உள்ளூர் செய்திகள்

தானம் செய்வோம்!

'நல்லதே நினை... நன்றாக இருப்பாய்...' என்பது, முன்னோர் வாக்கு. வசு தேவரும், தேவகியும் சிறையில் இருந்தபோது, அவதரித்தார், பகவான் கண்ணன். சிறைச்சாலையில் இருப்பவர் தானம் செய்ய முடியாதல்லவா... அதனால், மனதாலேயே அளவில்லாத பசு மாடுகளை, தானம் அளித்தார், வசு தேவர்.பாகவதம் கூறும் வரலாறு இது:'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது, அவ்வையார் வாக்கு. இவ்வாறு நல்லதே நினைத்த, மனதாலேயே தானம் கொடுத்த, நல்லவர் ஒருவரைப் பற்றிய வரலாறு இது: அளவில்லாத புண்ணியம் செய்த, அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி காலம் நெருங்கியது. எமதர்மர், தன் தூதர்களை அழைத்து, 'அந்த அரசர், மிகுந்த புண்ணியசாலி. தகுந்த மரியாதைகளுடன் சொர்க்கத்துக்கு அழைத்து வாருங்கள். ஆனால், அவர் அறியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டார்.'அதனால், அவரை அழைத்து வரும்போது, நரகத்தின் வழியாக அழைத்து வாருங்கள்... ஒரு நொடி, அவர் நரகத்தை பார்த்தால் போதும்...' என்றார். அதன்படியே, அரசரை, நரகத்தின் வழியே அழைத்து வந்தனர், எம தூதர்கள். அங்கே, நரகத்தின் கொடுமை தாங்காமல், பயங்கரமாக அலறியபடி இருந்தனர்.அரசர் அந்த இடத்தை நெருங்கியதும், நரகவாசிகளின் கூக்குரல் அப்படியே அடங்கிப்போனது.அதை அறிந்த அரசர், 'என்ன இது... ஏன் இப்படி?' என, கேட்டார். 'இவர்கள் எல்லாரும், பெரும் பாவம் செய்தவர்கள். அதற்கான தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தம ஆத்மாவான உங்களைக் கண்டதும், நரகத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை சற்று தணிந்தது. அதனால் தான், கூக்குரலை நிறுத்தி விட்டனர்...' என, பதில் கூறினர், எம தூதர்கள்.நரகவாசிகளோ, 'புண்ணியாத்மாவே... அரசரே... உங்கள் பார்வை பட்டதால் தான், நரகத்தின் கொதிப்பு அடங்கியது. நீங்கள் இங்கேயே இருங்கள்...' என்று வேண்டினர்.'அடியேனால் உங்களுக்கு நல்லது நடக்குமென்றால், சொர்க்கம் வேண்டாம். இங்கேயே இருக்கிறேன்...' என்று சொன்னது மட்டுமல்ல, அங்கேயே இருந்து விட்டார், அரசர். எமதர்மருக்கு தகவல் போனது. உடனே, தேவேந்திரனையும் அழைத்து, அரசர் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார். அவர்களைப் பார்த்ததும், வணங்கிய அரசர், 'தேவ புருஷர்களே... நரகவாசிகளுக்காக, அடியேன் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் செய்கிறேன். தயவுசெய்து, இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்...' என, வேண்டினார்.அதே வினாடியில், ஏராளமான தெய்வ விமானங்கள் அங்கு வந்தன. அவற்றில் ஏறி நரகவாசிகள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஆனால், அரசர் மட்டும் அங்கேயே இருந்தார். அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன். கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மனதாலாவது தானம் செய்யலாமே. அந்த எண்ணமே நமக்கு நல்லதை கொடுக்கும். நேரிடையாக, 10 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு வளம் சேரும்; கண்டிப்பாக உயர்வோம்.பி.என்.பரசுராமன் அறிவோம் ஆன்மிகம்!இரவில் செய்யக் கூடாதது, எது?இரவில், துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியில் கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. பூமியை கீறுதல், வெட்டுதல், உழுதல் கூடாது. ரகசியமான விஷயத்தை பேசக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !