குருவும், தேரையும்!
குரு என்ற சொல்லுக்கு, அறியாமையை நீக்குபவர் என்பது பொருள். குருநாதர்கள், சாதுர்மாஸ்ய காலம் எனும் மழைக் காலத்தில், தங்கள் பயணத்தை நிறுத்தி, ஒரே இடத்தில் தங்கி, ஞானோபதேசம் செய்வதுடன், வேத - உபநிடதங்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்துவது வழக்கம்.மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி, தான் கைப்பற்றிய பகைவரின் கோட்டைகளை அவ்வப்போது, பழுது பார்த்து செப்பனிடுவார். ஒரு சமயம், சாம்காட் எனும் கோட்டையை செப்பனிட்ட போது, அதை பார்வையிடச் சென்றார், சிவாஜி. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதைப் பார்த்ததும், 'இவ்வளவு பேர்களின் வயிற்றுப் பிழைப்பும், என்னால் தானே நடக்கிறது...' என்ற எண்ணம் அவருள் எழுந்தது. அதன் விளைவாக அவர் மனதில் கர்வம் புகுந்தது.சீடனின் மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை, ஆசிரமத்தில் இருந்த அவரது குருநாதர், சமர்த்த ராமதாசர் அறிந்து, உடனே புறப்பட்டு வந்து விட்டார். குருநாதரை வரவேற்று, நடைபெற்று வந்த வேலைகளை எல்லாம் சுற்றிக் காட்டினார், சிவாஜி.வழியில் ஒரு பெரும் பாறாங்கல் கிடந்தது. 'இந்தக் கல், ஏன் இங்கு கிடக்கிறது...' எனக் கேட்டார் குருநாதர். உடனே, தொழிலாளர்களின் தலைவரை அழைத்து, 'இந்தக் கல்லை உடைக்காமல், இங்கே ஏன் போட்டு வைத்துள்ளீர்கள்...' எனக் கேட்டார், சிவாஜி.'பாதை போடும் போது, இதை உடைத்து பயன்படுத்திக்கலாம் என்று வைத்துள்ளோம்...' என்றார், தொழிலாளர் தலைவர். அதைக் கேட்ட சமர்த்த ராமதாசரோ, 'இருந்தாலும் இந்தக் கல் இங்கே கிடக்க வேணாம்; யாராவது இடறி விழுந்து விடுவர். இப்போதே இதை உடைத்து, ஓரமாகப் போடுங்கள்...' என்றார்.குருநாதர் உத்தரவை மீற முடியுமா... 'இக்கல்லை இரண்டாக உடையுங்கள்...' எனக் கட்டளையிட்டார், சிவாஜி. அதன்படி, அப்பாறையை, இரண்டாக உடைத்தனர். பிளந்த கல்லின் உள்ளே, ஒரு குழியில் தண்ணீர் இருந்தது. அத்தண்ணீருக்குள் இருந்து ஒரு தேரை வெளியே குதித்தது.அதைச் சுட்டிக் காட்டிய குரு, 'பரவாயில்லையே... நீ மிகப் பெரும் சாமர்த்தியசாலி தான்; இதோ, இக்கல்லுக்குள் இருக்கும் தேரைக்குக் கூட, உணவு கொடுக்க வேண்டுமென்று, கல்லுக்குள் குழி தோண்டி, அதற்குள் தண்ணீரையும் ஊற்றி வைத்திருக்கிறாயே...' என்றார்.குருநாதரின் உள்ளம் புரிந்தது சிவாஜிக்கு!'ஆயிரக்கணக்கான பேர்களுக்கு, நாம் தானே உணவிடுகிறோம் என்று ஆணவப்பட்டோமே... இந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கடவுளல்லவா படியளக்கிறார்... அனைத்தையும் செய்யும் ஆண்டவனே, தன்னை மறைத்து, அமைதியாக இருக்கும் போது, அற்பர்களான நமக்கு, ஆணவம் தேவையா... நல்லவேளை... இதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார் நம் குருநாதர்...' என்று, தனக்குள் சொல்லியவர், 'குருநாதா... என் தவறை உணர்ந்தேன்; என்னை மன்னியுங்கள்...' என, அவரது திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.ஜூலை முதல் செப்டம்பர் வரை அனுஷ்டிக்கப்படும் வியாச குரு பூஜையின் போது, குரு நாதர்களை பணிவோம்; அவர்களது ஆசியை பெற்று, நலமுடன் வாழ்வோம்.பி.என்.பரசுராமன் திருவாசகம்!தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல் என்றுவேர்க்கின்ற என்னை விடுதிகண்டாய் விரவார் வெருவஆர்க்கின்ற தார் விடை உத்தர கோசமங்கைக்கு அரசேஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்வினையேனை இருதலையே!விளக்கம்: உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே... ஐம்புல ஆசைகளோடு அதற்கு மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய என்னை, இருபுறமும் இழுக்கின்றன. என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற வகை தான் எதுவோ என்று, உள்ளம் புழுங்கியிருக்கிறேன். என்னை கைவிடலாமா... இடப வாகனா... இன்னல்கள் தீர்த்து அருள் செய்!