பசுமை நிறைந்த நினைவுகளே! (56)
பெரம்பலூரில் இருந்து வாசகர் தம்பதியினரான வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான புனிதாவும் கலந்து கொண்டு தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியது பற்றி கடந்த வாரங்களில் கூறியிருந்தேன்.இதில், வழக்கறிஞராக இருந்தாலும், மிகுந்த அப்பாவியாக, குறும்புத்தனத்துடன் நடந்து, அனைவரது மனதையும் கவர்ந்தவரான செந்தில்குமாருக்கு தெரிந்த விவரம், அவரது மனைவிக்கு தெரியாதிருக்கலாம் என நினைத்து, ஊரில் இருந்து எப்படி வருவது என்பது போன்ற விவரங்களை அவரிடம் கூறியிருந்தேன்.டூருக்கு வந்த பிறகுதான் செந்தில்குமார் சூதுவாது தெரியாத அப்பாவி என்பது தெரியவந்தது. இதை எல்லாம் கவனித்த அந்துமணி, டூர் முடிந்து கிளம்பும் போது புனிதாவிடம், ' உங்களுக்கு எனது மூன்று விதமான நன்றிகள்...' என்றார்.'அதென்ன மூன்று விதமான நன்றிகள்...' என்று விளக்கம் கேட்டார் புனிதா.'டூரில் நீங்களும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தினீர்கள். அதற்காக முதல் நன்றி; இரண்டாவது நன்றி, உங்கள் குழந்தைகளுக்கு...' என்றார்.காரணம், புனிதா தன் இரண்டு குழந்தைகளை பிரிந்து எங்குமே சென்றதில்லை. டூரில் குழந்தைகளுடன் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தவுடன், குழந்தைகளை எப்படி விட்டு வருவது என்ற தயங்கினார்.'எப்போதும் படிப்பு, வேலைன்னு இருந்தீட்டீங்கம்மா; கொஞ்ச நாள், 'ரிலாக்சா' போய்ட்டு வாங்க; நாங்க எங்கள பாத்துக்குவோம்...' என்று அம்மாவிற்கு தைரியம் சொல்லி, அனுப்பி வைத்ததே இந்த குழந்தைகள்தான். 'அதனால், அந்த குழந்தைகளுக்கு இரண்டாவது நன்றி...'அதே போல மைக் பிடித்து பேசும்போது...'பிளஸ் 2 வரை தமிழ் மீடியத்தில் படித்து, பின் திடீரென இன்ஜினியரிங் படிப்பிற்கு வரும் போது, பெற்றோர் வற்புறுத்தல் மற்றும் பெருமைக்காக பணம் கட்டி படிக்க வரும் மாணவர்கள் ரொம்பவே சிரமப்படு கின்றனர். இதனால், நூற்றுக்கு ௨௦ சதவீதம் இன்ஜினியர்கள் கூட தமிழகத்தில் தகுதி பெறுவது இல்லை; ஒன்று, இன்ஜினியரிங் படிப்பையும் தமிழிலேயே சொல்லிக் கொடுங்கள் அல்லது அவர்கள், ஆங்கிலத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆரம்பம் முதலே அக்கறை காட்டுங்கள்; இதை நான், என், 16 வருட கல்லூரி அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்...' என்றார்.'இந்த அருமையான கருத்துக்கு, மூன்றாவது நன்றி மற்றும் பாராட்டுக்கள்; இப்ப கணக்கு சரிதானே...' என்றவர், 'உங்களுக்கு மூன்று குழந்தைகள் என்கிறேன் சரிதானா?' என்று கேட்டார்.புருவம் உயர்த்தி, 'புரியவில்லை' என்பது போல பார்த்தார் புனிதா. 'உங்கள் கணவர் செந்தில்குமாரையும் சேர்த்து சொன்னேன்...' என்றதும், 'குபீர்' என சிரித்தவர், 'சரியாச் சொன்னீங்க சார்...' என்றவர், 'வீட்டில் இருக்கும் போது ரெண்டு பிள்ளைகளோடும் சரிக்கு சரியாய் மல்லுக்கட்டி சண்டை போடுவாரு; வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், இவுங்க மூணு பேருக்கும் பஞ்சாயத்து வைக்கவே நேரம் சரியாயிருக்கும். அந்த அளவில அவரும் எனக்கு ஒரு குழந்தைதான்...' என்றவர், மேலும் பேசுகையில், 'என்னதான் சண்டை போட்டாலும், அப்பான்னா பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் உயிர்; பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எனக்கும் அவுருன்னா உசுரு...' என்றார். இதைச் சொல்லும் போது புனிதாவின் முகத்தில் எக்கச்சக்க வெட்கம்.'எல்லாம் சரி... ஊருக்கு போகும் போது இந்த பெரிய குழந்தையை பத்திரமா கூட்டிட்டு போங்க...' என்று செந்தில்குமார் கையை பிடித்து, புனிதாவிடம் ஒப்படைத்த போது, பார்த்துக்கொண்டு இருந்த வாசகர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்.வெட்கப்பட்டோ என்னவோ கையை, 'வெடுக்'கென மனைவியிடம் இருந்து உருவிய செந்தில்குமார், 'நான் வத மாத்தேன் போ...' என்று வேடிக்கையாக சொல்லி மீண்டும் குழந்தையானார்.ஊருக்கு போனதும், 'நான் நல்லபடியாக ஊர் போய் சேர்ந்துட்டேன்...' என்று சொல்பவர்கள் மத்தியில், 'நீங்க டூர்ல கொடுத்த பனியனோடதான் இப்ப வாக்கிங்கே போறேன்; தனி மரியாதைதான் போங்க...' என்று சொல்லி, இப்போதும் தொடர்பில் இருக்கிறார்.இவ்வளவு வேடிக்கை விளையாட்டு நடந்த டூரில், ராமருக்கு கிடைத்த சீதையை போல கணவரது நிழலாக இருந்தார் ஒரு வாசகி.பதிபக்தி என்றால் என்ன என்பதை, அவரை பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.'என்ன சொல்றீங்க கேப்டன்... பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் இதெல்லாம் நடிகை அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்த, 1954 காலத்தோடு வழக்கொழிந்து போனதாக கேள்விப்பட்டனே...' என, காஞ்சிபுரத்தில் இருந்து வாசகர் குப்தா கடிதம் எழுதலாம்.அஞ்சலிதேவி காலத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்தது; அதன் சொச்சம் சரோஜாதேவி காலத்தில் தென்பட்டது. அதன்பின், இந்த கல்லானாலும் கணவன், புல்லானாலும் (இங்கே புல் என்பதை தாவர வகையில் அர்த்தம் கொள்க) புருஷன் என்ற வார்த்தைகளை எல்லாம் எப்போதாவது அகராதியில் மட்டுமே கேள்விப்படுவதாக தற்கால கணவர்கள் குலம், குழுவாக குறுஞ்செய்தி அனுப்பக்கூடும்.ஆனாலும், அந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே இருக்கிறோம் என்பதை, அவ்வப்போது சிலர் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர்தான் திருமதி புவனேஸ்வரி பிரகாஷ்.அவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன். — அருவி கொட்டும்.குற்றாலமும், புளியரை தட்சிணாமூர்த்தியும்...நெல்லை மாவட்டம் - செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பசுமை எழில் கொஞ்சும் புளியரை தட்சிணாமூர்த்தி கோவில்.சதாசிவ மூர்த்தி, சிவகாமி அம்மையார் சன்னிதிகளுடன், தனி சன்னிதியாக குருபகவான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஈஸ்வரன் புளியமரத்தின் பொந்திலிருந்து வெளிபெயர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால், புளியரை என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.சேர சிற்றரசர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், பூமியை பிளந்து சுயம்புவாக தோன்றியது. சுயம்புவாக தோன்றிய சிவன், இங்கு சதாசிவ மூர்த்தியாக, சிவகாமி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலித்து வருகிறார்.தமிழகத்தில் எங்கும் அமைந்திராத வகையில், இக்கோவிலில், சிவனுக் கும், நந்திக்கும் குறுக்கே தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. வியாழன் தோறும், தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.இக்கோவிலின் பின்புறம் தென்மேற்கே நவநீதகிருஷ்ணர் கோவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி கோவிலில் கன்னி விநாயகர், சங்கரநாராயணர், கருடாழ்வார் இடம் பெற்றுள்ளனர்.பிரதோஷ காலங்களில் சிவனுக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடக்கும்போது, தட்சிணாமூர்த்தியை ஒரே நேர்க்கோட்டில் பார்க்கலாம். தென்காசி - செங்கோட்டையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.எல்.முருகராஜ்