உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே! (53)

நடந்து முடிந்த குற்றால டூரில் கலந்து கொண்டு, சுவாரசியம் ஏற்படுத்திய வாசகர்களின் வரிசையில் இந்த வாரம் வழக்கறிஞர் செந்தில்குமார் அறிமுகமாகிறார்.வெகுளி, வெள்ளந்தி என்ற வார்த்தைக்கு முழு சொந்தக்காரர்.கல்லூரியில் பேராசிரியை யாக இருக்கும் புனிதா என்ற மனைவியும், அஸ்வத் என்ற மகனும், வினோதா என்ற மகளும் உள்ளனர்.டூர் ஆரம்பம் முதலே படு சுறுசுறுப்பாக இருந்த இவர், மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார்.டூர் துவங்குவதற்கு முதல் நாள் மாலைக்குள் அனைவரும் மதுரைக்கு வந்துவிட வேண்டும்; ஆனால், தவிர்க்கமுடியாத வேலை காரணமாக நள்ளிரவு,௨:௦௦ மணிக்குதான் இவர் குடும்பத்தோடு வந்தார்.புறப்பட்டு வரும்போதே, 'லைவ் ரிலே' போல, 'நாங்க இப்ப இங்க வந்துகிட்டு இருக்கோம்; எந்த மோட்டல்லேயும் பஸ்ச நிப்பாட்டமாட்டேங்கிறாங்க...' என்றார். உடனே நமக்கு புரிந்து விட்டது...'சார் பசியோடு வந்துகிட்டு இருக்கிறார்'ன்னு. 'கவலைப்படாதீங்க... இரவு உணவ உங்க ரூம்ல எடுத்து வச்சுட்டாங்க...' என்றதும், 'அப்படியா... ரொம்ப நன்றி சார்...' என்றார்.மறுநாள் பஸ்சில் வாசகர்கள் பேச ஆரம்பித்ததுமே, செந்தில்குமார் இதைத்தான் தன் முதல் பேசு பொருளாக வைத்துக் கொண்டார்.'இரவு அறையில சாப்பாடு இருக்கும்ன்னு தெரியும்; ஆனால், 'ஹாட்பேக்'கில், எளிதில் ஜீரணமாகக்கூடிய இடியாப்பமும், இட்லியும், பக்கத்திலேயே குடிப்பதற்கு இரண்டு மினரல் வாட்டர் பாட்டிலும் இருக்குங்கிறத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இதுக்கு நான் அந்துமணி சாருக்கு நன்றி சொல்லியே ஆகணும்... எங்கே அவர்?' என்று கேட்டு எழுந்து நின்றார்.'அவரைத்தானே எல்லாரும் தேடிக்கிட்டு இருக்குறாங்க; நீங்க எங்கேன்னு கேட்டவுடனேயே கொண்டு வந்து நிறுத்தப் போறாங்களா என்ன... அடங்குங்க...' என்று அவரது மனைவி புனிதா சொன்னதும், அடங்கித்தான் போனார். ஆனால், அந்த அடக்கம் ஐந்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவரே எழுந்து, 'என் சம்சாரம் நல்லா பாடுவாங்க...' என்று சொல்லி, அவர் பாடுவதற்கு முன் கை தட்டினார்.குற்றாலம் தன் வரலாறில் ஆடியபடி குளித்தவர்களை பார்த்து இருக்கலாம்; பாடியபடி குளித்தவர்களை பார்த்து இருக்கலாம்.. ஆனால், பல்டியடித்தபடி குளித்தவரை இப்போது தான் முதல் முறையாக பார்த்து இருக்கும்.ஐந்தருவியை பார்த்த மாத்திரத்தில், பல்டியடித்தபடி அருவிக்குள் பாய்ந்தார் செந்தில்குமார். அருவியில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள், 'யார் இப்படி என்ட்ரியாவது...' என பயந்து, வழிவிட்டு விலகினர்.அடுத்து மெயினருவியில் நுழைந்ததுமே இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு பஞ்சாபியரின், 'பலே.. பலே...' பாணியில் நடனமாடியபடி குளித்தவரை பார்த்த மற்றவர்கள், மெயினருவியில் குளிக்கும் போது இப்படி கையை உயர்த்திக் கொள்ளணும் போலிருக்கு என்று அனைவரும் கைகளை உயர்த்தியபடி குளித்து களித்தனர்.அடுத்த அருவி போவதற்குள், அருவியில் வாசகருக்கு தனி மரியாதையை தேடி தரும் சிவப்பு வண்ண பனியனின் மகிமையை உணர்ந்து கொண்டார். பழைய குற்றால அருவி போனதும், நேராக இன்ஸ்பெக்டரிடம் போய், 'தினமலர் - வாரமலர் வாசகர்கள் குற்றால டூர் சிவப்பு பனியன்...' என்று கூறி, அவரிடம் பனியனை தூக்கிக் காட்ட, இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு நாம் தலையிட்டு விஷயத்தை சொன்னதும், 'ஐயாவிற்கு ரொம்ப ஆர்வம், அவசரம் போலிருக்கு...' என்று சொன்னதுடன் செந்தில்குமாரின் பேச்சில் கவரப்பட்டு, அவரை கையோடு அருவிக்கு குளிக்க கூட்டிச் சென்றார்.பழைய குற்றால அருவியில், ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்காக, நடுவில் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு இருக்கும். அந்த தடுப்புகளுக்கு நடுவே இரண்டு ஆள் நின்று குளிக்கலாம். ஆனால், போலீசார் யாரையும் குளிக்க அனுமதிப்பது இல்லை. அன்று அந்த இடம் செந்தில்குமாருக்கு சொந்தமாகி விட்டது. அவரை குஷியாக குளிக்கவிட்டு, சந்தோஷமாக வேடிக்கை பார்த்தார் இன்ஸ்பெக்டர்.கொஞ்சநேரம் தனியாக குளித்தவர் பிறகு, 'என் பிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க; அவுங்களோட குளிக்கணும்...' என்று பிரகாஷ் மற்றும் நாகராஜையும் கூப்பிட்டு அந்த இடத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டார்.வழக்கமாக யாராவது இப்படிச் செய்தால், அந்த இடம் கிடைக்காதவர்கள் பொறாமையால் காதில் புகைவர பார்ப்பர். 'எல்லாம் நேரம்யா...' என்று புழுங்கவும் செய்வர். ஆனால், செந்தில்குமார் ஆட்டம் போட்டபடி குளித்ததை பார்த்தவர்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டனர்.அப்படியொரு தோற்றம் செந்தில்குமாருக்கு! முகம் முழுவதும் சந்தோஷம் பொங்க, 'நீங்களும் வாங்க, நீங்களும் வாங்க...' என்று குளிக்கும் போதிலாகட்டும், சாப்பிடும் போதிலாகட்டும் ஒருவரையும் விட்டுத்தராமல் அழைக்கும் அந்த அன்பு குரலுக்கு எல்லாரும் சொக்கித்தான் போயினர்.ஆனால், அந்த அன்பு குரலை வைத்து யாராலும் மறக்க முடியாதபடி ஒரு குறும்பும் செய்தார்; அப்படி என்ன குறும்பு செய்தார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.— அருவி கொட்டும்.குற்றாலமும், சிற்றாறும்...குற்றாலம் மலையில் சுனையாக கிளம்பி, அருவியாக கொட்டி, பின் ஆறாக உருவெடுத்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீரைக் கொடுப்பதுதான் சிற்றாறு. இது, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்கும், இப்பகுதியின் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆதாரமாக விளங்குகிறது.கிட்டத்தட்ட, 80 கி.மீ., நீளத்திற்கு பயணித்து, 1,722 சதுர கி.மீட்டருக்கு பயன் தந்து, சீவலப்பேரி எனும் இடத்தில் தாமிரபரணியுடன் சந்தோஷமாக கைகோர்த்து கலக்கிறது.எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் ஒரு நதியை உருவாக்க முடியாது; அதன் பயன்களையும் செயற்கையாக ஏற்படுத்த முடியாது. நீங்கள் அதை ஆக்ரமித்தாலும், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை கொட்டினாலும், சாக்கடையை கலக்க விட்டாலும் கலங்காது. அது, மக்களுக்கு பயன் தந்துகொண்டுதான் இருக்கும்.எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !