உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே...(57)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலையத்தில், ஒரு காட்சி:பெட்டியில் போடப்பட்ட தபால்களை பிரித்து, முத்திரை வைக்கும் போது, ஒரு தபாலில் மட்டும் தபால் தலை ஒட்டப்படாமல் இருந்ததை பார்த்த தபால் ஊழியர், 'பாருப்பா... குற்றால டூருக்கு கூப்பன் போட்ட இந்த பெண், பல வண்ணத்தில் பொறுமையாக விலாசம் எழுதியிருக்கு; ஆனா, தபால்தலை ஒட்ட மறந்துட்டாங் களே... இதை நம்ம ரூல்ஸ்படி அனுப்ப முடியாதே...' என்று சொல்லியிருக்கிறார்.பக்கத்தில் நின்றிருந்த போஸ்ட்மேன் ராமசாமி, 'யாருங்க அந்த பொண்ணு...' என்று கேட்டு, சம்பந்தப்பட்ட தபாலை வாங்கி பார்த்திருக்கிறார். 'அட... இது நம்ம புவனேசுவரி மேடமாச்சே... ரொம்ப நல்லவங்கப்பா; கிராம மக்களுக்கு நிறைய சேவை செய்யறவங்க. அவங்க தபாலை, 'ரிஜக்ட்' செய்துடாதே... அதுக்கான தபால்தலையை நானே ஒட்டிடுறேன்...' என்று சொல்லி, தபால்தலை வாங்கி ஒட்டி அனுப்பினார். பின்னர் இந்த விவரத்தை புவனேசுவரியை நேரில் பார்த்த போது கூறியுள்ளார். உடனே, தபால் தலைக்கான பணத்தை அவர் கொடுக்க,'இருக்கட்டும்மா... உங்க வீட்டுக்கு தபால் கொடுக்க வரும்போது எத்தனை முறை மோர் கொடுத்து உபசரிச்சு இருப்பீங்க... இது என்னால முடிஞ்ச சின்ன நன்றி கடன்...' என்று சொல்லி விட்டார்.'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது போல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், யாராவது ஒருவருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால், யாராவது ஒருவர், எங்கிருந்தாவது நமக்கு உதவி செய்துகொண்டே இருப்பார் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம், வெறும் தபால்தலையுடன் முடியவில்லை.லட்சக்கணக்கான குற்றால டூர் கூப்பன் கடலுக்குள் நீந்திவந்த அந்த கடிதம் தேர்வானதை அடுத்து, புவனேசுவரி தன் கணவர் பிரகாஷ் உடன் டூரில் கலந்து கொண்டார்.புதிதாக திருமணமானவர்களை வாழ்த்தும் போது, 'நகமும் சதையும் போல, உயிரும் உடலும் போல பூவும் மணமும் போல நீடுழி வாழுங்கள்...' என்று வாழ்த்துபவர்கள், வாரமலர் டூரில் கலந்து கொண்ட புவனேசுவரி-பிரகாஷ் தம்பதியை பார்த்திருந்தால், 'இவர்களைப் போல வாழுங்கள்...' என்று ஒரே வரியில் சொல்லி வாழ்த்தி விடுவர்.அந்த அளவிற்கு இணைபிரியாத ஜோடி இவர்கள்.இருவருமே அரசு ஊழியர்கள்; மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள். கிராம மக்களின் தேவைகளை சத்தமில்லாமல் நிறைவேற்றும் உன்னதமான பணியினை செய்து வரும் இவர்களுக்கு, பிரியா, நதியா என இரு பெண் குழந்தைகள். கணவன் - மனைவி இருவருமே நீண்ட நாள், 'தினமலர் - வாரமலர்' இதழ் வாசகர்கள். வழக்கம் போல கூப்பன் போட்டு களைத்துப் போனவர்கள், தபால்காரர் ராமசாமி புண்ணியத்தில், இந்த ஆண்டு டூரில் கலந்து கொண்டு சந்தோஷத்தில் திளைத்தனர்.எப்போது பார்த்தாலும் இருவரும் சேர்ந்தேதான் இருப்பர். ஐந்தருவியில் துவங்கி பழைய குற்றால அருவி வரை, குளிக்கப்போகும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரித்து அனுப்பப்படுவர். அந்த நேரம் பார்க்கணுமே இருவரையும்...'கொஞ்ச நேரம் தானே... போய் குளிச்சுட்டு வாம்மா...' என்று, பிரகாஷ் கண்களாலேயே சொல்வதும், 'போய்ட்டு உடனே வந்துருவேனுங்க...' என்று இவர், அவரிடம் அனுமதி வாங்கிச் செல்வதையும் பார்த்த மற்ற வாசகிகள், 'கவலைப்படாம வாம்மா புவனா... உன் வீட்டுக்காரர் ஒண்ணும் அருவியில் கரைஞ்சுட மாட்டார்...' என்று கேலி செய்தனர்.ஆனால், அவர்கள் எந்த கிண்டலையும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.பஸ்சில் பயணிக்கும் போது புவனேசுவரி மட்டும் மவுன சாமியாரினி போல இருந்தார். முதல் நாள் விட்டுவிட்டனர். மறுநாள் அவரை சூழ்ந்து, 'இப்ப பாடியே ஆகணும்...' என்று சுற்றி நின்று, 'கெரோ' செய்ய, 'என்னங்க... என்னை பாடச் சொல்றாங்க...' என்று சொல்லி வெட்கம் கலந்த பயத்துடன், பிரகாஷின் முதுகில் முகம் புதைத்துக் கொண்டார்.'எல்லாரும் கேட்கிறாங்கள்ல, ஒரு பாட்டுதான் பாடேன்...'என்று பிரகாஷும் தன் பங்கிற்கு கேட்டுக் கொண்டார்.பத்து, பதினைந்து முறை தொண்டையை கணைத்து, கண்களை மூடி, கைகளை கட்டியபடி ஒரு மாதிரியாக புவனேசுவரி திக்கி, திணறி பாட ஆரம்பிப்பதற்குள், பஸ், 10 கி.மீ., கடந்திருந்தது.மிக மெதுவான குரலில், 'காதோடுதான் நான் பேசுவேன்...'என்று கணவரின் காதோடு பாடினார். அவரது குரல்வளம் நன்றாக இருக்கவே, அனைவரும் பலமாக கைதட்டி பாராட்டினர். அந்த பாராட்டு தந்த மயக்கத்தில் அடுத்த பாடலையும் அவரையே பாடச்சொல்லி வேண்டுகோள் பறந்தது. இந்த முறை பயமும், தயக்கமும் கொஞ்சம் குறைந்த நிலையில், கணீர் குரலில் அடுத்த பாட்டு பாட மேலும் பாராட்டுகள் குவிந்தன.'இப்படி ஒரு பாடகியை உள்ளே வைத்துக்கொண்டு சும்மாயிருக்கீங்களே நியாயம்தானா?'என்று புவனேசுவரியிடமும், 'பிரகாஷ், நீங்களும் இவங்க திறமையை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தணும்...' என்று சொல்லி, அந்துமணி கொடுத்த ஊக்கத்திலும், உற்சாகத்திலும் ஒரு மகத்தான காரியம் நடந்தது.அது என்ன மகத்தான காரியம் என்பதை அடுத்தவாரம் சொல்கிறேன்.— அருவி கொட்டும்..குற்றாலமும், சைக்கிள் பயணமும்...குற்றாலத்தில் நீர் நிறைந்த ஏரிகளுக்கும், பசுமை போர்த்திய வயல்வெளிகளுக்கும் பஞ்சமே இல்லை.ஏரிகளுக்கு இடையே உள்ள பாதையில், இயற்கையை ரசித்தபடி சுத்தமான காற்றை சுவாசித்தபடி செல்லும் ஆனந்தத்திற்கு ஈடில்லை. இங்கு வாகன இரைச்சல் இல்லை; அது தரும் கரும்புகையில்லை. முட்டி மோதி அவசரமாக செல்லும் மக்களும் இல்லை; ஆனந்தமே இங்கு எல்லை.'தென்றலின் சுகத்தையும், பறவைகளின் இசையையும், சாரலின் இதத்தையும் ரசித்தபடி சைக்கிளில், நண்பர்களுடன் மேலகரத்தில் இருந்து வந்து சென்றதை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சி சாரல் அடிக்கிறது. இந்த இனிமைக்காகவே நண்பர்கள் நாங்கள் சைக்கிள் வைத்திருந்தாலும், அதை ஓட்டாமல் உருட்டியபடியே ஜாலியாக அரட்டை அடித்தபடி நடந்து செல்வோம்...' என்றனர், அப்போது மேலகரத்தில் இருந்து சைக்கிளில் வந்து, இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளிக்கூடத்தில் படித்துச்சென்ற குமரகுருபரனும், அவரது நண்பர்களும்.இப்போதும் இந்த பாதையில் சைக்கிளில்தான் பல மாணவர்கள் சென்று வருகின்றனர். இவர்களை பார்க்கும் போது கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சைக்கிள் வைத்திருப்பதை கேவலமாக நினைக்கும் நகரத்து இளைஞர்களே... வாழ்க்கையில் ஒரு முறை இந்த இயற்கை சூழலில் சைக்கிள் ஓட்டிப் பாருங்கள்... இயற்கையின் அருமையும், சைக்கிளின் பெருமையும் புரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !