உள்ளூர் செய்திகள்

படிப்பினை!

'கொஞ்சம் யோசனை செய்யப்பா... யோசிச்சா, நல்ல வழி பொறக்கும்... அப்புறம் பாரு, எங்கியோ போயிடுவ...' என, அறிவுரை சொல்லக் கேட்டிருப்போம். சிந்தித்தல்! ஆம்... சற்று பொறுமையாகச் சிந்தித்தால், நல்ல வழி பிறக்கும்; வாழ்வும் உயரும்.தேவகிரி என்னும் நகரை, மகாதேவர் என்பவர் அரசாண்டு வந்தார். அவருடைய சபையில், போமதேவ் என்ற பண்டிதர் இருந்தார். அந்தப் பண்டிதர் எழுதிய, 'முக்த போதம்' என்னும் இலக்கண நுால் மிகவும் புகழ் பெற்றது; 'மிகச் சிறந்த அறிவாளி; மகா வித்வான்...' என்று பலரும் அவரைப் பாராட்டினர்.அந்த பாராட்டும், புகழும், உயர்வும், ஏதோ ஒரே நாளில் கிடைத்து விடவில்லை. போமதேவ், சிறுவனாக இருந்தபோது, திறமையற்றவராகவே இருந்தார். குருகுலத்தில் அவரை சேர்த்தபோது, அவருக்குப் படிப்பு ஏறவேயில்லை. அதிலும், இலக்கணம் என்றால், எட்டிக்காயாகக் கசந்தது அவருக்கு.படிப்பு ஏறவில்லை என்றதும், உடன் படித்த மாணவர்களே கேலி பேசினர். போமதேவின் மனம் உடைந்தது, 'ப்ச்... இப்படியாகி விட்டதே...' என்று யோசனையில் ஆழ்ந்தவர், குருகுலத்தில் இருந்து ஓடி வந்து விட்டார். களைப்பின் காரணமாக, வழியில், ஒரு கிராமத்தில் இருந்த கிணற்றின் அருகில் தங்கினார். பெண்கள் பலர், கிணற்றிலிருந்து, குடத்தில் நீர் இழுத்துக் கொண்டிருந்தனர். போமதேவின் பார்வை, அப்பெண்கள் பக்கம் திரும்பியது. பெண்கள் தண்ணீர் குடத்தை இழுக்கும்போது, கிணற்றின் முகப்பில் கயிறு பட்டு பட்டு, முகப்பில் இருந்த பாறாங்கல் தேய்ந்து குழி விழுந்திருந்தது. 'கயிறு மீண்டும் மீண்டும் உரசியதின் காரணமாகவே, முகப்பில் இருந்த பாறாங்கல்லில் கோடு விழுந்து, அது தேய்ந்து இருக்கிறது...' என்பதை, அவர் புரிந்து கொண்டார். மேலும், சற்று ஊன்றிக் கவனித்தார்... கிணற்றின் மேடையில் இருந்த மற்றொரு பாறாங்கல்லின் மீது, காலி குடத்தை வைத்து அதில் நீர் ஊற்றி, நிறைந்ததும், துாக்கிக்கொண்டு போவதும் போமதேவின் பார்வையில் பட்டது. மீண்டும் மீண்டும், குடத்தை ஒரே இடத்தில் வைத்து எடுத்ததால், அந்த இடத்திலும், சிறு பள்ளம் விழுந்திருந்தது. அதையும் பார்த்தார். அவ்வளவு தான்... சட்டென்று எழுந்து, 'ஒரு சாதாரண கயிறு, மறுபடியும் மறுபடியும் பட்டுத் தேய்வதால், பாறாங்கல்லில் கோடு விழுந்து பள்ளமாக ஆகி இருக்கிறது; குடத்தை மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வைத்து எடுத்ததால், அது வைக்கப்பட்ட பாறாங்கல்லில் குழி விழுந்திருக்கிறது. 'பாறாங்கல்லிலேயே இப்படி பதிவு ஏற்பட்டிருக்கிறது என்றால், கல்வியிலேயே கவனத்தைச் செலுத்தி, மீண்டும் மீண்டும் முயன்றால், படிப்பென்ன பதியாமலா போகும்?' என்று எண்ணியபடியே, மீண்டும் ஆசிரமத்தை அடைந்தார்.அப்புறமென்ன... முயற்சி திருவினை ஆக்கும் என்பது உண்மையானது. போமதேவ், தலைசிறந்த கல்விமானாக ஆனார். பலரும் புகழும், 'முக்த போதம்' எனும் இலக்கண நுாலைப் படைத்தார். உலகம் முழுவதும், நாம் காணும் ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு படிப்பினை உள்ளது. உணர்ந்து, உள்ளத்தில் ஏற்று செயல்படுத்தினால், உயர்வு தானாக வரும். அதைத் தடுக்க, யாராலும் முடியாது.சந்தேகமே வேண்டாம்... நல்ல படிப்பினைகளை ஏற்போம்; நாமும் உயர்வோம்!- பி.என்.பரசுராமன் அறிவோம் ஆன்மிகம்!சுவாமிக்கு படையல் செய்கின்றனரே... கடவுள் சாப்பிடுகிறாரா?படையல் செய்வது, கடவுள் சாப்பிடுவதற்காக அல்ல. கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக தான். இவை கிடைக்க கருணை செய்த இறைவனை மறவாமல், இறைவன் நினைவோடு சாப்பிடுவதற்காக தான் படையல் செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !