இன்பமான தீபாவளி!
அக்., - 22 தீபாவளிதீபாவளி என்பதன் போக்கே தற்போது திசைமாறி போயிருக்கிறது. உலகையே அச்சுறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்றும் பாராமல் சம்ஹரித்தார் விஷ்ணு பகவான். இன்று ஏராளமான நரகாசுரன்கள் நாட்டில் உருவாகியிருக்கின்றனர். அதிலும், தீபாவளியன்று பல வீடுகளுக்குள்ளேயே நரகாசுரன்கள், 'குடி'யேறி விடுகின்றனர். இனாம்... இனாம் என்று அலைகின்றனர். அத்தனைக்கும் காரணம் ஆசை!ஆசை என்பது இன்று நேற்றல்ல, உலகம் தோன்றிய காலம் முதலே மனிதனோடு ஐக்கியமாகி விட்டது. தீபாவளியன்று காசிக்குப் போய், கங்கா ஸ்நானம் செய்து பாவத்தை தொலைக்க வேண்டும் என்று போகின்றனர். பாவம் தொலைகிறதோ இல்லையோ, பாவத்திற்கு காரணமான, ஆசை மட்டும் அவர்களைப் பின்பற்றி வீட்டுக்கே வந்து விடுகிறது.இதற்காக, ஒரு நாடோடி கதை சொல்வர்; அது:காசிக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் கையில் ஒரு செம்பு இருந்தது. செம்பை கரையில் வைத்து விட்டுக் குளித்தால் யாராவது எடுத்து விடுவார்களோ என்று அவருக்கு பயம். அதனால், அதை மண்ணைத் தோண்டி புதைத்து வைத்தார். இனி, யாராலும் செம்பை திருட முடியாது என்று நிம்மதியாக நடந்தவரின் மனதில், ஒரு சந்தேகம். செம்பை புதைத்து வைத்த இடத்தை திரும்ப வரும் போது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமே என்று! அதற்கொரு உபாயம் செய்வோம் என்று புதைத்து வைத்த இடத்தில் மணலைக் கூட்டி மேடாக்கி வைத்தார். அது பார்ப்பதற்கு லிங்கம் போல் இருந்தது. பின்னர் நிம்மதியாக குளிக்க ஆரம்பித்தார். ஆற்றில் நின்றபடியே அவ்வப்போது மேடு தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டார்.இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த பக்தர் ஒருவர், குவிக்கப்பட்டிருந்த மணல் லிங்கத்தை பார்த்தார்.'ஓஹோ... காசிக்கு வந்தால் மணலில் லிங்கம் பிடித்து வைத்த பிறகு தான் குளிக்க வேண்டும் போலிருக்கிறது...' என்று நினைத்தவர், தானும் தன் பங்கிற்கு ஒரு லிங்கத்தை அமைத்தார். இதைப் பார்த்து, போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு லிங்கம் பிடித்து வைத்தனர்.ஆற்றில் குளித்தவர், இப்போது செம்பை எடுக்க வந்தார். அங்கே நூற்றுக்கணக்கில் மணல் மேடு இருந்தது. அதில், எது, தான் அமைத்த மேடு என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகென்ன, செம்பை இழந்தது தான் மிச்சம்.இப்படித்தான் இருக்கிறது இன்றைய கங்கா ஸ்நானம்.தீபாவளி என்றால் என்ன?ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு இனிப்பு மற்றும் உடைகள் வழங்க வேண்டும். மற்றவர்களை நரகாசுரன் மாதிரி துன்புறுத்தாமல், நல்லபடியாக நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு, பிறருக்கு உதவும் இன்பத் தீபாவளியைக் கொண்டாடுவோம். எல்லாரும் நலமாய் வாழ பிரார்த்தனை செய்வோம்.தி.செல்லப்பா