நதிகளைப் பாதுகாப்போம்!
அக்.,18 - ஐப்பசி விஷுமழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார். குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.இந்தப் புராணக்கதையை படிப்பவர்கள், உலகம் உருண்டை அது எப்படி உயரும், தாழும் என்ற பிரச்னைக்குள் போகக்கூடாது. இக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.நதிகளின் புனிதத்தை இதுபோன்ற புராணக்கதைகளுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தால் தான், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.தி.செல்லப்பா