நீர் நிலைகளை பாதுகாப்போம்!
ஏப்., 4 - தண்டியடிகள் குருபூஜைகடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள், வெள்ளத்தில் திக்குமுக்காடின. இப்போது, கோடை வந்து விட்டது. பல இடங்களிலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், தண்ணீரை முறையாக சேமித்து வைக்காததே!இதனால் தான், மழைநீரை சேமித்து வைக்க கோவில்கள் முன், குளங்களை வெட்டினர் நம் முன்னோர். மழை நீரை சேகரித்ததால், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது. கோவில் குளங்களை ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் பார்த்தனர். அவற்றைப் பாதுகாக்கவே, அக்குளத்து நீரை சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தியதுடன், அதில் குளித்தால், புண்ணியம் என்றனர்.ஆனால், இன்று கோவில் குளங்கள் மற்றும் கோவில்கள் முன் ஓடும் ஆறுகளின் நிலை என்ன? அவை, வெறும் பரிகார இடங்களாக மாறி விட்டன. சாஸ்திரங்களை புரிந்து கொள்ளாத மடமையாளர்கள், ஆறுகளிலும், குளங்களிலும் தாங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளைக் கழற்றிப் போடுவது, பாலிதீன் பைகளை வீசுவது, உணவுக் கழிவுகளைக் கொட்டுவது என்று, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றனர்.தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில், பரிகாரம் என்ற பெயரில், ஆடைகள் அவிழ்த்து போடப்படுகின்றன. இவை, ஒவ்வொரு மாதமும் பல, 'டன்' சேருகிறது. விழிப்புணர்வு பலகைகள் வைத்தும், சாஸ்திர மடமையாளர்களால், நதி மாசுபடுகிறது.அதே போன்று, புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பரிகாரம் என்ற பெயரில், ஆடைகள் கொட்டப்படுகின்றன. ஆனால், நம் முன்னோர்கள் கோவில் குளங்களையும், ஆறுகளையும் சுத்தமாக வைத்துக் கொண்டதுடன், அதை பாதுகாக்கவும் செய்தனர்.திருவாரூரில் வசித்தவர் தண்டியடிகள்; சிவபக்தரான அவருக்கு பார்வை இல்லை. இருப்பினும், தியாகராஜர் கோவில் கமலாலயம் குளத்தை அகலப்படுத்த முடிவெடுத்து, குளத்தில் கம்புகளை ஊன்றி, அதில் கயிறு கட்டி, அதை பிடித்தவாறே, மண்ணை வெட்டி கரையில் கொண்டு வந்து கொட்டினார். அதைக் கண்ட சமணர்கள், 'குளத்தை ஆழப்படுத்தும்போது மண்ணில் வசிக்கும் உயிர்கள் இறக்க நேரிடும்...' என்று கூறி, தடுத்தனர்.'கல்லுக்குள் இருக்கும் தேரையையும், கருப்பையில் இருக்கும் கருவையும் காக்கும் எம்பெருமான் இவ்வுயிர்களையும் காப்பார்...' எனக் கூறினார் தண்டியடிகள். ஆனாலும் அவர்கள், அவரை, 'பார்வையற்றவர்...' என்று கூறி எள்ளி நகையாட, 'என் சிவன், சக்திமிக்கவர்; நிச்சயம் எனக்கு பார்வை அளிப்பார்; இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்...' என்று கூற, அவ்வாறு நிகழ்ந்தால், தாங்கள் ஊரை விட்டு வெளியேறுவதாக சவால் விட்டனர் சமணர்கள்.தண்டியடிகளுக்கு பார்வை கிடைக்க அருள்பாலித்தார் சிவபெருமான். சமணர்கள் வெளியேறினர். சோழ ராஜாவின் உதவியுடன், இன்று நாம் காணும் மிகப்பெரிய கமலாலயக் குளத்தை உருவாக்கினார் தண்டியடிகள்.அவருடைய குருபூஜை, பங்குனி சதயம் நட்சத்திரத்தில் வருகிறது.கண் தெரியாத ஒருவர், தன் ஊரிலுள்ள நீர்நிலையைப் பாதுகாத்தார். ஆனால், நாம் கண் இருந்தும் குருடர்களாய், ஆறு, குளங்களை மாசுபடுத்துகிறோம். இனியேனும், நம் ஊர் நீர்நிலைகளைப் பாதுகாக்க முயற்சிப்போம்!தி.செல்லப்பா