் மாடியில், ஒரு அழகு நிலையம் இருந்தது; அங்கு சென்றால் அடுத்த அதிர்ச்சி.அரைகுறையாய் காய்ந்திருந்த பேஷியல், வறண்டு வெடிப்புகளுடன் முகத்தில் இருக்க, கண்களுக்கு மேல் வெட்டிவைத்த வெள்ளரிகாய்கள் பயமுறுத்த, தலை முடியில் கலர் கலராய் கிளிப்புகள், எந்த நிறத்திலும் சேர்த்தியில்லாத உதட்டுச்சாயம், கழுத்தைச்சுற்றி கறுப்பு போர்வையுடன் ஒரு பெண்மணி அழகு நிலைய நாற்காலியில் முற்றுப்பெறாத அழகு(?)டன் சாய்ந்திருந்தார்.வெயிலில் இருந்து திடீரென இருட்டான அறைக்குள் போனதும், இப்படி ஒரு காட்சியை பார்த்ததால் இதயம் வேகவேகமாக துடித்து, உடம்பு வியர்த்து, மயக்கம் வரும் போல் இருந்தது. இந்நிலையில், வாசகி லதா, 'வாங்க வாங்க...' என்று சொல்லி, அந்த அமானுஷ்ய சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றி வெளியே அழைத்து வந்தார்.கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலமாக, குற்றால டூருக்கு கூப்பன் போட்டு வருகிறாராம் லதா. இந்த முறை கூப்பனை வெட்டி போஸ்ட் கார்டில் ஒட்டி, தன் கணவர் ரவியிடம் கொடுத்த போது, 'நீ பண்றது வெட்டி வேலைன்னா, (வெட்டி ஒட்டுற வேலை) கடந்த பதினைந்து வருடமாக நான் இதை கொண்டு போய் போஸ்ட் ஆபிசில் போடுறது அதவிட வெட்டி வேலை; அதனால, இதுதான் கடைசி...' என்று சொல்லி போட்ட போஸ்ட் கார்டு தேர்வானதில், லதா, தன் மகள் ஷில்பாவுடன் வந்திருந்தார்.அவர் வருவதற்கான செலவு பணம் கொடுத்து, டூர் பற்றிய விவரங்களை சொன்ன பின், 'என் அழகு நிலையம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...' என்று கேட்டார்.'அதுவா... வாசலில், 'ஆண்கள் அனுமதி பெற்று வரவும்'ன்னு எழுதி போட்டு இருக்கிறீங் கல்ல... அதுக்கு கீழே, 'இதய பலவீனமுள்ள ஆண்கள் அனுமதி கிடைத்தாலும் வர வேண்டாம்'ன்னு எழுதிப் போடுங்க...' என்று சொன்னதும் வாய்விட்டு சிரித்தவர், அந்த சிரிப்பை குற்றாலம் டூர் முழுவதிலும் சிதற விட்டார்.குற்றாலத்தில் வாசகிகள் பழம், பொம்மை, பொட்டு, கிளிப் என்று வாங்கிக் குவிக்க, இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகப்போகும் வாசகி லதாவின் மகளான, ஷில்பா வாங்கிய பொருளைக் கண்டு, அனைவருமே மிரண்டு விட்டனர். அது என்ன பொருள் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன். குற்றாலமும், சங்கராஸ்ரமும்...குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் நிறைய ஆஸ்ரமங்கள் இருக்கின்றன; அவற்றில் சங்கராஸ்ரமும் ஒன்று.இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய சுவாமி சங்கரானந்தா கடந்த, 1974-ல் சமாதியாகி விட்டார். அதன்பின் ஆஸ்ரமத்தை டிரஸ்ட்டாக்கி நிர்வாகித்து வருகிறார் சிவராமகிருஷ்ணன்.இந்த ஆஸ்ரமத்தில் தீபமில்லை-தூபமில்லைசூடமில்லை - சாம்பிராணி வாடையில்லைமணியோசையில்லை - மந்திரம் ஒலிப்பதில்லைஜாதியில்லை - மதமில்லை - சமயபேதமில்லைமாலை மரியாதையில்லை - மயக்கு மொழி வார்த்தையில்லைபூரண கும்பமில்லை - பரிவட்டம் இல்லவேயில்லைதேவை என்று வந்தவர்க்கு இல்லையென்று சொல்லாமல், சித்த வித்தையை கற்றுத் தருவதிலோ பஞ்சமில்லை.இந்த சித்த வித்தை என்பது, மூச்சை வசமாக்கி வளமாக வாழ்வதற்கான பயிற்சி தான். இதனை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அசைவம் மற்றும் போதை வஸ்துகள் உபயோகிக்கும் பழக்கம் இருக்கக்கூடாது.இந்த ஆஸ்ரமத்தில் வாழ்பவர்கள், 'இதோ என் வீடு; அதோ என் கார்...' என்பது போல, 'இதோ எங்கள் சமாதி...' என்று தங்களுக்கான சமாதியை காட்டுகின்றனர்.இங்கே, 'டிவி' கிடையாது; போன் எடுக்காது.அமைதியான, ஆனந்தமான ஆன்மிக வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது சங்கராஸ்ரமம்.— அருவி கொட்டும். -எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !