தர்மம் தழைக்கட்டும்!
சம்பாதிப்பது முக்கியமல்ல; அது, பிறருக்கும் பயன்பட வேண்டும். அதற்கு தேவை மனம். பணம் இருப்போருக்கு மனமிருப்பதில்லை; மனம் இருந்தால் பணமிருப்பதில்லை. இந்த இரண்டும், மனிதனுக்கு வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை விளக்குவதே அட்சய திரிதியை நன்னாள்.சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் எனும், சிவன், திருமால், சக்தி, விநாயகர், முருகன் மற்றும் சூரியன் வழிபாட்டு மதங்களை ஒன்றிணைத்து, 'சனாதன தர்மம்' எனும் இந்து மதமாக இணைத்த பெருமைக்குரியவர், ஆதி சங்கரர். இவரது குலதெய்வம், எர்ணாகுளம் அருகிலுள்ள, காலடியில் வீற்றிருக்கும், திருக்காலடியப்பன்!இங்கே, திருக்காலடியப்பன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார், கண்ணன். இங்குள்ள, மூன்றரை அடி உயர உன்னி கிருஷ்ணன் விக்ரகம், 'அஞ்சனா' எனும் கல்லால் ஆனது; இக்கல்லில் இரும்பு மற்றும் தாமிரம் கலந்திருப்பதால் சக்தி அதிகம். குருவாயூர் கண்ணன் விக்ரகமும், அஞ்சனா கல்லில் உருவானது தான்.காலடியில் வசித்த சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின் புதல்வர் ஆதிசங்கரர். இவரது மூன்று வயதில், தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன், ஏழு வயதிற்குள் வேதங்களை படித்து முடித்த சங்கரர், பின், துறவு மேற்கொண்டார்.ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், மறுநாள் துவாதசி திதியில், யாசகம் வேண்டி, அயாசகன் என்ற ஏழையின் வீட்டு வாசலில் நின்று, 'பவதி பிட்சாம் தேஹி...' என்றார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை, வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், தன் கணவருக்காக வைத்திருந்த, காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள். இதைக் கண்ட சங்கரரின் கண்கள் குளமாகின.'மகாலட்சுமி தாயே... பிறர் பசியை போக்க நினைத்து, தன் கணவருக்காக வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்த இவரைப் போன்றவர்களிடம் செல்வம் இருந்தால், உலகத்தின் வறுமை நீங்கும்; தர்மம் தழைக்கும். இவளுக்கு போதுமான செல்வம் கொடு...' என வேண்டி, கனகதாரா (தங்கமழை) ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்தோத்திரம் முடிந்ததும், அவள் வீட்டில், தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.இக்கோவிலில், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், நமஸ்கார மண்ட பத்திலுள்ள, 'வார்ப்பு' எனும் பாத்திரத்தில் இருக்கும் சந்தான கிருஷ்ணன் மீது, குன்னி முத்து எனும் ஒரு வகை சிவப்பு கொட்டையால் அபிஷேகம் செய்து, வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையை, சன்னிதி படிக்கட்டில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். அட்சய திரிதியை அன்று, இங்குள்ள மகாலட்சுமிக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான நெல்லிக்கனி அபிஷேகம் நடைபெறும்.சம்பாதிக்கிற பொருளை, தனக்கு மட்டும் இல்லாமல், தேவைப்படுவோருக்கு கொடுப்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தால் செல்வவளம் பெருகும் என்பதே அட்சய திரிதியை உணர்த்தும் செய்தி.தி.செல்லப்பா