உள்ளூர் செய்திகள்

குருதட்சணை முக்கியமா?

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது வழக்கம்.குருவானவர், தட்சணையை எதிர்பார்ப்பதில்லை. 'ஸ்ரீஷேமமாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாணவர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக் கொள்வார். மாணவர்களுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை போதிப்பதில் தான் அவரது கவனம் இருக்கும்; தட்சணையைப் பற்றி கவலைப்பட மாட்டார். ஒரு முனிவரிடம், பாடம் பயின்றார் பகவான் கிருஷ்ணன். பாடம் கற்று முடிந்ததும், 'என்ன குரு தட்சணை கொடுக்க வேண்டும்?' என்று கேட்டார். 'எனக்கு தட்சணை எதுவும் வேண்டாம்...' என்றார் முனிவர். நிர்பந்தப்படுத்தி, 'ஏதாவது கேட்க வேண்டும்...' என்றார் பகவான். 'அப்படியானால், பல ஆண்டுகளுக்கு முன், சமுத்திரத்தில் அடித்துச் செல்லப்பட்ட என் குழந்தைகளை கொண்டு வந்து கொடு; அதுவே, குரு தட்சணை...' என்றார்.பகவானும், எமலோகம் சென்று, குழந்தைகளை கொண்டு வந்து குரு விடம் சேர்த்தார்; இது, ஒரு வித குருதட்சணை. குருதட்சணை என்றதும், ஏகலைவன் பெயர் நினைவில் வராமல் இருக்காது!துரோணரிடம், நேரடியாக வில்வித்தை பயிலவில்லை ஏகலைவன். அவரைப் போல ஒரு பிம்பம் செய்து, அதை குருவாக பாவித்து, தானாகவே வில்வித்தை பயின்றான். ஒரு சமயம், தன்னை குருவாக பாவித்து, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்த துரோணர், ஏகலைவனிடம் குருதட்சணை கேட்டார். 'எதை வேண்டுமானாலும் கேளுங்கள்; தருகிறேன்...' என்றான். 'உன் வலது கட்டை விரலை குரு தட்சணையாக கொடு...' என்றார் துரோணர். சிறிதும் தயக்கமின்றி, தன் வலது கை கட்டை விரலை வெட்டி, குரு தட்சணையாக கொடுத்தான் ஏகலைவன். இப்படியாக குருதட்சணை கொடுத்தவர்கள் உண்டு.இந்தக் காலத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள், குருதட்சணை கொடுப்பதற்கு பதிலாக காலேஜ் பீஸ், ஸ்கூல் பீஸ் என்று கொடுத்து விடுகின்றனர். அதுவும், இவர்கள் படிப்பு முடிந்த பிறகு கொடுப்பரோ, மாட்டார்களோ என்று முதலிலேயே, 'அட்மிஷன் பீஸ்' என்று வாங்கி விடுவர். அதன்பிறகு இவர்கள் படித்தால் படிக்கட்டும், இல்லாவிட்டால், கொடி பிடித்து கோஷம் போட்டு ஊர்வலம் போனாலும் போகட்டும் என்று விட்டு விடுகின்றனர்.குரு - மாணவன் உறவு சுமூகமாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம்; குருதட்சணை முக்கியமில்லை. 'இவன் என் மாணவன்...' என்று, குரு பெருமைப்பட வேண்டும்... 'இவர் என் குரு...' என்று மாணவன் பெருமைப்படுத்த வேண்டும். 'குருவுமில்லை, ஒண்ணுமில்லை... எல்லாம் நானே கற்றுக் கொண்டேன்...' என்று சொல்லும் தற்குறிகளும் உண்டு. இவர்கள் எதைக் கற்றுக் கொண்டனரோ... அது, பகவானுக்கே வெளிச்சம்!***ஆன்மிக வினா-விடை!வீட்டில், பூஜை அறையில் இருக்கும் விக்ரகங்களுக்கு, கன்னிப் பெண்கள் அபிஷேகம் செய்யலாமா?கன்னிப் பெண்கள், பூஜை அறையில் இருக்கும் விக்ரகங்களுக்கு, மலர்கள் வைத்து வணங்கலாம்.***- வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !