கிராமத்து திருவிழா காண்போம்!
மார்ச்-28, தாயமங்கலம் முத்துமாரியம்மன் விழா ஆரம்பம்தென் மாவட்டங்களில் நடக்கும் கிராமக்கோவில் திருவிழாக்களைக் காண, கண்கோடி வேண்டும். அங்கே நடக்கும் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு அர்த்தம் உண்டு. மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வருதல், கண்மலர் காணிக்கையாக்குதல், பொங்கலிடுதல் என எத்தனையோ நேர்ச்சைகளை, பக்தர்கள் பயபக்தியுடன் செய்வர். இதற்காக, 16 முதல், 41 நாட்கள் முன்னதாகவே விரதமிருக்க துவங்கி விடுவர். சில ஊர்களில் விழாவுக்கு ஒரு வாரம் முன், கோவில்களில் கால்நாட்டு என்னும் சடங்கு நடக்கும். மற்றும் சில ஊர்களில், காப்பு கட்டுவர். அதன்பின், பக்தர்கள் தேவையற்ற வெளியூர் பயணத்தை தவிர்த்து விடுவர்.சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை, சமுதாய ஒற்றுமை திருவிழா என்றே கூற வேண்டும். கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற மாவட்ட மக்களும் அம்பாளை தரிசிக்க வருவர்.இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தை இல்லை. அம்மனிடம் தன் குறையைத் தீர்த்து அருளும்படி வேண்டிக் கொள்வார்.ஒருசமயம், மதுரையில் இருந்து ஊர் திரும்பியபோது, வழியில் ஒரு சிறுமி தனியே அழுதபடி இருப்பதை பார்த்தார். அவளை மகளாக வளர்க்க எண்ணி, தன்னுடன் அழைத்து வந்தார். வழியில், குளக்கரையில் குழந்தையை அமர வைத்து, நீராடச் சென்றவர், திரும்பி வந்து பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை.அன்றிரவு, வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு தன் பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணைப் பிடித்து வைத்து, கோவில் எழுப்பினார். பிற்காலத்தில் சிலை வடித்து, பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. அம்பிகைக்கு முத்துமாரியம்மன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அம்பாளை, கன்னி தெய்வமாக கருதுகின்றனர். எனவே, இவளிடம் திருமண வரம் வேண்டி கோரிக்கை வைக்கும் பெண்கள், தாலியை அம்மனின் பாதத்தில் வைத்து வணங்குவர்.மதுரை - ராமேஸ்வரம் சாலையில், மானாமதுரையில் இருந்து பிரியும் சாலையில், 22 கி.மீ., சென்றால் தாயமங்கலத்தை அடையலாம்.அன்னையின் அருள்பெற எங்கிருந்தாலும் வாருங்கள்!தி.செல்லப்பா