உள்ளூர் செய்திகள்

கலைவாணர் என்.எஸ்.கே. (3)

கடந்த, 1926ல், டி.கே.எஸ்., சகோதரர்களின் கம்பெனிக்கு, நாடக ஆசிரியராக வந்து சேர்ந்தார், எம்.கந்தசாமி முதலியார். அவரது வருகையால், கம்பெனி மறுமலர்ச்சி அடைந்தது; அதுவரை, பழைய புராண நாடகங்களையே நடத்தி வந்த, டி.கே.எஸ்., சகோதரர்கள், புதுப்பாதையில் உற்சாக நடை போட ஆரம்பித்தனர்.ராஜாம்பாள் மற்றும் ராஜேந்திரன் போன்ற, புதிய சமூக நாடகங்களை தயாரித்தார், கந்தசாமி முதலியார். அந்த நாடகங்களில் எல்லாம், முக்கிய நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தார், கலைவாணர். சமூக நாடகங்களை நடத்த நினைப்பதே, மகத்தான சாதனையாக கருதப்பட்ட காலம் அது.டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடக கம்பெனி, அதை துணிந்து செய்து, வெற்றியும் பெற்றது.அந்த வெற்றிப் பாதையில் விளைந்த நாடகங்களில் ஒன்றே, மேனகா நாடகம். புரட்சிகரமான கதை போக்கை கொண்ட அந்நாடகம், பெரும் வெற்றி பெற்றது. அதில், சாமா அய்யர் என்ற கதாபாத்திரத்தில், அபாரமாக நடித்திருப்பார், கலைவாணர்.இதனால், நாடகம் பார்க்க வருவோர், 'எப்போது சாமா அய்யர் தொடர்புள்ள காட்சிகள் வரும்...' என்று எதிர்பார்ப்பர். அவர் மேடையில் தோன்றி விட்டால் போதும்... புளியம்பழம் உடைப்பது போல், 'பட் பட்' என்று கைதட்டி, உற்சாக ஒலி கிளப்புவர்!அந்த அளவுக்கு, கலைவாணர், நிகரற்ற நகைச்சுவை நடிகராக இருந்த போதும், சில மாதங்களிலேயே அக்கம்பெனியிலிருந்து அவர் விலக நேர்ந்தது.டி.கே.எஸ்., சகோதரர்களின் கம்பெனியிலிருந்து கலைவாணர் விலகிய செய்தி அறிந்த மற்ற, 'பாய்ஸ்' கம்பெனிகள் சும்மா இருக்குமா... கோல்டன் சாரதாம்பாள் நாடக கம்பெனியின் முதலாளி, கலைவாணரை தம் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்.அக்காலத்தில், கலைவாணருக்கு மிகவும் ஆதரவு அளித்து வந்தவர், அந்நாளில் பிரபல நாடக ஆசிரியரும், பாடலாசிரியருமான, லட்சுமணதாஸ். இவர், கலைவாணரை, 'என்னடா கிருஷ்ணா...' என்று தான் அழைப்பார்.கலைவாணர் புகழ்பெற்றிருந்த நிலையில், அவரை, தாஸ், 'டா' போட்டு அழைப்பதை, சக நடிகர்கள் சிலர் விரும்பவில்லை. 'பிரபல நகைச்சுவை நடிகரான பின்பும் ஏக வசனமிட்டு அழைப்பது சரியல்ல...' என்று கோபமடைந்தனர். அதை, கலைவாணரிடம் சுட்டிக் காட்டினர்.ஒருநாள் நடுப்பகல்; தன் நடிக நண்பர்களோடு சாப்பிட உட்கார்ந்தார் கலைவாணர். பக்கத்தில், பாடலாசிரியர் லட்சுமண தாஸ். அப்போது, கலைவாணர், தன் நண்பர்களைப் பார்த்து, 'இந்த லட்சுமணதாஸ் யார் தெரியுமா... ஒரு சமயம், ஒரு ஊர்ல நாடகம் நடத்த போனோம். எங்க நாடகங்கள் பலவற்றை நடத்திய கான்ட்ராக்டர் ஒருவர், நாடகங்கள் நடந்து முடிஞ்ச பின்பும், அங்கிருந்து எங்கள விடுவதாக இல்ல; சரி, செலவுக்காவது பணம் கொடுத்தாரா என்றால், அதுவுமில்ல. 'அதப் பத்தி நாங்க ஏதாவது கேட்டா, 'உம்'மென்று உறுமி, விரட்டி அடித்து விடுவார். கையில் காசில்லாமல், அந்த ஊரில், நாங்க திண்டாடிய நிலையில் லட்சுமணதாஸ் அந்தக் கான்ட்ராக்டரிடம், எங்களுக்காக போராடி, எப்படியோ, பணத்தை வாங்கிக் கொடுத்தார். அவரிடமிருந்து விடுதலை பெற்று, நாங்க ஊர் திரும்பவும் வழி செய்தார். 'அப்போது, நான் சாதாரண நடிகன்; இவரோ, பிரபல கவிஞர். இவர் ஏன், எனக்கு மரியாதை கொடுத்துப் பேசணும்... அதை, நான் தான் இவர்கிட்ட எதிர்பார்க்க முடியுமா... அன்று, இவர் என்னை, 'என்னடா கிருஷ்ணா...' என்று கூப்பிட்டது போலவே, இன்றும் கூப்பிடுவது தான் நியாயம்...' என்று, எப்போதோ நடந்த ஒரு நிகழ்ச்சியை, உருக்கமாக கூறினார்.அதைக் கேட்டதும், லட்சுமணதாஸ் மீது, அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கோபம், போன இடம் தெரியவில்லை.கலைவாணர் கூறியதைக் கேட்ட லட்சுமணதாஸ், அவர் தம்மிடம் எப்படிப்பட்ட பக்தியும், மரியாதையும் வைத்துள்ளார் என்பதை அறிந்து, பெருமை அடைந்தார்.அதற்குபின், கலைவாணரை, 'என்னப்பா... வாப்பா...' என்று லட்சுமண தாஸ் அழைக்க ஆரம்பிக்க, அதை விரும்பாத கலைவாணர், 'உங்களுக்கு நான் என்றும், 'என்னடா கிருஷ்ணா' தான்...' என்றார்.கவிஞரின் உள்ளம், பெருமையால் பூரித்தது.கோல்டன் சாரதாம்பாளின் நாடக கம்பெனி, கேரள மாநிலம் ஆலப்புழையில் நாடகங்களை நடத்திய போது, ஒரு சம்பவம் நடந்தது. அன்று, சம்பூர்ண ராமாயணம் நாடகம் நடைபெற்றது. கலைவாணரோடு, என்.எஸ்.நாராயண பிள்ளையும், நகைச்சுவை காட்சிகளில் பங்கு பெற்றிருந்தார். சூர்ப்பனகை பங்கத்துக்குப் பின், கர - தூஷண வதம் செய்யப்படுகிற காட்சி. கரனாக, நாராயண பிள்ளையும், தூஷணன் வேடத்தில் கலைவாணரும் நடித்திருந்தனர். கர வேஷதாரி, வதம் செய்யப்படுவதற்கு முன், சிறிது நேரம், வேடிக்கையான வசனங்களை பேசுவது வழக்கம். அன்று மேடையேறிய கர வேஷதாரி நாராயண பிள்ளை, 'ஏ தங்காய்... சூர்ப்பனங்காய்...' என்பது போல், 'காய்' என முடியும் வசனங்களை பேச, மக்கள் கை தட்டி ரசித்தனர். தூஷணன் வேடமிட்டிருந்த கலைவாணரோ, நாராயணப் பிள்ளையை விட, அதிகமாக, மக்களின் கரகோஷத்தைப் பெற விரும்பினார். அதற்காக, தாமே ஒரு யோசனை செய்து, ராமர் வேடதாரியை பார்த்து, 'நீலமேக சியாமள ரூபா... அணா, பைசா...' என்று வசனம் பேசினார்.கலைவாணர் அதைச் சொன்னதும், பெரிய அளவில், கரவொலி கேட்டது. அக்காட்சி முடிந்து கலைவாணரும், நாராயண பிள்ளையும் உள்ளே சென்றதும், நாராயண பிள்ளை, 'கிருஷ்ணா... என்னப்பா இது... இப்படி காலமறியாத காமெடி செய்து விட்டாய்... ராமாயண காலத்தில் ரூபா, அணா, பைசா ஏது...' என்று கேட்டார்.'ஏதோ வாயில் வந்ததை சொல்லி விட்டேன்...' என்று தம் தவறை ஒப்புக் கொண்டார் கலைவாணர். அருகிலிருந்த நாடக முதலாளி சாரதாம்பாள், 'எதை சொன்னாலென்ன... உன்னை விட, அதிகமாக, மக்களின் ஆதரவை பெற்று விட்டான், கிருஷ்ணன். ராமாயண காலம், அது, இது என்று, நாடகத்தின் நடுவே பார்க்க முடியுமா... ஏதாவது சொல்லி, கிருஷ்ணனின் உற்சாகத்தை கெடுத்து வைக்காதே...' என்றார்.ஆனாலும், 'காலத்துக்கு ஒவ்வாத நகைச்சுவை செய்தது சரியல்ல...' என்ற எண்ணம் கலைவாணர் மனதை வாட்டியது.அடுத்த நாள் இரவு, ராமாயண நாடகம் நடந்தது; கர, தூஷண அரக்கர்கள், மேடைக்கு வரும் காட்சி ஆரம்பமாயிற்று. கரனாக வந்த நாராயண பிள்ளை, தம் வழக்கமான வசனங்களைப் பேசி, வதம் செய்யப்பட்டு, மேடையில் விழுந்து கிடந்தார். அடுத்தபடியாக, மேடைக்கு வர வேண்டிய தூஷணனாகிய கலைவாணரை காணோம்.ஆனால், பெரிய அளவில் மக்களின் சிரிப்பொலி கேட்டது. 'குறிப்பிட்ட நடிகர் மேடைக்கு வரவில்லை என்றால், விசிலடித்து, ஆர்ப்பாட்டம் செய்வது தானே வழக்கம். ஆனால், உற்சாகமான சிரிப்பொலியும், கைதட்டும் ஓசையும் கேட்கிறதே...' என நினைத்த நாராயண பிள்ளைக்கு, 'மக்கள் ஏன் தொடர்ந்து சிரிக்கின்றனர்...' என்ற காரணம் புரியவில்லை.'ஒருவேளை, பிணம் போல் விழுந்து கிடக்கும் தம் நடிப்பில், ஏதேனும் குறை கண்டிருப்பரோ...' என்று, மூடிய கண்களோடு குழம்பினார். ஏனெனில், அவர் தான், ஸ்ரீராமரின் வில்லால், 'வதம்' செய்யப்பட்டு கிடந்தாரே!பிறகு தான் மக்களது சிரிப்புக்கு காரணம் புரிந்தது. தூஷணன் வேடம் தாங்கிய கலைவாணர், ஒரு நீண்ட மூக்கை ஒட்ட வைத்து, அடி மேல் அடி வைத்து நடந்து வந்துள்ளார். அந்த பிரமாண்டமான ராட்சச மூக்கு தான், நாடகம் பார்த்தோரை பெரிய அளவில், குலுங்கி சிரிக்க வைத்திருந்தது.முதல் நாள் காலமறியாத, 'காமிக்' செய்து, மக்களை மகிழ்வித்தது தவறு என்று முடிவு செய்த கலைவாணர், இன்று, எந்த விதமான வசனமும் பேசாமலேயே, மக்களை சிரிக்க வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, மூக்கை ஒட்ட வைத்து, அந்தக் காட்சியை புதுவிதமாக பரிமளிக்க செய்திருந்தார்.காட்சி முடிந்ததும், ஓடிச் சென்று, கலைவாணரை கட்டிக் கொண்டார், நாராயண பிள்ளை.'கிருஷ்ணா... இன்றும் உனக்கு தான் வெற்றி; வசனம் பேசாமலேயே, அந்த வெற்றியை பெற்று விட்டாய்...' என்று பாராட்டினார்.'அப்படியா...' என்று மிக சாதாரணமாக கேட்டவாறே, ரவையால் செய்யப்பட்டிருந்த போலி மூக்கை, தம் கையால், விண்டு எடுத்தார்.— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம்பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.மா. பாலசுப்ரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !