உள்ளூர் செய்திகள்

கேடு நினைத்தால்...

சாமர்த்தியம் தேவை தான். அதற்காக, அடுத்தவரை வஞ்சம் தீர்க்க உபயோகப்படுத்தக் கூடாது. தெய்வம் ஒருபோதும் விட்டு வைக்காது. அது, தன் சாமர்த்தியத்தைக் காட்டி விடும். இதை நிரூபிக்கும் வரலாறு இது.அண்ணன் - தம்பி இருவருக்குள் சொத்து பிரிக்கும்போது, மனஸ்தாபம் வந்து விட்டது.'சொத்து எதுவும் இல்லை. நம் தந்தை எந்த விதமான சொத்தும் வைக்கவில்லை...' என்று அடாவடியாக பேசி, தம்பியை ஏமாற்றினான், அண்ணன்.தம்பி மிகவும் நல்லவன்; எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவன் சொன்னது எதையுமே ஏற்கவில்லை, அண்ணன். வேறு வழியின்றி, ஊர் பெரியவர்களிடம் போய் முறையிட்டான், தம்பி. அவர்கள் அண்ணனை அழைத்துக் கேட்க, 'என்னிடம் ஒன்றுமே இல்லை...' என்று சாதித்தான், அண்ணன்.'சரி, அப்படியானால் வட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்...' என்றனர், ஊர் பெரியவர்கள். அண்ணனும் ஒப்புக்கொண்டான். வட்டப்பாறையில் கை வைத்து பொய் சத்தியம் செய்தால், அதன் அடியிலிருந்து ஒரு பெரும் பாம்பு வெளிப்பட்டு, பொய் சத்தியம் செய்தவனை கொன்று விடும். அது தெரிந்தும், அண்ணன் தைரியமாக பொய் சத்தியம் செய்யத் தீர்மானித்தான்.மறுநாள், ஊர் மக்கள் திரண்டு வர, அண்ணனும், தம்பியும், வட்டப்பாறைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது, அண்ணன் தன் கையிலிருந்த, சற்று தடித்த பெரும் குச்சியை தம்பியிடம் தந்து, வட்டப்பாறையை நெருங்கினான்.வட்டப்பாறையை நெருங்கிய அண்ணன், 'என் முன்னோர்கள் தேடி சேர்த்து வைத்த பொருள் எதுவும், இப்போது என்னிடம் இல்லை...' என்று, சத்தியம் செய்தான். விபரீதம் ஏதும் நடக்கவில்லை. 'இவன் நல்லவன் தான் போலிருக்கிறது. நாம் தான் தப்பாக நினைத்து விட்டோம்...' என்று, நினைத்தனர், ஊர்க்காரர்கள். சத்தியம் செய்து முடித்த அண்ணன், தம்பியிடம் கொடுத்திருந்த அந்த பெருங்குச்சியை வாங்கினான். அதை அவன் வாங்கிய அதே விநாடியில், வட்டப்பாறையில் இருந்து வெளிப்பட்ட பாம்பு, தீண்டியது. அவன் கையிலிருந்த குச்சி கீழே விழுந்து உடைந்தது. அதிலிருந்து ஏராளமான தங்க நாணயங்கள் கொட்டிச் சிதறின. ஊரார் வியந்தனர். 'முன்னோர் சொத்துக்களை எல்லாம் தங்கமாக மாற்றி குச்சியில் மறைத்து வைத்து வஞ்சனையாக தம்பியை ஏமாற்ற நினைத்தான். கெடுவான் கேடு நினைப்பான் என்பது உண்மையாகி விட்டது...' என்றனர், ஊர் மக்கள். திருவாமாத்துார் தல வரலாறு நடத்தும் பாடம் இது. பி. என். பரசுராமன்ஆன்மிக தகவல்கள்கருடனை, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !