உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக ... தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் - பகுதி - (3)

இதுவரை:அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான  கம்ப்யூட்டர் விஞ்ஞானியான நரேனுக்கும், கதக் கலைஞரான மதுரிமாவுக்கும் திருமணம் முடிந்து,  அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கவிதா, இப்போது வேறு மாதிரி இருந்தாள். விமான சீருடையைக் களைத்து விட்டு, மெலிதான செயின் கழுத்தை அலங்கரிக்க, குலுங்கி, குலுங்கி நடனமாடும் லோலாக்குகள் காதில் பளிச்சிட்டன. சுரிதார் உடையில் மேலும், 'சிக்'கென்று இருந்தாள்.''ஓ... நீங்க சிங்கப்பூர்ல இறங்கலையா?'' திகைப்புடன் கேட்டாள் மதுரிமா.''இறங்கி, மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன், உங்களை மாதிரி...'' சிரித்துக் கொண்டே சொன்னாள்.அலுப்பாய் இருந்தது மதுரிமாவுக்கு. எதுக்கு 32 பல்லும் தெரியுற மாதிரி சிரிப்பு. இவளை என்னவென்று சொல்லி, மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது.சூழ்ந்திருந்த கூட்டம் நெருங்கியது. தான் தனித்து விடப்பட்டதை பொருட்படுத்தாமல், 'நான் தான் ஹீரோ!' என்று சொல்வதைப் போல, லாவகமாக மதுரிமாவின் தோளை அணைத்து போஸ் கொடுத்தான் நரேன்.கேமராக்கள் மின்னின. சம்பிரதாய அறிமுகம், பரஸ்பரம், 'ஹாய்' எல்லாம் முடிந்து, காரில் ஏறிய போதுதான், மதுரிமா கவனித்தாள்.சற்று ஓரமாக நின்று கொண்டு, கவிதா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.நரேன், அவசர அவசரமாக அவளை பார்த்து கையசைத்து, ''பை...'' என்றான். 'பிறகு போன் செய்றேன்...' என்பதை போல பாவனை செய்தான்.மதுரிமாவிற்கு முதன்முதலாக எரிச்சல் பற்றிக் கொண்டது.இயற்கையிலேயே ரொம்பவும் சாதுவான பெண் மதுரிமா. ஒன்பது சுவையில் கோபம் என ஓன்று இருப்பதையே, அவள் அறிய மாட்டாள்.கவிதாவின் பாவனைகள், மதுரிமாவையே எரிச்சல் பட வைத்தது.ஒரு வாரமே ஆனாலும், பல ஆண்டுகள் நீடித்த பந்தம் போல நரேனிடம் ஒட்டிக் கொண்டாள்.அது ஒரு காஸ்ட்லியான டாக்சி. சீராக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார் டிரைவர். நரேனுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. புதியவள், ஆனாலும், அவனில் பாதி. எத்தனை முறை இந்த சாலையில் பயணித்திருக்கிறான். தனியாகவும், நண்பர்களுடனும், ஏன் பெண் நண்பர்களுடன் கூடத்தான். நரேன் இருக்கும் இடத்தில், எப்போதும் கலகலப்பு இருக்கும்.வாழ்க்கையே மகிழ்வதற்குத்தான் என்ற எதார்த்த கோட்பாடு கொண்டவன். இவ்வளவு எளிதாக திருமண பந்தத்தில் ஈடுபடுத்திக் கொள்வோம் என்று, பத்து நாளைக்கு முன் கனவு காணாத நரேனுக்கு, இது வியப்பாக, திருப்பமாக இருந்தது.நடனம் பார்க்க போனதும், காஷûவலாக மேடையில் பேசியதும், பெண் பார்த்ததும், எல்லாமே செலுத்தி விட்ட அம்பு போல பாய்ந்து, அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயத்தை தொடங்கி வைத்து விட்டது.உடலோடு ஒட்டிக் கொண்டு பயணம் செய்யும் நரேன், எதுவும் பேசாமல் மவுனமாயிருப்பது மதுரிமாவிற்கு வித்தியாசமாகப்பட்டது. செல்லமாக கனைத்தாள்.அவன் சிந்தனை தடைப்பட்டது.கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவதைப் போல உணர்ந்த நரேன், ''டார்லிங்... இப்ப எங்க போறோம்?'' என்றான்.''விமானத்தில் சொன்னேனே... மறந்துட்டீங்களா?''''ஓ மை காட்... நேரா உங்க வீட்டுக்கு போறோம், அப்படித்தானே!''பெருமையாக தலையாட்டினாள்.''பிளைட்டில் உங்களுக்கு எந்த ஞாபகமும் இல்லை; ஏதேதோ சிந்தனை...'' வேண்டுமென்றே அவனை வம்புக்கிழுத்தாள்.''ஆமாம்... ஆமாம்... தங்கச் சிலை மாதிரி ஒரு அப்சரஸ், தொட்டுவிடும் தூரத்தில் அருகில் இருக்கும்போது, வேறு ஞாபகம் எப்படி வரும்,'' என சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.மதுரிமாவிற்கு பெருமையாக இருந்தது.''நீ இந்த ஊர்லே பிறந்தவ... சரிதானே!''''ஆமா!'' என தலையாட்டினாள்.''ஆனா, நான் குடியேறியவன்.''''ஆமா...''''என்ன ஆமா...''''என் இதயத்தில் குடியேறியவர்...''''ஏஞ்சல்... என்ன சமர்த்தா பேசறே,'' என்றவாறு அவள் தோள் மேல் கைபோட்டு வளைக்க யத்தனித்தான்.''நோ ப்ளீஸ்... எல்லாம் வீட்டில்தான்!''''இது ஒரு த்ரில்... ஒரு கிக்... ஒரு சுகம்...''''அது வீட்டிலும் கிடைக்கும்.''''சுத்த கட்டுப்பட்டியா இருக்கியே... நீயெல்லாம் ஒரு அமெரிக்க பெண்ணா?''சிரித்து மழுப்பினாள் மதுரிமா.கார் டிரைவருக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை. அதனால், தம்பதிகள் பேசியது எதுவும் அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.ஒரு மணி நேர கார் பயணம், அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது.இரண்டு பக்கமும் உயரமான கட்டடங்கள், விற்பனைக் கூடங்கள், மால்கள் எல்லாம் பிரமாண்டம். பார்த்து பார்த்து சலித்துப் போன இடம் தான் என்றாலும், இன்று இருவருக்குமே சொர்க்கம் போல காட்சி தந்தது.மதுரிமா கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம், யோசிக்கமால் பதில் சொல்லிக் கொண்டே வந்த நரேனை பார்த்து வியந்தாள்.இவனுக்கு தெரியாத விஷயமே இல்லை போலும் என, நரேனை நினைத்து கர்வப்பட்டாள்.கார், பவ்லி ஹில்சை அடைந்தது. கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கும் இடம் அது. பங்களாவின் முன் டாக்சி நின்றது.''இறங்குங்க!''''ஏன்?''''வீடு வந்துடுச்சு...''''வீடா இது... அரண்மனை!'' வாய் பிளக்காமல் வியந்தான்.மதுரிமாவுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.அமெரிக்காவாக இருந்தாலும், பாரம்பரியத்தை மறக்காத குடும்பம்.இரண்டு சுமங்கலிகள் தயாராக, ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டு நின்றனர்.நரேன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழையும் போது, காரைகுறிச்சியின் நாதஸ்வர இசை, 'சிடி'யில் மங்களகரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.பரந்து விரிந்திருந்த முன் ஹாலில், ராட்சச அளவில் சோபா செட்டுகள், டீபாய்கள் எல்லாம், சினிமா போல கட்சி தந்தன.சோபா ஒன்றில் ஐக்கியமானான் நரேன்.கொஞ்சம் அந்நியப்பட்டவன் போல உணர்ந்தான். சடுதியில் ஒரு இளம்பெண், குளிர்பான குப்பியை கொண்டு வந்து நீட்டினாள்.''தேங்க்யூ!'' எனச் சொன்ன நரேனை, கூர்ந்து பார்த்தாள் அந்த பெண்.''நீங்க...'' என இழுத்தான்.''நான் கல்பனா.''''மதுரிமாவுக்கு உறவா?''''இல்லை. உறவு மாதிரி...''''இன்ட்ரஸ்டிங்... அப்படீன்னா...?''''மதுரிமாவோட அம்மாவின் ஸ்டூடண்ட்.''''ஓ...'' என்று நடனம் போல அபிநயம் பிடித்துக் காட்டினான்.''ஆமா... நாட்டியம் கத்துக்கறேன்,'' என்றவள், அங்கிருந்து அகன்றாள். அவள் நடப்பதே நாட்டியமாக இருந்தது.சடுதியில் உடைமாற்றி வந்த மதுரிமா, ''வாங்க... நம்ம அறைக்குப் போகலாம்,'' என்றாள்.அவளோடு இணைந்து நடந்தான். பிரமாண்டமான அறை. திரும்பிய திசையெல்லாம் திரைச் சீலை மற்றும் ஓவியம், ஆளுயர கண்ணாடிகள், மதுரிமாவின் நாட்டிய உடை புகைப்படங்கள், கலைக்கோவில் போல காட்சி தந்தது.பிரமிப்பிலிருந்து மீள்வதற்கு, நரேனுக்கு வெகு நேரமாயிற்று. பவ்லி ஹில்சை பற்றி கேள்விப்பட்டிருக்கிறான், படித்திருக்கிறான். செல்வச் சீமான்கள் வசிக்கும் அந்தப் பகுதியில், தன் மனைவி, அதுவும் இந்த திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மனைவி, தனக்கு வாய்த்திருப்பதை அதிர்ஷ்டம் என்பதா, பேரதிர்ஷ்டம் என வியப்பதா என்று புரியாமல் திக்குமுக்காடிப் போனான்.பிரமித்து உட்கார்ந்திருந்த நரேனை சீண்டினாள் மதுரிமா.அவன் கண்முன் சொடக்குப் போட்டு, அவனை உலுக்கினாள்.''என்ன நரேன்... பகல் கனவா?'' கலகலவென சிரித்தாள்.அசட்டு சிரிப்பு மட்டுமே நரேனால் பதிலாக தர முடிந்தது.''வாங்க... குளிச்சிட்டு, சாப்பிடலாம். விருந்து காத்திருக்கு,'' என்றாள்.''விருந்தா?''''ஆமா... முதல் விருந்து. நம்ம ஊர்ல சம்பந்தி விருந்தும்பாங்களாம். அந்த நடைமுறை வழக்கம் எல்லாம் ஒன்று விடாம செய்யணும்ன்னு அப்பா ஒத்தை கால்ல நிக்கறார்.''''ஏன்... உங்கப்பாவும் டான்ஸ் ஆடுவாரா?''''குறும்பு தானே!'' - செல்லமாக அவனை தட்டினாள். கையை பிடித்து இழுத்து, வாஷ் ரூமில் தள்ளினாள். அந்த இடம் ஒரே மகிழ்ச்சி மயமாய் சுழன்றது.அவ்வளவு பெரிய டைனிங் டேபிளை பார்த்து, அதில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பார்த்து, அதன் மணத்தை சுவாசித்து, மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிப் போனான்.அவன் அருகே மதுரிமா, தான் சாப்பிடுவதை விட, நரேனுக்கு விழுந்து விழுந்து உபசரித்தாள்.''இதை சுவைச்சுப் பாருங்க... இந்த பிரபரேஷன் சூப்பரா இருக்கும். ஐ நோ யூ வில் லைக் திஸ்...'' இலையில் இருந்ததை விட, மதுரிமா பரிந்துரைத்த பண்டங்கள் அதிகமாகி விட்டது.நரேன் கொறித்தான். சாப்பிட்டதாக பாவ்லா செய்தான்.மதுரிமாவின் அப்பா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், ''நீங்க ரொம்ப புவர்!'' என்றார்.திடுக்கிட்டான் நரேன்.அவர்களை விட பணத்தில் ஏழை என வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறாரோ!மதுரிமாவும் அதிர்ந்தாள்.... ''என்னப்பா பேசறீங்க?''''ஆமாம்மா... ரொம்ப புவர் ஈட்டர்.''அப்பாடா என்று மூச்சு விட்டான் நரேன்.''அப்பா இப்படித்தான், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுவார்.''''ஓ.கே., நோ ப்ராப்ளம்,'' என அவளிடம் கிசுகிசுத்தான் என்றாலும், அவன் மனதில் லேசான ஒரு கீறல் விழுந்தது.அந்தஸ்தில் தான் அவர்களுக்கு சமமில்லையோ, என்ற எண்ணம் லேசாக எட்டிப் பார்த்தது.அன்று முதலிரவுக்காக, கட்டிலை கலை நயத்தோடு அலங்கரித்தனர்.மெதுவாக, மிக மெதுவாக மதுரிமாவின் கையைப் பற்றினான்.விரல்களைத் தடவிக் கொடுத்தான். அபிநய பாவனைகளைக் காட்டும் அந்த தளிர் விரல்கள், அவனைப் பரவசப்படுத்தின.''இது நமக்கு...'' என்ற நரேனை, முழுவதும் சொல்ல விடவில்லை மதுரிமா.''போதும்...'' என்றவளை, வெட்கம் முழுவதுமாக ஆட்சி செலுத்தியது.''என்ன போதும்... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை,'' என்றான் நரேன்.''சீய்...'' அவள்  முகத்தில் புன்னகை மலர்ந்தது. நரேன் அவளை ரசித்தபடி பேசத் தொடங்கினான். அவள் நெருங்கி உட்கார்ந்தாள்.''நிஜமாலுமே நீ பெரிய ஆர்டிஸ்ட் தான். நான் ரொம்பவும் கொடுத்து வச்சவன். அமெரிக்காவில் இருக்கும் போது, கம்ப்யூட்டர் தவிர எதையும் சிந்திச்சதில்ல. எப்போவாவது டான்ஸ் பார்ப்பேன். அதுலே, இந்த கதக் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வேகம் இருந்தா தான் எனக்கு பிடிக்கும். ஸ்லோமோஷன் எனக்கு பிடிக்காத சமாச்சாரம்,'' என்றவாறு, அவளை வளைத்துக் கட்டிப் பிடித்தான்.கட்டிப் பிடித்த அந்த கைகளை மெல்ல விலக்கி, கண்களில் ஒற்றிக் கொண்டாள். மெதுவாக அந்த கரங்களை தன் நெஞ்சில் பதித்துக் கொண்டாள். அந்த கைகளின் வெப்பம், மதுரிமாவை அதிர வைத்தது.மதுரிமாவின் மலர்ச்சியும், குளிர்ச்சியும், அவனை இன்ப இம்சையில் ஆழ்த்தியது. அவளின் செழிப்பான கன்னம் சூடேறும் வகையில், வெகு தாராளமாக முத்தங்களை பரிசாக அளித்தான். யவ்வன சுகம் என்றால் என்ன என்பதற்கு முதலுரையும், முன்னுரையும், விஸ்தாரமாக எழுதி முடித்து ஓய்ந்த போது, ஆப்பிள் துண்டும், திக்கான பாலும், பரஸ்பரம் பரிசாக வழங்கிக் கொண்டனர்.கணினியைக் கையாள்வது சுலபம்; கன்னியை வசப்படுத்துவது சிரமம் என்பர். வல்லவனுக்கு எல்லாம் வசப்படும். நரேன் வல்லவன்.நிறைவோடு அமெரிக்காவில் தாம்பத்திய வாழ்க்கையில் முதல்படி ஏறிய மகிழ்ச்சி, இருவரையும் பற்றிக் கொண்டது.காலை எப்போது மலர்ந்தது என இருவருக்குமே தெரியவில்லை. எழுந்த போது கடிகாரத்தை பார்க்கவில்லை; யாரும் எழுப்பவுமில்லை. அவசர அவசரமாகக் குளித்தவன், பரபரத்தான்.''டிபன் சாப்பிடலாமா?'' கொஞ்சியவாறு கேட்டாள் மதுரிமா.''நோ டார்லிங்... நோ ப்ரேக்பாஸ்ட். கொஞ்சம் காபி கொடு.''''வெளியே போகணுமா?''''ஆமா... ஆபிசுக்குப் போகணுமே!''''ஷ்யூர்...'' கெஞ்சினாள்.''ஆமா டியர்... லீவு முடிஞ்சு இன்னிக்கு போயாகணும்.''''லீவை எக்ஸ்டன்ட் பண்ணுங்க.''''நோ சான்ஸ்.''''மதியம் வந்துடலாமா?''''லெட் மீ ட்ரை.''''நம்மை பார்க்க எங்க உறவினர்கள், நண்பர்கள் வர்றாங்க...''  இழுத்தாள் மதுரிமா. பின்னர் அவளே சமாளித்து, ''மாலைக்குள் வந்துடுவீங்க தானே?''''பார்க்கறேன்.''''அப்புறம், நாளை மறுதினம் லீவு போட்டுடுங்க.''''ஏன்?''''ப்ளைட்டிலேயே சொன்னேன்... மறந்துட்டீங்களா? டோரதி பெவிலியன்ல நான் ஆடப் போகிறேன்.''''ஓ... அந்த பிரமாண்டான ஆடிட்டோரியத்திலா ஆடப் போறே?''''ஆமா... ஆமா...'' என்றாள் உற்சாகத்தோடு.''ப்ளைட்டிலே நான் சொன்னதையெல்லாம் சுத்தமா மறந்துட்டீங்க,'' பொய்க் கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.''புது மனைவி சொல்வதெல்லாம் மனசுக்குள் ஏறுவதில்லை... ஏன்னா அவளுடைய அழகை பார்த்து பார்த்து ரசிக்கவே நேரம் போதலை!''''நல்லாவே பேசறீங்க நரேன்.'' கார் வரை அவனோடு வந்தாள்.''ஓ.கே... பை,'' என்றவாறு, அவன் அவசர அவசரமாக காரில் ஏறிக் கொண்டான். அவனே காரை செலுத்தினான்.மதியம் வந்தது; மாலை மலர்ந்தது. நரேனுக்காக காத்து நின்ற மதுரிமா, மொபைல் போனில் எண்களை அழுத்தி அழுத்தி முயற்சித்தது தான் மிச்சம். கடைசியில், நரேன் அலுவலகத்தை தொடர்பு கொண்டாள். நரேன் அலுவலகத்திற்கே வரவில்லை என்ற தகவல் மட்டும் கிடைத்தது.— தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !