உள்ளூர் செய்திகள்

கலைவாணர் என்.எஸ்.கே. (4)

ஹெரால்ட் லாயிட் என்ற மேல்நாட்டு நகைச்சுவை நடிகரை, அக்கால சினிமா ரசிகர்கள் நன்கு அறிவர். சினிமா பெரிதளவில் பேசப்படாத காலத்திலேயே லாயிட் படங்களுக்கு, நல்ல வரவேற்பு இருந்தது.ஹெரால்ட் லாயிட் படங்களில், அவர் ஏற்று நடித்திருக்கும் பாத்திரங்களின் தன்மையும், உடை அலங்காரமும், கிருஷ்ணனை பெரிதும் கவர்ந்தன. லாயிட் அணிந்திருந்த ஸ்டிராஹேட், ஷெல்பிரேம் மூக்குக் கண்ணாடி கிருஷ்ணனுக்கு மிகவும் பிடிக்க, அத்தகைய தோற்றத்துடன், நடிக்க விரும்பினார். அந்த ஆசை, சதி லீலாவதி படத்தின் மூலம் நிறைவேறியது. என்.எஸ்.கிருஷ்ணன் முதன் முதலில் சினிமாவில் நடித்த படம் இது!கதை, ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன்; நாடக ஆசிரியர் கந்தசாமி முதலியார் நிர்வாகத்தில் துவங்கப் பெற்ற, சதி லீலாவதி படத்தில், முதலியாரின் மகன் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ஆர்., மற்றும் கே.ஏ.தங்கவேலு ஆகியோருடன், என்.எஸ்.கிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார்.இப்படத்தில், கிருஷ்ணனுக்கு சிறு வேடம் தரப்பட்டிருந்தது. கதாநாயகனை ஏமாற்றி, ஒரு தாசியிடம் அவனுக்கு தொடர்பு ஏற்படுத்தும் பாத்திரம் அது. அதில் நடிக்க, அவருக்கு அதிக சந்தர்ப்பமில்லை. அதனால், ஒருநாள் காலை, கந்தசாமி முதலியாரை காண, திருவள்ளூர் புறப்பட்டுச் சென்றார், கிருஷ்ணன்.அந்த ஊரில் தான், தன் கம்பெனி நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார், கந்தசாமி முதலியார். அத்துடன், சதி லீலாவதி படத்திற்கு, கதை வசனமும் எழுதினார். அவரிடம் சென்ற கிருஷ்ணன், தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்ற குறையை சொல்லி, தமக்கென ஒரு புதிய பாத்திரத்தை சிருஷ்டித்து, உற்சாகமாக திரும்பினார்.அந்தப் புதிய பாத்திரம், படம் பார்ப்போரின் மனதில் நிற்க, அதன் மூலம், சினிமாவில் பிரபலமானார் கிருஷ்ணன்.என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் படம், சதி லீலாவதி என்றாலும், வெளிவந்த முதல் படம், மேனகா! டி.கே.எஸ்., நாடக மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை, சண்முகானந்தா டாக்கீஸார் படமாக தயாரித்தனர். அதில், முக்கிய வேடங்களில் நடித்தனர், டி.கே.எஸ்., சகோதரர்கள். கிருஷ்ணனுக்கு நாடகத்தில் நடித்த அதே சாமா அய்யர் வேடம் தரப்பட்டது.அப்போதெல்லாம், தமிழகத்தில் சினிமா ஸ்டுடியோக்கள் நிறுவப்படாத காலம். அதனால், படம் எடுக்க வேண்டுமென்றால், மும்பை, கோல்கட்டா என்று பயணப் பட வேண்டும். எனவே, 1934ல், மேனகா படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் நடந்தது.அன்று, தாசி கமலம் வீட்டில், சாமா அய்யர் அகப்பட்டுக் கொள்ளும் ஒரு வேடிக்கையான காட்சி படமாக்கப் படவேண்டும்.நாடகத்தில், அது சுவை நிரம்பிய காட்சி என்பதால், அதை வேடிக்கை பார்க்க பிற நடிகர்களும் கூடியிருந்தனர்.படப்பிடிப்பு ஆரம்பமாயிற்று; படத்தின் இயக்குனரான ராஜா சாண்டோ, தம் வழக்கமான அட்டகாச தோரணைகளுடன், படப்பிடிப்பு அறையில் முழங்கியவாறு இருந்தார். சாமா அய்யரும், தாசி கமலமும் கட்டிலில் அமர்ந்து, உரையாடும் காட்சி; சாமா அய்யருக்காக கொடுக்கப்பட்டிருந்த காதல் பாட்டை, தம் சொந்தக் குரலில் பாடினார் கிருஷ்ணன்.பாட்டு முடிந்ததும், வேடிக்கை பார்த்த டி.கே.சண்முகத்தை பார்த்து, சிறிது சிரித்தார், கிருஷ்ணன். அந்த சிரிப்போடு, கொஞ்சம் சினமும் சேர்ந்திருந்தது. காரணம், படப்பிடிப்பு எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது.சாமா அய்யரை மயக்கி, கொள்ளையடிக்கும் திட்டத்தோடு அழைத்து வந்திருந்த தாசி கமலம், அவரை தொடவில்லை; பக்கத்தில் நெருங்கி உட்காரவும் இல்லை. இருவருக்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்க, படத்திற்குரிய வசனங்களை மட்டும் பேசி முடித்து விட்டாள் கமலம். அதேபோன்று, சாமா அய்யரின் சல்லாப பேச்சுகளும், காமா சோமாவென்று பேசப்பட்டன.அந்தக் காட்சி, நாடகத்தை விட, படத்தில் இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவரை ஒருவர் தொடாமலேயே, அக்காதல் காட்சி படமாக்கப்படுவதை கண்டு, டி.கே.சண்முகம் மட்டுமல்ல, படத் தயாரிப்பாளரான மொஹைதீன் - சோமசுந்தரம் (இவர்களே பிறகு, ஜூபிடர் பிக்சர்சை அமைத்தவர்கள்) ஆகியோரும் திகைத்தனர்.அடுத்து, திருடர்கள், கட்டிலைச் சூழ்ந்து கொள்ள, தாசி கமலம், அவர்களை கண்டு அச்சமுற்றவள் போல், சாமா அய்யரைக் கட்டிக் கொள்ள, அவளை, ஒரு கையால் பிடித்தபடி, திருடர்களுடன் போராட வேண்டும். இக்காட்சியை கிருஷ்ணனுக்கு விளக்கிய, இயக்குனர் ராஜா சாண்டோ, 'கிருஷ்ணா... நீ இந்த இடத்தில் நிற்கிறாய்; கமலம் அங்கே நிற்கிறாள். திருடர்கள் வந்ததும், அவள் அஞ்சி, ஓடி வந்து உன்னைக் கட்டிக் கொள்கிறாள். நீ, உடனே வீரத்தோடு, திருடர்கள் மீது பாய வேண்டும்...' என்று தெரிவித்தார்.எல்லாவற்றையும் கேட்ட கிருஷ்ணன், ஆத்திரத்தை அடக்கி, 'எல்லாம் சரி... ஆனால், அந்த அம்மாள், என்னை கட்டிக் கொள்ளாதபடி, வேறு ஏதாவது சம்பவத்தை மாற்றுங்களேன்...' என்றார்.அதைக் கேட்டு, முகம் சுருங்க, 'ஏன் அவள் உன்னைக் கட்டிக் கொள்ளக் கூடாது...' என்று கேட்டார் ராஜா சாண்டோ.'நான் பதிவிரதன்...' என்றார், கிருஷ்ணன்.'என்ன... பதிவிரதனா... இதென்னடா புதிசாக இருக்கு...' என்றார் சிறு உறுமலோடு!'புதிது ஒண்ணுமில்ல; பெண்கள்ல பதிவிரதை இல்லயா... அதுபோல, ஆண்களில் நான் பதிவிரதன். என் மனைவி நாகம்மாளை தவிர, வேறு எந்த பெண்ணையும் தொடுறதில்லன்னு வைராக்கியமா இருக்கேன். நான் ஏகபத்தினி விரதன்...' என்றார் கலைவாணர்.'என்ன.... இந்த என்.எஸ்.கிருஷ்ணன் தகராறு செய்கிறானே...' என்றார் கோபத்துடன் இயக்குனர் சாண்டோ.கிருஷ்ணன், இயக்குனரிடம் தைரியமாக பேசியதை கேட்டதும், மொஹைதீனுக்கு தைரியம் வந்து, 'பின்னே என்ன சார்... இந்த சீனை இப்படியா படமாக்குறது... மேனகா நாடகத்தில இதே காட்சியில், கிருஷ்ணன் - சாமா அய்யராகவும், ஷண்முகம் - தாசி கமலமாகவும் எப்படி நடிப்பாங்க தெரியுமா... இருவரும் கட்டிப் புரளுவர்; ஆனா, நீங்கள் ரெண்டு பேரையும் தள்ளி உட்கார வைத்து, ஒருவரையொருவர் தொடக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க... இது என்ன காதல் சீனா... தாசி வருகிற ஒரு சீனை, இப்படி படமாக்கியதில், கிருஷ்ணனுக்கு வருத்தம்; அதனால் தான், அவர் அப்படிச் சொல்றார்...' என்று விவரித்தார் மொஹைதீன்.உண்மை புரிய, 'நான் பதிவிரதன்...' என்று கிருஷ்ணன் சொன்னதை நினைத்து சிரித்தவாறு, 'சரிடா கிருஷ்ணா... காரணத்த அப்பயே என்கிட்ட சொல்லியிருக்கலாமே... சரி விடு... திரும்பவும் அந்தக் காட்சியைப் படமாக்குறேன். உன் இஷ்டம் போல், காதல் காட்சியில் வெளுத்துக் கட்டு...' என்றார்.அனைவர் முகங்களிலும், ஆனந்தம் தாண்டவமாடியது. 'இயக்குனர் ராஜா சாண்டோ இந்தளவுக்கு விட்டுக் கொடுத்தது, பெரிய விஷயம்...' என்று, மெல்லிய குரலில் பேசிக் கொண்டனர்.கலைவாணர் விருப்பம் போல், அக்காட்சிகள் படமாக்கப்பட்டன.சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - மும்பை ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளே இருந்தன. பூனாவில் நடைபெறவிருக்கும், வசந்தசேனா எனும் தமிழ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ஒரு கோஷ்டி, அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில், அந்தக் கோஷ்டியை அழைத்துச் செல்லும் இரு மேனேஜர்களிடையே தகராறு வர, அவர்கள் தகராறு தீருவதற்குள், ரயில் புறப்பட்டு விட்டது.— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம் பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.மா. பாலசுப்ரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !