கலைவாணர் என்.எஸ்.கே., (1)
நாகர்கோவில் மாவட்டம், ஒழுகினசேரி கிராமத்தில், தெருவில் போவோர், வருவோர் மீது, ரகசியமாக சிறு கற்களை வீசி, குதூகலமாக சிரித்துக் கொண்டிருந்தான், சிறுவன் ஒருவன். கல் வீச்சால் அடிபட்டு கோபிக்க வந்தார்களானால், ஓடி ஒளிந்து கொள்வது அவனுக்கு ஒரு விளையாட்டு!ஒருநாள், அவ்வழியே வந்த ஒருவர் மீது, சிறு கல்லை எறிந்தான் சிறுவன். தன் மீது கல் வீசிய பையனை திரும்பிப் பார்த்தவர், அவனை கோபிக்காமல், 'ஏண்டாப்பா... சின்னக் கல்லை எறியிறே... இன்னும் கொஞ்சம் பெரிய கல்லா போடு...' என்று சொல்லி, தன் வழியே போய் விட்டார்.அவர் விளையாட்டாக சொன்னதை, சீரியசாக எடுத்து, பெரிய கல் ஒன்றை கையில் எடுத்து வைத்து, 'யாராவது வருகின்றனரா...' என்று, வழியில் விழிகளை வைத்து காத்திருந்தான், சிறுவன்.அவ்வழியே, ஒரு வயோதிக சாமியார் போனார்; கையில் இருந்த கல்லை, அவர் மீது எறிந்தான். அது, அவரது தலையை தாக்கியதில், ரத்தம் பெருகி வழிந்தது.வழக்கமாக ஓடிவிடும் சிறுவன், இம்முறை ஓடவில்லை. 'தான் விளையாட்டாக செய்தது, இத்தகைய படுகாயத்தை உண்டாக்கி விட்டதே...' என்பதை உணர்ந்து, தேம்பித் தேம்பி அழுதான்.பெரியவருக்கு, அவன் மீது இரக்கம் உண்டாயிற்று. அவனை, மெல்ல தம் அருகே இழுத்து, முதுகில் தட்டிக் கொடுத்து, 'கல்லடி பட்டால் காயம் தான் ஏற்படும்; காயம் பட்டதை நினைத்து, உன் மனம் தவறுக்காக வருந்துகிறதே அதுபோதும்... இனி, இத்தகைய கல் வீச்சை, யாரிடமும் காட்டமாட்டாய் என்று நம்புகிறேன். நீ திருந்தி விட்டாய் என்பதை, உன் முகமே காட்டுகிறது; எதிர்காலத்தில் புகழ் பெற்று வாழப் போகிறாய். எல்லாருக்கும் நல்லவனாக, உபகாரியாக நீ இருக்க வேண்டும்...' என்று, அவனுக்கு அறிவுரை கூறிச் சென்றார், முதியவர்.அந்த சிறுவன் வேறு யாருமில்லை... 'நம்ம கிஷ்டன்' என்று கிராமத்து மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவரும், 'எங்கள் என்.எஸ்.கே' என்று, சக கலைஞர்களால் உரிமையுடன் குறிப்பிடப்பட்டவரும், கலை உலகுக்கு கலங்கரை விளக்கம் போல் திகழ்ந்த வருமான, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்!ஒழுகினசேரியில், சுடலை முத்துப் பிள்ளைக்கும், இசக்கி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார், கிருஷ்ணன். நான்காம் வகுப்பு வரை, தமிழும், மலையாளமும் படித்தவர், அதற்குபின், படிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. மனம், வேறு பல திக்குகளில் சுழன்றது. தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார், அவரது அப்பா; அம்மாவோ, வீட்டிலேயே சிறு சோற்றுக்கடை நடத்தினார். மிக ஏழ்மையான குடும்பம்; இருவரும் சம்பாதித்தும் பற்றாக்குறையாகவே இருந்தது.சிறுவயதிலேயே கிருஷ்ணனுக்கு குடும்ப நிலைமை புரிந்ததால், நாடக கொட்டகைகளில், சோடா மற்றும் கலர் விற்க துவங்கினார். அப்போது, அவருக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்.சிறுவன் கிருஷ்ணன், சோடா, கலர் விற்பனைக்கு நடுவே, நாடகத்தையும் கண்டு களித்தான். களிப்புற்ற உள்ளம், அத்துடன் திருப்தி கொள்ளவில்லை... 'நாமும் ஏன் இது போன்று நாடகங்களில் நடிக்கக் கூடாது...' என்ற எண்ணம் ஏற்பட்ட போதெல்லாம், சோடா விற்பனையை மறந்து, நாடக காட்சிகளில் மூழ்கினான்.ஆனாலும், கிருஷ்ணனின் வியாபாரம் நாளுக்கு நாள் விரிந்தது. தம்மிடம் விரும்பி சோடா, கலர் வாங்கிப் பருகுவோரின் கூட்டம் மிகுந்து வருவதை அறிந்தவன், வீட்டில் சில பலகாரங்களை செய்து, அதற்கு புதுப் பெயரிட்டு, நாடகக் கொட்டகைகளில், சுறுசுறுப்பாக விற்க துவங்கினான்.அவனது வேடிக்கைப் பேச்சு, விற்பனைக்கு பேருதவியாக இருந்தது. புது வியாபாரத்துக்கு நடுவே, நாடக ஆசையும் நசிந்து விடவில்லை; அந்த ஆசை, புதுப்புது நம்பிக்கைகளை, அவனுக்குள் விதைத்து கொண்டேயிருந்தது.அக்காலத்தில், சிறுவர்களை கொண்ட, 'பாய்ஸ்' கம்பெனிகள், சிறப்பாக நாடகங்களை நடத்தி வந்தன. மதுரையில், 'பாய்ஸ்' கம்பெனி ஒன்றை துவங்கியிருந்தார், ஜகந்நாதய்யர். பின்னர், சினிமா துறையில், பிரபலமாக இருந்த பல நடிகர்களுக்கு, அதுவே பயிற்சிக் கூடமாக இருந்தது.'பாய்ஸ்' கம்பெனிகளை பற்றிச் சொல்லும் போது, சங்கரதாஸ் சுவாமிகளை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த நாளைய நாடக வாத்தியாரான அவர், பல நாடகங்களுக்கு, விதவிதமான, வர்ண மெட்டுக்களோடு, பாடல்களையும், நாடக பாத்திரங்களுக்கேற்ப, வளமான வசனங்களையும் எழுதினார்; சிறுவர்களுக்கு நடிப்பு கற்பித்தார். அவரது அபாரமான கலைத் தொண்டு, எத்தனையோ பால நடிகர்களை, மேடையேற்றியது.அவ்வழியில் உருவாகிய, 'பாய்ஸ்' கம்பெனிகளில் முக்கியமானது, டி.கே.எஸ்., சகோதரர்களுடையது!கடந்த, 1924ல், நாகர்கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு, 'பாய்ஸ்' கம்பெனியில் சேர்ப்பதற்காக, கிருஷ்ணனை அழைத்து வந்தார், அவரது தந்தை சுடலை முத்துப் பிள்ளை. பொதுவாக, அப்பாக்கள், தங்கள் பிள்ளைகள் நாடகம், தெருக்யகூத்து போன்றவைகளில், மனத்தை அலைய விட்டால், சினம் கொள்வர்; சீறி எழுவர். 'வீணாக கெட்டுப் போகாதே...' என்று கண்டிப்பர். ஆனால், என்.எஸ்.கே.,யின் தந்தையோ, வேறு விதமாக நடந்து கொண்டார்.'மகனின் மனம், நாடக கலையில் நாட்டம் கொள்கிறது; அதில் தான், அவனை விட்டு திருப்ப வேண்டும்...' என்பது, அவரது எண்ணம். அதனால், தன் மகனை, 'பாய்ஸ்' கம்பெனியில் சேர்த்து விட்டார்.அக்கம்பெனியில் பால நடிகராக இருந்தார், டி.எஸ்.துரைராஜ்; கிருஷ்ணனின் வேடிக்கை பேச்சு மற்றும் பூப்பந்தாட்டத்தில் அவருக்கிருந்த திறமையை கண்டு அவரை மிகவும் நேசித்தார். இருவரும் மிகவும் நட்பு கொண்டிருந்த நிலையில், ஒரு சில நாட்களிலேயே நாகர்கோவில், 'பாய்ஸ்' கம்பெனியிலிருந்து, விலகி, டி.கே.எஸ்., சகோதரர்களின் கம்பெனியில் சேர்ந்தார், என்.எஸ்.கிருஷ்ணன். இதன் காரணமாக, நண்பர் துரைராஜை மனமின்றி, பிரிந்து சென்றார்.திருவனந்தபுரத்தில், 1925ல், 'மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா'வை ஆரம்பித்தனர், டி.கே.எஸ்., சகோதரர்கள். கம்பெனியில் நடிக்க சிறுவர்களை அழைத்து வரும் பொறுப்பு, அவர்களது மாமா செல்லப்பிள்ளையிடம் இருந்தது.பல இடங்களில் சுற்றி அலைந்து, அழகான சிறுவர்களை கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன், திருவனந்தபுரத்திற்கு அழைத்து வரும் பெரும் பணி, இவருடையது. இதனாலேயே இவர், கம்பெனியின், 'செல்லப்பிள்ளை'யாக இருந்தார். — தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம்பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.மா. பாலசுப்ரமணியன்