90வது கிலோ மீட்டரில்...
சென்னையில் இருந்து, திருச்சி செல்லும் பிரதான சாலையில், மேல்மருவத்தூர் அடுத்து, அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது, '99 கி.மீ., காபி ஸ்டாப்!'காபி ஸ்டாப் என்கிற, 'காபி ஷாப்' வாசலில் இருந்த ஒரு, 'போர்டு' வித்தியாசமாகப்பட்டது. அதில், 'பயணிகள், தாங்கள் கொண்டு வரும் உணவை, ஆபத்தான முறையில், சாலையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் உட்கார்ந்து, நிம்மதியாக சாப்பிடலாம்; மேலும், மொபைல் போன் மற்றும் மடிக்கணிகளை, சார்ஜ் செய்து கொள்ளவதுடன், பிற வசதிகளையும், தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்...' என்று எழுதப்பட்டு இருந்தது.வழக்கமாக, வெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு, பெரும்பாலான ஓட்டல்களில் அனுமதி கிடைக்காது; ஆனால், இது வித்தியாசமாக இருந்தது.உணவகத்தின் உரிமையாளர், மனோகரன், இந்திய ராணுவத்தின், விமான பிரிவில் பணியாற்றி, சொந்த ஊர் திரும்பிய பின், நாலு பேருக்கு பயன்படும்படியான, தொழில் துவக்க வேண்டும் என்று யோசித்து, இந்த உணவகத்தை துவங்கியுள்ளார்.நான்கு ஆண்டுகளுக்கு முன், இட்லியும், காபியும் மட்டும் விற்க்கபட்டு வந்துள்ளது. இன்று, இசையமைப்பாளர் இளையராஜா முதல், இயக்குனர் மிஷ்கின் வரை, பலரும் சாப்பிட்டு செல்லும் அளவிற்கு, வளர்ச்சியடைந்துள்ளது.காலை, 6:00 மணியில் இருந்து, இரவு, 9:00 மணி வரை இயங்கும், இந்த உணவகத்தில், வெந்தயகளி, உளுந்தங்களி, வாழைப்பூ மற்றும் கீரை வடை, குதிரைவாலி பொங்கல், வரகரிசி சாப்பாடு, கற்பூரவல்லி பஜ்ஜி, தினை பாயசம் மற்றும் சிறுதானிய சப்பாத்தி என, பாரம்பரிய உணவு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.அத்துடன், நியாயமான விலையில், கண் எதிரே, சுடச்சுட தயார் செய்து தரப்படுகிறது; மண் கலயத்தில் வழங்கப்படும், பனங்கல்கண்டு மூலிகைப்பால் சாப்பிடுவதற்கே, தனி ரசிகர் கூட்டம் உண்டு.தின்பண்டங்களாக, (ஸ்நாக்ஸ்) கடலை மிட்டாய், அச்சு முறுக்கு, மணப்பாறை முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு மற்றும் எள்ளு மிட்டாய் போன்றவைகள் மட்டுமே விற்கப்படுகின்றன.தினை, சாமை, வரகு, நாட்டுக்கம்பு, மூங்கில் அரிசி, பனிவரகு, பூங்கார் அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய உணவு தானியங்களும், ஆவராம்பூ, நெல்லி, நாவல், அருகம்புல், பிரண்டை, திரிபலா சாறு மற்றும் முடக்கு அறுத்தான் சாறு போன்ற மூலிகை சாறுகளும், மூலிகைப் பொடிகளும் விற்கப்படுகின்றன; அத்துடன், செக்கு நல்லெண்ணெய், பசு நெய், நாட்டு சர்க்கரை, உரலில் இடித்த மிளகாய்பொடி போன்றவையும் கிடைக்கிறது.இதன் ஒருபகுதியில், நன்நெறி புத்தகங்கள் மற்றும் சி.டி., விற்கும் கடையும், பழங்கால பித்தளை, செம்பு பொருட்கள் கண்காட்சியகம் இருக்கிறது. விரும்புபவர்களுக்கு, விற்பனையும் உண்டு. கார்பைடு கல்லால், பழுக்க வைக்கப்படாத பல வித பழங்கள், அதன் இயற்கை விளைச்சல் தன்மையுடன் விற்கப்படுகிறது; பிளாஸ்டிக் இங்கு அறவே கிடையாது.இருபதிற்கும் அதிகமாக கிராமத்து பெண்கள் இங்கு வேலை செய்கின்றனர். 'சென்னையை விட்டு வெளியே வரும் போதும், உள்ளே செல்லும் போதும், நல்ல சூழ்நிலையில், நம் பாரம்பரிய உணவை, குடும்பத்தோடும், குதூகலத்தோடும் மக்கள் சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பது தான், என் விருப்பம்...' என்று கூறும் மனோகரன், லாபத்தில், ஒரு பங்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மறுவாழ்வு பள்ளிக்கும்; மற்றொரு பங்கை முதியோர் இல்லத்திற்கும் வழங்கி வருகிறார்.அத்துடன், இவ்வுணவகத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளிடம், இரு சிறு மண் பாத்திரங்களை, இலவசமாக கொடுத்து, 'ஒன்றில் தண்ணிரும், மற்றொன்றில் சிறுதானிய உணவும் நிரப்பி, உங்கள் வீட்டு, மொட்டை மாடியில் வையுங்கள்; வெயில் காலத்தில், பசியோடும், தாகத்தோடும் பறக்கும் பறவைகள் இதை, சாப்பிட்டு சந்தோஷப்படும்...' எனக் கூறி கொடுக்க, குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாங்கிச் செல்கின்றனர்.மனோகரன் மொபைல் எண்: 96297 81777எல்.முருகராஜ்