பசுமை நிறைந்த நினைவுகளே! (59)
குற்றால டூரில் கலந்து கொள்ள தேர்வான உடனேயே, ஒவ்வொரு நாளும் உடுத்திக்கொள்வதற்காக புதுத்துணிகள் எடுத்துவந்து உடுத்திக்கொண்ட இருவரைப்பற்றி இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.அந்த இருவரும் பெண்கள் என்பதைவிட, அவர்கள் இருவரும் மாமியார் - மருமகள் என்பது தான் சுவாரசியம்.'இப்படி ஒரு மாமியார் -மருமகளை ஊரில் எங்கயாவது பார்க்க முடியுமா...' என்று சொல்லுமளவிற்கு, அம்மா - மகள் போன்ற பாசப்பிணைப்புடன் காணப்பட்டனர். கலகலப்பின் மறுவடிவமாக இருந்த மாமியார் உமா நடராஜன், சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்; நீண்ட கால, 'தினமலர்-வாரமலர்' இதழ் வாசகி. இவரது கணவர் நடராஜன் பாங்க் அதிகாரியாக பணியாற்றி, தற்போது சென்னபுரி அன்னதான சமாஜ இயக்குனர்களில் ஒருவராக இருந்து, ஏழை எளியோரின் கல்வி மற்றும் உணவு தேவைக்காக சேவை செய்து வருபவர்.உமா நடராஜன் மருமகளாக போனகாலத்தில் இருந்து, 'வாரமலர்' இதழ் குற்றால டூர் கூப்பன் போட்டு வந்தார்; இப்போது, அவருக்கே ஒரு மருமகள் வந்துவிட்டார்.மகன் கார்த்திக்கை கை பிடித்த மருமகள் திவ்யா, ஒரு பிசியோதெரபிஸ்ட். வழக்கம் போல இந்த ஆண்டு குற்றால டூர் கூப்பனை மாமியார் நிரப்புவதை பார்த்த திவ்யா, 'என்னங்கம்மா இது...' என்று கேட்டு இருக்கிறார். அத்தை முறை என்றாலும், வாய் நிறைய பாசம் பொங்க, 'அம்மா' என்றுதான் அழைப்பார் திவ்யா.குற்றால டூர் பற்றி உமா சொல்லியிருக்கிறார். 'சரி... இந்த ஆண்டு என் பெயரைப்போட்டு பாருங்கள்...' என்று சொல்லியிருக்கிறார் திவ்யா.அப்படி முதல் முறையாக திவ்யாவின் பெயரில் போட்ட கூப்பன் தேர்வாகிவிட, அவருடன் யார் போவது என்பதில், வீட்டில் பெரிய போட்டி. கடைசியில், திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன திவ்யாவும், கார்த்திக்கும் போய் வரட்டும் என்று முடிவு செய்து, என்னிடம் ரயில் டிக்கெட் எடுக்க, பெயரையும் கொடுத்து விட்டனர்.ஆனால், கடந்த பல ஆண்டுகளாக குற்றால டூரில் நடக்கும் விஷயங்களை படித்து படித்து அதை மனப்பாடமே செய்து வைத்திருந்த உமா, ஒவ்வொரு நாளும், 'இப்படியெல்லாம் நடக்கும் எதையுமே மிஸ் பண்ணிடாதே...' என்று கூறியதுடன், குறிப்பா அந்துமணி எப்ப என்ட்ரி குடுப்பார் என்றெல்லாம் சொல்வதைக்கேட்ட திவ்யா, 'திடு'மென ஒரு முடிவு எடுத்தார்.டூரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் அத்தையின் கனவை நனவாக்குவதே நாம் அவருக்கு தரும் பரிசு என்றெண்ணியவர், கடைசி நிமிடத்தில் போன் போட்டு, 'சார் நானும், அம்மாவும் வர்றோம். இதுதான் இறுதியான முடிவு...' என்று சொன்னார். கணவர் கார்த்திக்கிடம் சமாதானம் சொல்லி, கழட்டியும் விட்டுவிட்டார்.ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்துடன் மருமகள் திவ்யாவுடன் டூருக்கு வந்தார் உமா. டூரில் இருவரும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உடையே அணிந்திருந்தனர். இதைக்கவனித்து கேட்ட போது, 'எல்லாமே திட்டமிட்டது தான்; டூருக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே டிரஸ் எடுப்பது தான் எங்களது ஒரே வேலையாக இருந்தது...' என்றனர்.'நம்மூரில் மட்டும்தான் சந்தோஷத்தை கொண்டாட கூட சங்கடப்படுகின்றனர்; வாய்விட்டு சிரிப்பதும், கைதட்டி மகிழ்வதும், நடனம் போன்ற உடல் மொழியால் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவதும், நல்ல விஷயத்தை முழுமையாக ஆராதிப்பதும், அனுபவிப்பதும் தப்போ என்ற எண்ணத்துடனும் வாழ்கின்றனர். உண்மையில், இவர்கள் வாழவில்லை; வாழ்நாளை கடத்துகின்றனர். சந்தோஷமாக இருப்பதற்கு பணம் வேண்டாம்; நல்ல மனம் இருந்தால் போதும்...' என்று சொன்ன உமா எந்த சந்தோஷத்தையும் விட்டு வைக்காமல் அனுபவித்தார்.'இந்தா பாருங்கப்பா... நான் கொஞ்சம் பேசுற ஆள்; நீ கேட்கிற, சிரிக்கிற ஆளா இருந்தா என்கூட சேந்துக்கோ இல்லாட்டி தூரப்போ...' என்று வேடிக்கையாகச் சொல்லி, எல்லாரையும் சிரிக்க வைத்தார்.உமாவை மிஞ்சும் வேகத்துடனும், விவேகத்துடனும் அறிமுகமானவர் திவ்யா.இந்த வருட டூரின் சந்தோஷத்தை துவங்கி வைத்தவரே இவர்தான்.எப்போதும் மதுரையை விட்டு பஸ் கிளம்பியதுமே, கொஞ்சநேரம் எல்லாரும் 'செட்'டாகட்டுமே என்பதற்காக, பஸ்சில் பாட்டு போடுவது வழக்கம்.ஆனால், ஒரு பாட்டைக்கூட யாருமே முழுமையாக கேட்கமாட்டார்கள். 'பழைய பாட்டை போடு...' என்று பஸ்சின் பின்வரிசையில் இருந்து சிலர் குரல் கொடுப்பர். அதற்கேற்ப பழைய பாடல் ஓடிக்கொண்டிருக்கும். 'என்னப்பா இது! ஒரே தத்துவபாடலா இருக்கு... முதல்ல நிறுத்திட்டு எனர்ஜியா புதுப்பாட்டு போடுப்பா...' என்று முன்வரிசையில் இருந்து குரல் வரும். சரி என்று புதுப்பாட்டு போட்டால், 'என்னய்யா இது ஒரே சத்தமா இருக்கு; கேட்கவே அலர்ஜியா இருக்கு. கொஞ்சம் மெலடியா போடுய்யா...' என்று நடு இருக்கைகளில் இருந்து ரகளையாக குரல்வரும். 'உங்க பாட்டுகளை நிறுத்துங்கப்பா... பஸ்ல இவ்வுளவு பெரிய, 'டிவி' எதுக்கு வச்சிருக்கீங்க சூடம், சாம்பிராணி காட்டவா? ஏதாவது காமெடி படம் போடுங்க...' என்பார் இடையில் ஒருவர். 'காமெடியெல்லாம், 'டிவி'யில பார்த்து பார்த்து சலித்து போச்சு. இப்ப ஹாரர் மூவிதான் நல்லாயிருக்கும்; அப்படி ஏதாவது இருந்தா போடு...' என்பார் இன்னொருவர். 'நோ... தமிழ் படம் பார்க்கிறது பெரிய தலைவலி; ஏதாவது இங்கிலீஷ் படம் இருக்கா?'என்று விசாரிப்பார் மற்றொருவர்.டிரைவர் வெங்கடேஷ், இதற்காகவே தமிழ் தெரியாத, உலக விஷயங்கள் புரியாத கன்னட பையனை கிளீனராக வைத்திருக்கிறார். ஆனால், வாசகர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில், கைக்கு கிடைத்த ஒரு ஆடியோ சி.டி.,யை சத்தமாக ஓடவிட்டு, டிரைவர் கேபினுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் கிளீனர் பையன்.இவ்வளவையும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்த திவ்யா, ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் எழுந்து, ஒரு காரியம் செய்தார். அவர் செய்த அந்த காரியம்தான், மொத்த குற்றால டூர் சந்தோஷத்திற்கும், பிள்ளையார் சுழி போட்டது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன். — அருவி கொட்டும்.குற்றாலமும், மோட்டை அணையும்...பலரது பார்வையில் படாததாலோ என்னவோ, மோட்டை அணை இப்போதும் பசுமை குன்றாமல், கிராமத்து அழகையெல்லாம் ஒருங்கே கொண்டுள்ளது.குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை வட்டம், கீழூர் கிராம எல்லையில் உள்ள மோட்டை அணை, காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த அணையை சுற்றிலும், பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கடந்த, 1992ல் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக, மலைகளில் உள்ள கல் மற்றும் மணல் அடித்துவரப்பட்டு அணையை நிரப்பியதால், தற்போது, அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.படிக்காத மேதையான காமராஜர், பலருக்கும் பயன்படட்டுமே என்று, பல லட்சம் செலவிட்டு கட்டிய அணையை, இன்று, படித்த மேதைகள், சில லட்சம் செலவிட்டு சீரமைக்க தயங்குவதால் விவசாயிகளும், கால்நடைகளும் மட்டுமின்றி, சுத்தமான சுகாதாரமான சுற்றுலா தலமென நாடி வரும் சுற்றுலா பயணிகளும், கிராம மக்களும் கூட வாடுகின்றனர்.பணமே பிரதானம் என்று ஓடும் இன்றைய வர்த்தக உலகத்தில், இன்னொரு அணையை இதுபோல கட்ட, காமராஜர் போன்று அக்கறை எடுத்து செய்ய யாரும் வருவார்களா என்பது தெரியவில்லை. எனவே, இருக்கும் இந்த மோட்டை அணையை சீரமைத்தால், பலருக்கும் பலன் கிடைக்கும்.— எல்.முருகராஜ்