உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். தற்போது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறேன். சிறு வயது முதலே, என் தந்தை வழி பாட்டியிடம் தான் வளர்ந்து வருகிறேன். பள்ளி படிப்பு வரை, அவர்கள் தான் என்னை படிக்க வைத்தனர். கல்லூரியில் சேர்ந்த பின், பகுதி நேர வேலைக்கு சென்று, படித்து வருகிறேன்.என் பிரச்னை என்னவெனில், கல்லூரியில், முதலாமாண்டு வரை சலனப்படாத என் மனது, இரண்டாம் ஆண்டு துவக்கத்தில், எங்கள் கல்லூரிக்கு புதிதாக வந்த பேராசிரியரின் சுய ஒழுக்கம், அன்பான குணம் கண்டு, மனம் தடுமாற ஆரம்பித்தது. நான், என் விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டார். இருவரும் தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்வோம். கல்லூரியில் அவரை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன். அம்மா... அவரும், நானும் நெருங்கி பேச துவங்கினாலும், என் படிப்பில் கவனம் குறைய கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே, என் படிப்பு முடிந்ததும் அவரது வீட்டில் தெரிவித்து, பெற்றோர் சம்மதத்துடன், என்னை மணந்து கொள்வதாகவும், அதுவரை நமக்குள் எந்த தொடர்பும் வேண்டாம் என்று கூறி வாக்குறுதி கொடுத்தார்; நானும் சம்மதித்தேன்.ஆனால், தற்போதோ, அவரது மாமன் மகளை, அவருக்கு பேசி முடித்துள்ளனர் அவரது பெற்றோர். அவர் எவ்வளவு கூறியும், அவர்கள் கேட்கவில்லை. காரணம், என்னவரின் மாமா இறந்து விட்டதால், அவரின் அம்மா விடாமல் வற்புறுத்துகிறார். 'நான் இன்னொரு பெண்ணை காதலித்திருந்தால் என்ன செய்வீர்கள்...' என்று கேட்டுள்ளார் என் காதலர். அதற்கு அவரது தாய், 'அப்பெண்ணிடம் நம் குடும்ப நிலைமையை எடுத்துக் கூறி, விட்டுக் கொடுக்கச் சொல்வேன்...' என்று கூறியுள்ளார்.இதை என்னவர் என்னிடம் கூறிய போது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். பின், அவரின் தாயின் வேண்டுதலை ஏற்று, அவரை பிரிவதென்று முடிவு செய்தேன். ஆனால், என்னால் அவரை மறக்க முடியவில்லை.என் குடும்பமோ, மகள் படித்து, வேலை பார்த்து நம்மை காப்பாற்றுவாள் என்றும், என் இரு சகோதரிகள், அக்கா வேலை பார்த்து, நம்மை படிக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். இத்தகைய குடும்பச் சூழ்நிலையையும், என் கடமைகளை நினைத்ததும், நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். இதனால், பிற்காலத்தில், யாரோ ஒருவரை மணந்து கொள்வதற்கு பதில், திருமணத்தை விலக்கி வைத்து, என் குடும்பத்திற்காகவும், இயலாதவர்களுக்காக ஆசிரமம் நடத்தி, காலம் முழுவதும் அவர்களின் உள்ளங்களில், அன்பு மகளாக வாழவும் முடிவு செய்துள்ளேன்.அம்மா... தற்போது அவரையும் மறக்க முடியவில்லை; இந்நிலையில், என் லட்சியங்களை நிறைவேற்ற என் எதிர்கால வாழ்வின் வழியை தேர்ந்தெடுத்த போதும், அதில் என்னால் பயணிக்க முடியாமல் தவிக்கிறேன். எனக்கு நல்வழியை காட்டுங்கள்.— இப்படிக்கு,உங்கள் அன்பு மகள்.அன்பு மகளுக்கு —உனக்கு சமாதானம் சொல்லி, அம்மா கை காட்டிய மாமன் மகளை மணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் உன் பேராசிரியர் காதலர். இருப்பினும், நீ மட்டும் ஆசிரமம், அது இது என புலம்புகிறாய்.காதலன் கை நழுவி போனால், வாழ்க்கை வெறுமையாக தெரிவது ஒரு மாயை. கல்லூரி படிப்பு முடித்து, நீ வேலைக்கு போகும் போது கூட, உனக்கு தகுதியான நபர் கிடைக்கலாம். அதனால், நிறைவேறாத காதலை நினைத்து, மனதை குழப்பிக் கொள்ளாதே!திருமணம் செய்து கொள்ளாமல், ஆசிரமம் வைத்து, சமூக சேவை செய்யப் போவதாக கூறுவது மடமை. உன்னை நம்பி உன் குடும்பமும், உன் இரு தங்கைகளும் உள்ளனர். நீ கிடைக்காததால், உன் காதலன் வேலையை விட்டு போய் விட்டாரா அல்லது ஒழுங்காக பாடம் நடத்த முடியாமல் பரிதவிக்கிறாரா, இல்லையே... நீ மட்டும் ஏன் படிப்பில் பின் தங்கி நிற்கிறாய்?தலையிலோ, புது ஆடையிலோ பறவை, எச்சமிட்டு விட்டால் தண்ணீர் விட்டு கழுவி, ஒன்றுமே நடக்காதது போல அடுத்த வேலையில் ஈடுபடுவதைப் போல், நீயும் படிப்பின் மீது முழு கவனம் செலுத்து. நன்றாக படித்து, நல்ல வேலைக்கு போனால் தான், உன் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.காதலில் தோற்றதால், உனக்கு உடனடி தாக்கமாக ஆசிரமம் அமைக்க ஆசை வருகிறது. காதலனை ஓரிரு ஆண்டுகள் கழித்து மனைவி, குழந்தையுடன் பார்க்கும் போது, மிகப் பெரிய ஏமாற்றத்தை உணர்வாய். நாமும் ஒரு வாழ்க்கைத் துணையை உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும் என ஒரு ஆற்றாமை பொங்கும். அதனால், முதலில் நன்றாக படி; வேலை வாய்ப்பிற்கான திறனை வளர்த்துக் கொண்டு, வேலையில் சேர்ந்து, உன்னை எதிர்நோக்கியுள்ள உன் குடும்பத்திற்கான கடமையை முடி; பின், பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையையோ அல்லது உனக்கு பிடித்த வேறொரு ஆணையோ மணந்து, நீ உன் குடும்பத்தை கவனிக்கலாம். இலையுதிர்காலத்திற்கு பின், ஒரு வசந்த காலம் நிச்சயம் மலரும். சிறப்பான வரனை கைப்பிடித்து, லட்சிய வாழ்வு வாழ பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !