வீரம் விளைந்த பூமி! (3)
அரங்கத்தில், போர் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது...அது, டிச., 4, 1971ம் ஆண்டு, நள்ளிரவு நேரம்... ராஜஸ்தான் மாநிலம், லோங்கேவாலா தார் பாலைவனத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில், மேஜர் குல்தீப் சிங் சாந்த்பூரி தலைமையில், 120 வீரர்கள் கொண்ட, 23வது பஞ்சாப் பட்டாலியன், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது.நுாற்றுக்கணக்கான பீரங்கிகளுடன், 3,000 பாகிஸ்தான் வீரர்கள் லோங்கேவாலாவை நோக்கி நகர்ந்தனர். கொஞ்சமும் பதற்றமடையாத, பஞ்சாப் ரெஜிமென்ட் மேஜர் குல்தீப்சிங், 'எதிரிகளை கண்டு ஓட வேண்டாம்; நான் ஓட மாட்டேன். நான் ஓடினால், என்னை சுட்டுக் கொல்லுங்கள்; அதுபோல், மற்ற வீரர்கள் யாரேனும் ஓடினால், அவர்களை நான் சுட்டுக் கொல்வேன்...' என்று முழங்கினார்.அவரது வீர உரையை கேட்ட, இந்திய சிப்பாய்கள், 'உங்கள் பேச்சிற்கு அடி பணிகிறோம்...' என்றனர். அடுத்த கணம், 'விடிவதற்குள் லோங்கேவாலா எல்லையில் போர் விமானங்கள் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்...' என்று, ஜெய்சல்மரில் உள்ள இந்திய விமான படைக்கு தகவல் அனுப்பினார், மேஜர்.எதிரிகளை நுழைய விடாமல், எல்லையில் கண்ணி வெடிகளை புதைத்தனர், இந்திய வீரர்கள். அந்தக் கண்ணி வெடியில் சிக்கி, பாகிஸ்தான் பீரங்கிகள் சின்னாபின்னமானது. விடிய விடிய நடந்த இந்த போர் தந்திரத்தால், பாகிஸ்தான் ராணுவத்தை சிதறடித்தது, பஞ்சாப் ரெஜிமென்ட்!பொழுது விடிந்தது... ஜெய்சல்மர் விமான படை தளத்தில் இருந்து சீறி பாய்ந்த, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் பீரங்கிகள் மீது, ஏவுகணைகளை வீசின. 37 பாகிஸ்தான் பீரங்கிகள் தகர்க்கப்பட்டன; 179 வீரர்கள் கொல்லப்பட்டனர். விமான படை தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது, பாகிஸ்தான் படை.பஞ்சாப் ரெஜிமென்ட்டிற்கு, நாடு முழுவதும் பாராட்டு மழை குவிந்தது. மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றது, அப்படை!- குறும்படம் முடிந்ததும், பார்வையாளர்கள் அனைவரின் நெஞ்சும் பெருமிதத்தால் விம்மியது. நம் ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்கி, கைதட்டி பாராட்டை தெரிவித்தோம்!லோங்கேவாலாவிலிருந்து திரும்பும் போது, பாலைவன மணற்பரப்பில், பலவகை மணிகள் கோர்க்கப்பட்ட வண்ணச் சால்வை போர்த்தி, கழுத்தை ஒய்யாரமாக நீட்டியபடி, சவாரிக்கு தயாராக நின்றிருந்தன, ஒட்டகங்கள்.ஒட்டகத்தில் சவாரி செய்ய, காலையில், 6:00 - 8:00 மணி வரை, 20 ரூபாய்; அதே மாலையானால், 100 ரூபாய்க்கும் மேல் வாங்குகின்றனர். நாங்கள் ஒட்டக சவாரி போகவில்லை. ஆனால், ஜீப் சவாரி சென்றோம். அந்த மணற்பரப்பில், மலைக் குன்றில் ஏறுவதுபோல், மேலே ஏறுவதும், சறுக்குவதும் என, ஜீப் சவாரி, செம த்ரில்! இதற்கு அரை மணி நேரத்துக்கு கட்டணம், ஒருவருக்கு, 100 ரூபாய்!ஜீப்பில் பயணப்படும் போதே, ஆங்காங்கே தெரிந்த உ.பா., கடைகளை பார்த்ததும், உ.பா., பிரியர்களுக்கு தாக சாந்தியை தீர்த்துக் கொள்ளும் ஆவலில் கை, கால் பரபரத்தன. ஆனாலும் என்ன செய்ய... வந்த இடத்தில் ஏடா கூடமாக ஆகிவிடக் கூடாதே என்று, மனதை கட்டுப்படுத்திக் கொண்டனர்.அன்று இரவு, ஜெய்சல்மார் பாலைவனப் பகுதியில் ஒரு ரிசார்ட்டில் தங்கினோம். ரிசார்ட் என்றதும், ஐந்து நட்சத்திர ஓட்டல் அளவுக்கு கற்பனை செய்து விடாதீர்கள்... இரு படுக்கைகள், மின் விசிறி, கழிப்பறை வசதி கொண்ட, ஒரு, 'டென்ட்' கொட்டகை அது. இதுபோன்று, நிறைய கொட்டகைகள் வரிசையாக உள்ளன. ஒருநாள் தங்க, உணவு உட்பட, ஒருவருக்கு, 4,500 ரூபாய் கட்டணம். இரவில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டுகிறது. நடன மங்கையர், பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர். அவர்களுடன், இணைந்து பார்வையாளர்களும் ஆட்டம் போடலாம். ஆனால், மது அருந்தி ஆட, தடை உள்ளது.உற்சாக மிகுதியில், நம் குழுவினர் சிலரும் அவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டனர். சிலர், நல்ல பிள்ளைகளாக கைகட்டி வேடிக்கை பார்த்தனர். காலையில், அங்கேயே, 'பிரேக் பாஸ்ட்'டை முடித்து, அங்கிருந்து ஜோத்பூர் கிளம்பினோம். வழியில், மற்றொரு அருங்காட்சியகத்தை கண்டோம். மிக பிரமாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ள அதிலும், இந்திய போர் வெற்றியை பறைசாற்றும் விதமாக, ராணுவ தளவாடங்களை காட்சிக்கு வைத்திருந்ததை கண்டு களித்தோம்.மறுநாள் காலை, ஜோத்பூரில் இருந்து மும்பை வழியாக, சென்னை திரும்புவதற்கு, மும்பை விமானத்தில் ஏறி அமர்ந்தோம். விமானம் பறக்கத் துவங்கியது; கீழே குனிந்து பார்த்தேன்... பண்பாடும், கலை அம்சமும் கொண்ட அந்த வீரம் நிறைந்த பூமி, அழகிய கோட்டைகளுடன் அமைதியாக காட்சியளித்தது. மனமில்லாமல், மானசீகமாக அதனிடம் விடைபெற்றேன்! ராஜஸ்தான் மாநில 'ஹைலைட்'ராஜஸ்தான் மாநிலம், 3.42 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. 33 மாவட்டங்கள் உள்ளன. மாநிலத்தில் 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், ௭ கோடி பேர் இருந்தனர். 2017ன் கணக்கின்படி, 7.5 கோடியாக உயர்ந்துள்ளது.கோடையில், ௪௯ செல்ஷியஸுக்கு வெப்பம் வீசும். மாநிலத்தின் தெற்கு - தென் கிழக்கு பகுதியில் மட்டுமே ஓரளவு மழை பொழிவு இருக்கும். ராஜஸ்தானில் தற்போது வசுந்தரராஜு என்ற பெண் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இவர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்! — முற்றும்எம்.ஆறுமுகம்