சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்... (2)
'இமிகிரேஷன்' அதிகாரி, 'நீ எங்கேம்மா போறே...' என்று கேட்டதும், என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவேளை கைப்பையில் உள்ள, எலுமிச்சம் பழத்தை பார்த்திருப்பாரோ என்றெல்லாம் நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது... இதெல்லாம் சம்பிரதாய கேள்வி என்று. 'எங்கே போறீங்க... எப்ப வர்றீங்க...' என்றெல்லாம் கேட்டு, பதிலை எதிர்பார்க்காமல், பாஸ்போர்ட்டில், 'சீல்' வைத்து, அனுப்பி வைத்தார்.ஸ்ரீலங்கா விமானத்தில் நுழைந்ததும், 'ஆய்புவன்' எனக்கூறி, வரவேற்றனர் விமான பணிப்பெண்கள். வழிகாட்டல் எல்லாம் எளிதாகவே இருந்தது. சென்னையிலிருந்து கிளம்பி, திரும்ப சென்னை வரும் வரை, விமானத்தில் எனக்கு சரிப்பட்டு வராத ஒரே விஷயம், 'சீட் பெல்ட்' தான்.சீன மொழியை கூட கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். ஆனால், இந்த, 'சீட் பெல்ட்' மட்டும் ஒத்துவரவே மாட்டேன் என, அடம் பிடித்தது. பணிப்பெண் தான் வந்து மாட்டி விட்டார். மேலே பறந்ததும், 'பெல்ட்டை' கழற்றி விட, நான் எடுத்த முயற்சி பலன் தருவதற்குள், இலங்கை வந்து விட்டது.இலங்கை விமான நிலையத்தை விட்டு வெளியே வராமலேயே, ஷாங்காய் செல்லும் விமானத்திற்கு மாறி, பறந்தேன்.ஏழு மணி நேரம் பறந்த இந்த விமானத்தில், பாராட்டப்பட வேண்டிய விஷயம், தமிழில் அறிவிப்பு கொடுத்தனர். இருக்கையின் பின் பகுதியில், தமிழ் படங்களை ஓட விட்டனர். தமிழிலேயே அறிவிப்புகளை எழுதி வைத்திருந்தனர்.சர்வதேச விமானத்தில், பலவிதமான வெளிநாட்டு, 'சரக்கு' சகஜமாக உலா வந்தது. ஏற்கனவே, 'மிதந்து' கொண்டிருந்த பயணியர் பலர், கேட்டு கேட்டு, வாங்கி குடித்து, மேலும், 'உற்சாகத்தில்' மிதந்தனர்.நான், தெரியாத்தனமாக, குடிக்க, கொஞ்சம் வெந்நீர் கேட்டு விட்டேன். கேட்கக் கூடாததை கேட்டு விட்டது போல, 'பைலட்' அறை வரை, 'டிஸ்கஸ்' செய்து, மெதுவாக நகர்ந்தனர்.நள்ளிரவு, ஜெகஜோதியாய், ஷாங்காய் விமான நிலையம் வரவேற்றது. நிமிடத்திற்கு ஒரு விமானம், ஏறுவதும், இறங்குவதுமாகவும், மழை பெய்து, ஊரே ஜில்லிட்டு அருமையாக இருந்தது.நட்சத்திர ஓட்டலில், இரவு தங்கல். மறுநாள், ஷாங்காய் நகர் உலா.கம்யூனிச நாடு என்பதால், கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம், சீன நாட்டில் பெரும்பாலும் இல்லை. ஆங்காங்கே புத்தர் கோவில் மட்டுமே இருக்கிறது. அங்கும், சுற்றுலா பயணியர் தான் அதிகம் வருகின்றனர்.முதலில் போனது, 'ஜேடு' புத்தர் கோவில். வழிகாட்டியாக வந்த, ஷோபியா, வார்த்தைக்கு வார்த்தை, தன் நாட்டைப் பற்றி, பெருமையாக பேசினார்; நன்றாக பழகினார். 'ஜேடு' புத்தர் கோவிலின் சிறப்புகளை விளக்கினார்.புத்தர் கோவில் பார்த்து முடித்ததும், வியப்பூட்டும், விண்ணைத்தொடும், 'ஜின்மோ' என்ற, 88 மாடி கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த கட்டடத்தின், 'லிப்ட்' வேகத்தை, இதற்கு முன் அனுபவித்ததே இல்லை. ஒரு நிமிடத்திற்குள், 88வது மாடிக்கு போய் விட்டது. அங்கிருந்து பார்க்கும்போது, மொத்த ஷாங்காய் நகரமும் பிரமிப்பாய் தெரிகிறது.அன்றைய, 'ஹைலைட்' ஆக இருந்தது, 'அக்ரோபாட்டிக்' காட்சி தான். சீனாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் இந்த காட்சி, மிக அருமையாக இருந்தது. நம்மூர் கழைக்கூத்தாடிகள் உடலை வளைத்து தாவி குதித்து, பல்டி அடிப்பது, கம்பி மேல் நடப்பது போன்று கொஞ்சம், 'ைஹ-டெக்' ஆக இருக்கும் வித்தை இது. சீனா செல்லும் யாரும், இதை தவற விடக் கூடாது. கிட்டத்தட்ட, ஒன்றரை மணி நேரம், வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றனர்.உடம்பை வளைத்து, நெளித்து, அவர்கள் செய்து காட்டிய ஒவ்வொரு சாகசமும், கைத்தட்டலை அள்ளியது. அதிலும், கடைசியாக ஒரு பெண் தலைமையில், ஏழு பேர், ஒரு உருண்டைக்குள் மோட்டார் பைக் ஓட்டி, நிகழ்த்திய சாகசம் மறக்க முடியாதது.மாலையில், அந்நகரில் ஓடும், 'கூங்கான்பூ' நதியில், 'குரூஸ்' ரக கப்பல் பயணம். இரு கரைகளிலும் எழுந்து நிற்கும் பிரமாண்டமான கட்டடங்களை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த கட்டடங்களில், இரவு நேரம் எரிய விடப்படும் விளக்குகளின் வர்ணஜாலம், இன்னும் ஜோர்.இதெல்லாம் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விஷயம் என்பதால், இந்த விளக்கு வெளிச்சங்களுக்கான மின்சாரத்தை, அரசே இலவசமாக வழங்குகிறதாம். அது ஒன்றும் அரசுக்கு சிரமமில்லை. காரணம், இங்கே மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாவதாக கூறினார், வழிகாட்டி.குரூஸ் கப்பலை பற்றி, வழிகாட்டி மேலும் விளக்கும்போது, ஒரு இடத்தை பற்றி சொன்னார்... அவர் அப்படி சொன்னதும், கூட வந்த ஒரு பயணி கேட்ட கேள்வியும், அதற்கு, வழிகாட்டி தந்த பதிலும், 'குபீர்' சிரிப்பை வரவழைத்தது. அது என்ன என்று, அடுத்த வாரம் சொல்கிறேன்.— தொடரும்ஷாங்காயின் சிறப்பு!சீனாவின் தலைநகரம், பீஜிங் என்றாலும், வர்த்தக நகரம், ஷாங்காய் தான். நமக்கு, மும்பை போல, அவர்களுக்கு, ஷாங்காய். ஆனால், மும்பையை விட, நுாறு மடங்கு பிரமாதமாக இருக்கிறது.எங்கும் ஆறு வழி சாலை. எந்த இடத்திலும் குண்டும், குழியுமான சாலையை பார்க்க முடியவில்லை. மக்களுக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும், 'பேட்டரி'யில் தான் ஓடுகிறது. நடைபாதை ஓரம், நடு ரோடு என்று எங்கும் வண்ண மயமான பூக்களை வளர்த்து பராமரிக்கின்றனர். விளைவு, ஒரு துாசு தும்பு இல்லாமல், ஊர் அழகாக, ரம்மியமாக காட்சி தருகிறது.சைக்கிள் ஓட்டுபவர்களை, மிகவும் ஊக்கப்படுத்துகிறது, அரசு. அவர்களுக்கு தனி வழி. எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை விட்டு போகலாம். எல்லாம் இலவசம் தான். மக்கள், ஜோடி ஜோடியாக, கூட்டம் கூட்டமாக, சைக்கிளில், 'ஜாலி'யாக செல்கின்றனர்.பல இடங்களில், பாதுகாப்பு பொறுப்பை, பெண்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர். பொதுவாக, குண்டான பெண்ணையோ, தொப்பையுள்ள ஆணையோ பார்க்க முடியவில்லை. அதற்கு, அவர்களது சாப்பாட்டு முறை தான் காரணமாக இருக்க வேண்டும். எல்லாரும் உடம்பை, சராசரியாக வைத்துள்ளனர்.- கலைச்செல்வி