உள்ளூர் செய்திகள்

சமையல் வேலை செய்யும் கோடீஸ்வர தொழில் அதிபர்!

சீனாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வர தொழில் அதிபர், லியு ஜிங்ஜாங், 39. எட்டு கார்கள், மிகப் பெரிய பங்களாக்கள், சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் சொத்துக்கள் என, ஆடம்பரமாக வாழ்ந்த லியு, தற்போது, அங்குள்ள ஒரு புத்த கோவிலில், சிறிய அறையில், சமையல் வேலை செய்து வருகிறார்.சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில் தப்பித்த லியுவுக்கு, வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதனால், ஆடம்பரங்களை எல்லாம் உதறி, ஜிங்காய் மாகாணத்தில் ஆள் அரவமற்ற மலைத் தொடருக்கு சென்று, இரண்டு ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்தார்.பாறைகளில் படுத்து உறங்கி, கிடைத்த காய், கனிகளை சாப்பிட்டு, கடுமையான யோகா பயிற்சிகளை மேற்கொண்டு திரும்பிய லியு, தற்போது, புத்த கோவிலில், அங்குள்ள துறவிகள் கூறும் வேலைகள் மற்றும் சமையல் செய்வது என, சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்.'நாமும் ஒருநாள் மரணம் அடையப் போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால், போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை, ஆடம்பரம், அதிகாரம் என, எதுவுமே, நம் மனதுக்குள் புகாது. நான், அதை உணர்ந்து விட்டேன்; அதனால் தான், இந்த எளிய வாழ்க்கையை விரும்புகிறேன்...' என்கிறார், லியு. — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !